கணிமொழி - சித்திரை - ஏப்ரல் 2008

ரெட் ஹாட் பொதி மேலாண்மை

பொதி என்றால் என்ன?

குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் மென்பொருட்களை எளிதில் நிறுவிடும் பொருட்டு முன்னரே அவற்றை முறையாக நிறுவத்தக்க ஒரு கோப்பாக தொகுத்து தருவது வழமை. நிறுவத் தயாரான நிலையிற் கிடைக்கும் இத்தகைய மென்பொருட் கோப்புகள் பொதிகள் என வழங்கப்பெறுகின்றன.

பொதி மேலாளர் (அ) ஆர்பிஎம் என்றால் என்ன?

ரெட் ஹாட் பொதி மேலாளர் (ஆர்பிஎம்) என்பது மென்பொருட்களை நிறுவ, நீக்க, புதுப்பிக் மற்றும் மென்பொருள் பொதிகளை நிர்வகிக்க பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு நிரல் ஆகும்.

குனு லினக்ஸ் மற்றும் ஆர்பிஎம் - ஒரு சுருக்கமான வரலாறு...

வணக்கம்!... இந்த கட்டுரை ரெட் ஹாட் பொதி மேலாளர் (அ) சுருக்கமாக ஆர்பிஎம் பற்றிய தகவல்களை எடுத்துரைக்கும் வண்ணம் எழுதப்படுகிறது. ஆர்பிஎம் பற்றிய வரலாறு குனு லினக்ஸ் உடன் இணைந்திருப்பதால், துணுக்களவு குனு லினக்ஸ் பற்றிய வரலாற்றையும் தெறிந்து கொள்வோம். குனு லினக்ஸ் எல்லா வல்லமைகளையும் கொண்ட யுனிக்ஸ் இயங்குதளத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக கனிணியாக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குனு லினக்ஸை தெரிவுச்செய்ய காரணம் என்னவென்றால், முற்காலத்தில் இன்ட்டெல் நிறுவனத்தின் வன்பொருட்களை அடிப்படையாக கொண்டிருந்த சுயக் தனிக் கணினிகள் விண்டோஸ் இயங்குதளத்தில் சிறைப்பட்டு கிடந்தன. அந்த நேரத்தில் அதை முழுமையாக உருமாற்றி ஒரே நேரத்தில பல வேலைகளை செய்யவல்ல, வலையியல் தன்மையுடைய, சுய வேலைப்பாட்டுத் தளமாக மாற்றியமைத்து தந்தது குனு லினக்ஸ் மட்டுமே.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சிறிது நேரத்தை ஒதுக்கி மென்பொருளை பதிவிறக்கி, நிறுவி செயற்படும்படிச் செய்வதே. தற்போதெல்லாம் நீங்கள் மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை, பல நிறுவனங்கள் வட்டு தட்டில் குனு லினக்ஸ் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மென்பொருட்களையும் உருவாக்கியளிக்கின்றன. ஒவ்வொரு வழங்கலும் வெவ்வேறு விதமாக உருமாறுகிறது. "நீங்கள் வாங்கியதற்கு என்ன விலை கொடுப்பீங்க” என்ற வாக்கியம் குனு லினக்ஸ் இயங்குதளத்துக்கு பொருத்தமற்றதாகும். ஏனென்றால் குனு லினக்ஸ் கட்டற்று இலவசமாக வழங்கப்பெரும் மென்பொருட்களுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒரு வழங்கல் "ரெட் ஹாட் லினக்ஸ்” என்ற பெயரில் வெளிவந்தது. இதை வெளியிட்ட நிறுவனத்தின் பெயரும் ரெட் ஹாட், இது குனு லினக்ஸின் விசித்திரமான வழங்கலாகும். ஒவ்வொரு இயங்குதள வழங்கல் நிறுவனமும் மென்பொருட்களை நிறுவ ஒவ்வொரு முறையை கையாண்டிருந்தன. ஆனால் ரெட் ஹாட் நிறுவனம் அதை வித்தியாசமாக கையாண்டிருந்தது.

