நிரல்
குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை.
மென்பொருள்
குறிப்பிட்ட பயனைக் கருத்திற் கொண்டு இயற்றப்படும் நிரட் கோப்புகளின் ஆவணமாக்கத்தோடு கூடிய முறையானத் தொகுப்பு மென்பொருள் ஆகும். மென்பொருட்கள் மூல வடிவிலும் முறையாக ஒடுக்கப்பட்ட இரும வடிவிலும் கிடைக்கும்.
நிரலகம்
மென்பொருள் உருவாக்கத்தின்போது குறிப்பிட்ட பணிகளை செய்ய வல்ல நிரட் துண்டுகளை பல இடங்களிலும் பயன்படுத்த நேரிடும். அங்ஙனம் பல இடங்களிலும் மீண்டும் மீண்டும் இத்தகைய நிரட் துண்டுகளைப் பயன்படுத்தாது அவற்றை மையப்படுத்தி ஒரு இடத்தில் காத்து பின்னர் வேண்டிய விடத்தில் அவற்றை அழைத்து பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இங்ஙனம் மென்பொருள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் நிரட் துண்டுகள் காக்கப்படும் இடத்திற்கு நிரலகம் என்று பெயர். உதாரணத்திற்கு குனு/ லினக்ஸ் இயங்கு தளங்களில் இன்று பரவலாக பயன்படுத்தப் படும் குநோம் பணிச்சூழல் ஜிடிகே எனப்படும் நிரலகத்தினைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
பயன்பாடு
கணினியினை பயன்படுத்துவோருக்குத் தேவையானப் பணிகளைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்படும் மென்பொருட்களுக்கு பயன்பாடுகள் என்று பெயர். செயலிகள் எனவும் இவை வழங்கப் பெறுகின்றன. இணையம் நெடுகே பயணிக்க உதவும் பயர்பாக்ஸ உலாவி, உரையாக்கத்திற்கு பயன்படும் ஓபன்ஆபீஸ் முதலானவை பரவலாக பயன்படுத்தப் படும் பயன்பாடுகளுள் குறிப்பிடத்தக்கவை.
பொதி
குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் மென்பொருட்களை எளிதில் நிறுவிடும் பொருட்டு முன்னரே அவற்றை முறையாக நிறுவத்தக்க ஒரு கோப்பாக தொகுத்து தருவது வழமை. நிறுவத் தயாரான நிலையிற் கிடைக்கும் இத்தகைய மென்பொருட் கோப்புகள் பொதிகள் என வழங்கப்பெறுகின்றன.