உபுண்டுவின் ஹார்டி ஹெரான் வெளியீடு
இரண்டாயிரத்து நான்காம் வருடம் துவக்கப் பட்ட குனு லினக்ஸ் இயங்கு தள திட்டம் உபுண்டு. துவக்கப்பட்ட இச்சில வருடங்களுக்குள் பயனர்களின் மனங் கவரும் இயங்கு தளமாகப் பெயரெடுத்து அகிலமனைத்திலும் பிரபலமாக உருவெடுத்துள்ளதென்றால் அது மிகையாகாது.
தனியுரிம இயங்குதளங்களுக்கு மாற்றாக தொழில்ரீதியிலும் தமது முத்திரையை பதித்து வரும் இயங்கு தளம். வழங்கிகளுக்கு மட்டுமே குனு லினக்ஸ் என்றிருந்த மாயையை தகர்த்தெரிந்து பல்லாயிரக் கணக்கானோரின் மேசைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
தமது நிலைத்தன்மைக்கு குனு லினக்ஸ் உலகில் பெயர் பெற்ற டெபியனை தாயாக கொண்டு உருபெற்றது இதன் மிகப் பெரிய பலம். பல வட்டுகளாக தொகுத்து கொடுக்கப் பட்டு வந்த முறையை உடைத்து, பணிச்சூழல்களுக்கு ஏற்றபடி உபுண்டு குபுண்டு எக்ஸுபுண்டு எனவும் கல்வி (எடுபுண்டு) பல்லூடகம் (ஸ்டூடியோ) போன்ற சிறப்பான நோக்கங்களுக்காகவும் வெவ்வேறு வழங்கல்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இயங்குதளம்.
ஆறு மாத இடைவெளியில் தமது வழங்கல்கள் இருக்கும் படிக்கு அமைத்து வெளியிட்டு வரும் உபுண்டுவின் அடுத்த வாரிசான ஹார்டி ஹெரான் 8.04 இம்மாதம் ஏப்ரல் இருபத்தி நான்காம் தேதி வெளிவர உள்ளது. சோதனைப் பதிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பதிவிறக்கி நிறுவி சோதித்து தாங்களும் உதவலாமே!
இம்மாத இறுதியில் வெளிவருகிறது பெடோரா 9
லினக்ஸ் என்றாலே பலரது நினைவுக்கு வருவது இன்றும் ரெட்ஹாட்தான். குனு லின்க்ஸை வணிக ரீதியாகவும் வெற்றிபெறச் செய்ததில் ரெட்ஹாட்டின் பங்கு மிகப்பெரியது.
அத்தகைய ரெட்ஹாட்டால் ஊக்கமளிக்கப்பட்டு சமூகம் சார்ந்த முறையில் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கும் பிரபலமான குனு லினக்ஸ் இயங்கு தளம் பெடோரா ஆகும்.
சல்பர் என்ற அடைமொழியுடன் வரும் ஏப்ரல் இருபத்தியொன்பதாம் தேதி உலகிற்கு தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளவிருக்கிறது இதன் அடுத்த வெளியீடு.
நிறுவுகையிலேயே வன்பகுப்புகளை பாதிக்காது எஞ்சியுள்ள வெற்றிடங்களை பிரித்தொதுக்கும் வசதி, நான்காவது கே பணிச்சூழல், பயர்பாக்ஸ் உலாவியின் மூன்றாவது வெளியீடு ஆகியன பெடோரா சல்பர் ஏற்க விருக்கும் சிறப்பம்சங்களுள் குறிப்பிடத் தக்கவையாகும்.