ரெட் ஹாட் லினக்ஸ் வழங்கியை உருவாக்கிய நிபுணர்கள் தங்கள் வாடிக்கைளார்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் அது என்னவென்றால், ரெட் ஹாட் லினக்ஸ் நிறுவியப் பின்னரும், வாடிக்கையாளர்களே அதில் பொதி மேலாண்மை செய்வது. இதேப் போன்ற திறமையை(பொதி மேலாண்மை) சில தனியார் யுனிக்ஸ் நிறுவனங்கள் வைத்திருந்த போதிலும், அதில் ஒரு சில குனு லினக்ஸ் வழங்கி நிறுவனங்களே ரெட் ஹாட் லினக்ஸை ஒத்தமைந்த பொதி மேலாண்மையை கொண்டிருந்தன. அந்த காலக்கட்டத்தில் மிகவும் சிறப்பான பொதி மேலாண்மை வகுத்து தந்தது ரெட் ஹாட் லினக்ஸ் மட்டுமே (காலத்தினாற் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது).

காலங்கள் செல்ல செல்ல ரெட் ஹாட் லினக்ஸ் மிகவும் பிரபலமடைந்துவிட்டது, இரண்டே வருடங்களில் சிலாக்வேர்(இதற்கு முன் பிரபலமடைந்த) லினக்ஸை முந்திவிட்டது. இந்த வெற்றிக்கு கண்டிப்பாக சில காரணங்கள் இருக்க வேண்டும், அதற்கு மிக முக்கியமான காரணம் ஆர்பிஎம் (ரெட் ஹாட் பொதி மேலாளர்) ஆகும்.

கட்டற்ற மென்பொருள் உலகத்தை சுற்றிப்பார்த்தால் அது நமக்கு பின்வரும் கருத்தை தெளிவுப்படுத்துகிறது, : “ எங்க ஓசில ஒரு நல்ல தீர்வு கிடைக்குதோ அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்". அதுப் போலவே ஆர்பிஎமும் குனுவின் கட்டற்ற மென்பொருள் உரிமத்தின்(ஜிபிஎல்) கீழ் வெளியிடப்பட்டுள்ளது. எனவே யாரும் ஆர்பிஎம் யின் மேல் சொந்தம் கொண்டாட முடியாது, அது பில்கேட்ஸா இருந்தாலும் கூட.

தற்போது, ஆர்பிஎம் ஆனது பெரும்பான்மையான தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு பயன்பாடுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த நிறுவனங்கள் தங்களது பயன்பாடுகளை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் சென்றடைய ஆர்பிஎம் என்பதை ஒரு கருவியாக கருதுகிறார்கள்.

தனியார் நிறுவனங்கள் யுனிக்ஸ் கணினிகளில் ஆர்பிஎம் ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள், அதுமட்டுமல்ல "டிஇசி ன் டிஜிட்டல் யுனிக்ஸ், ஐபிஎம் ன் ஏஐஎக்ஸ் மற்றும் சிலிக்கான் கிராபிக்ஸின் ஐரிக்ஸ்” போன்ற மிகப்பெரிய நிறுவனங்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. ஏன்? என்ன? காரணம் என்றால் ஆர்பிஎம் உள்ள "நிறுவல், புதுப்பித்தல், நீக்கல்" போன்ற பொதி மேலாண்மை பணிகளை மிகவும் எளிமையாகிவிட்டது தான். இப்படி அனைவருமாக ஆர்பிஎம் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் "நீங்கள் பயன்படுத்துவீங்களா?”

கட்டுரையின் பாகங்கள்

இந்தக் கட்டுரை இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது. முதல் பாகத்தில் ஆர்பிஎம் பற்றி அறிய விழைவோர்க்கு மிகவும் எளிய நடையில் எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்க இருக்கிறது. தற்போதுள்ள லினக்ஸ் சூழலில், யார் வேண்டுமானாலும், புதிய லினக்ஸ் பயனாளர்களாக இருந்தாலும் கூட எளிமையாக படித்த தெறிந்துக்கொள்ளும் வகையில் எழுதப்பெறுகிறது. கீழ்க்கண்ட கட்டளை

$rpm –help #ஆர்பிஎம் பற்றிய அறிய

பிரமிக்கும் அளவிற்கு மாயக்கலை ஒன்றுமில்லை, சிரமமில்லாமல் ஆர்பிஎம் பற்றிய அனைத்தையும் கற்றுத்தருகிறோம். ஆர்பிஎம் என்பது பொதி மேலாளண்மையை கட்டளை வரி மூலம் செய்யவல்லது.

இரண்டாம் பாகம், ஆர்பிஎம் பற்றிய உட்கூர்ந்த நுணுக்கங்களையும், அதைக்கொண்டு எப்படி பொதியாக்கம் செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். மென்பொருள் பொறியியற்துறையில் - லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ் கணினிகளில் பொதியை உருவாக்க சில அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. அவைகளாவன 'இயங்குதளம் பற்றிய அடிப்படைகள், அதிலுள்ள கருவிகள்(கட்டளைகள்), மற்றும் அடிப்படை நிரலாக்கம் விளக்கங்கள் ' என சில அடிப்படை அறிவுத்தேவைப்படுகியறது. இந்த பாகத்தை படிப்பவர்களுக்கு அவசியம் லினக்ஸ் பற்றிய அடிப்படை தெறிந்திருக்கும் என்ற நோக்கத்தில் எழுதப்படுகிறது.

முதல் பாகம்

ஆர்பிஎம் மற்றும் அதன் பயனாளார்கள் - ஆர்பிஎம் ஐ பயன்படுத்தி உங்கள் கணினியில் எப்படி பொதி மேலாளண்மை செய்யலாம்.

  • பொதி மேலாளண்மை- ஓர் அறிமுகம்
  • ஆர்பிஎம் ஐ பயன்படுத்தி பொதிகளை நிறுவுதல்
  • ஆர்பிஎம் ஐ பயன்படுத்தி பொதிகளை நீக்குதல்
  • ஆர்பிஎம் ஐ பயன்படுத்தி பொதிகளை புதுப்பித்தல்
  • பொதிகளை பற்றிய தகவல்களை பெறுதல்
  • ஆர்பிஎம் ஐ பயன்படுத்தி நிறுவிய பொதிகளை சரிபார்த்தல்
  • ஆர்பிஎம் ஐ பயன்படுத்தி பொதியின் கோப்புகளை சரிபார்த்தல்
  • ஆர்பிஎம் பற்றிய விட்டுப்பொன தகவல்கள்

இரண்டாம் பாகம்

ஆர்பிஎம் மற்றும் பொதியாக்கம் செய்பவர்கள் - ஆர்பிஎம் ஐ பயன்படுத்தி உங்கள் மென்பொருட்களை எப்படி ஆர்பிஎம் ஆக வழங்குவது.

  • ஆர்பிஎம் இன் அடிப்படை தத்துவம்
  • ஆர்பிஎம் ஐ உருவாக்க தேவையான அடிப்படை விளக்கங்கள்
  • பொதிகளை உருவாக்குதல் - ஒரு எடுத்துகாட்டுடன்
  • பொதியாக்க கட்டளைகள் பற்றிய சறிய அலசல்
  • பொதியாக்க கோப்பின் உள்ளமைப்பு
  • பொதிசார்ந்த தகவல்களை சேர்த்தல்
  • இடமாறி நிறுவக்கூடிய பொதியை உருவாக்கல்
  • பொதியை எங்கு வேண்டுமானாலும் உருவாக்குமுறை
  • பிஜிபி கையொப்பங்களை பொதியுடன் சேர்த்தல்
  • துணை பொதிகளை உருவாக்குதல்
  • பலதரப்பட்ட வன்தள மற்றும் இயங்குதளங்களுக்கு ஏற்றவாறு பொதிகளை உருவாக்குதல் பொதி உருவாக்கம் - ஒரு நேரடி பார்வை

இயற்றியவர் பற்றி: தங்கமணி அருண் - சென்னை ஐஐடியில் கணினி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு குனு லினக்ஸ் இயங்கு தளத்தின் மேல் காதலாம்.