திறந்த ஆவண வடிவம் - ஒரு அறிமுகம்
உரையாக்கம், அளிக்கைகள், விரிதாட்கள் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலுவலகப் பயன்பாடுகளுக்கான ஒரு வடிவமென திறந்த ஆவண வடிவத்தைக் கொள்ளலாம். ஓபன்ஆபீஸ், கேஆபீஸ், அபிவோர்டு முதலிய பயன்பாடுகள் இவ்வடிவத்தைப் பயன்படுத்துகின்றன.
ஐஎஸ்ஓ என பிரபலமாக அறியப்படும் சர்வதேச தர அமைப்பின் அங்கீகாரம் பெற்றத் தர வடிவமாவும் இது. ஆகையால் படைப்புரிமம் உள்ளிட்ட ஐயங்களேதுமின்றி இவ்வடிவத்தை ஆதரிக்கும் பயன்பாடுகளை யார்வேண்டுமாயினும் இயற்றலாம்.
குனு லினக்ஸ், பிஎஸ்டி, விண்டோஸ், மேகின்டோஷ் என அனைத்து வகையான இயங்கு தளங்களுக்கும் இவ் ஆவண வடிவை ஆதரிக்கும் பயன்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வடிவத்தை ஐபிஎம், சன் மைக்ரோ சிஸ்டமஸ், ஆப்பிள், கூகிள், விகிமீடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதரிக்கின்றன.
திறந்த ஆவண வடிவத்திற்கு எதிர்ப்பு
திறந்த ஆவண வடிவத்தின் கொள்கைகளுக்கு கிடைக்கும் ஆதரவு தங்களின் வீழ்ச்சிக்கு வித்திடும் என நினைக்கும் தனியுரிம மென்பொருள் நிறுவனங்கள் இதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தமது ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் தனை நிலைநாட்டிட திறந்த ஆவண வடிவத்திற்கெதிராக தாஜா செய்து வருகிறது.
ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் சிக்கல்
திறந்த ஆவண வடிவத்தைப் போன்று ஆவணங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வைக்கும் மற்றொரு ஆவண வடிவம் ஓபன் எக்ஸ் எம் எல். நன்கு நிலைத்த கட்டற்ற திறந்த ஆவண வடிவத்தை தடுத்து தங்களின் கட்டுக்குட்பட்ட ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் வடிவத்தை முன்னிருத்த மைக்ரோசாப்ட் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இவ் ஆவண வடிவம் தனியொரு நிறுவனத்திடமிருந்து வெளிவரும் மென்பொருளால் மட்டும் ஆதரிக்கப்படுவதாய் உள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் ஆபீஸின் வழுக்கள் துவங்கி அதன் வரலாற்று அம்சங்கள் வரை அத்தனையையும் சிரமேற்கொள்கிறது இவ்வடிவம்.
இவ்வடிவத்திற்கான வரையறை ஆறாயிரம் பக்கத்திற்கு அதிகமானதாகவும், மற்ற மென்பொருட்கள் ஏற்றொழுகுதற்கு கடினமானதாகவும் திகழ்கிறது.
ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் புறக்கணிப்பு இயக்கம்
ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் தனை புறக்கணித்திடும் பொருட்டும் திறந்த ஆவண வடிவங்களை ஆதரித்திடும் பொருட்டும் உலகளாவிய அளவில் இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. ஆவண சுதந்தரம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் பொருட்டு மார்ச் மாதம் இருபத்தியாறாம் தேதி ஆவண சுதந்தர தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் க்கு எதிராக இந்தியா வாக்களிப்பு
இதனை சர்வதேச தகுதரமாக்க கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் மேற்கொண்ட முயற்சிகள், சர்வதேச தகுதர அமைப்பில் தோல்வியினை சந்தித்தன. இதில் எண்பத்து ஏழு உறுப்பு நாடுகள் கலந்து கொண்டு வாக்களித்திருந்தன. இந்தியா, கனடா, பிரேசில், க்யூபா, சீனா உள்ளிட்ட பத்து நாடுகள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்திருந்தன.
ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் வடிவத்திற்கு எதிராக வாக்களித்திருந்ததை மாற்ற வேண்டுமா என இந்திய தகுதர நிர்ணயத் துறை கடந்த மாதம் தமது அங்கத்தினர்களிடையே வாக்குப்பதிவு நடத்தியது. வேண்டாம் என பெரும்பான்மையானோர் வாக்களித்தமையால் இவ்விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டது.
இந்திய தகுதர நிர்ணய அமைப்பின், இதற்கான இருபத்து இரண்டு உறுப்பினர்களில், இம்முடிவிற்கு ஆதரவாக நேஷனல் இன்பொர்மேடிக்ஸ் சென்டர், சிடாக், கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆப் இந்தியா, தகவற் தொழில்நுட்பத் துறை, ஐபிஎம், ஐஐஎம்-அகமதாபாத், இந்திய அறிவியற் கழகம், ஐஐடி-தில்லி, ஐஐடி-மும்பய், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ரெட்ஹாட், தகுதர சோதனை மற்றும் தர உத்தரவாத சான்றிற்கான அமைப்பு மற்றும் இந்திய புள்ளியியற் துறை-கொல்கொத்தா ஆகியன வாக்களித்தன.
முடிவை மாற்ற வேண்டும் என மைக்ரோசாப்ட், இன்போசிஸ், நாஸ்காம் மற்றும் விப்ரோ (எதிர் நிலையிலிருந்து நடுநிலைக்கு மாற) வாக்களித்தன. உற்பத்தியாளர்களுக்கான இந்திய கூட்டமைப்பு நடுநிலை வகித்தது. ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பிற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஆயினும் இம்மாதம் நடைபெற்ற முப்பத்து இரண்டு முக்கிய உறுப்பு நாடுகளின் வாக்களிப்பில் ஆபிஸ் ஓபன் எக்ஸ் எம் எல் தகு தரமாக மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் ஆதரித்துள்ளமையால் அது சர்வதேச தகுதரமாகும் ஆபத்து உருவாகியுள்ளது.
வேண்டுகோள்
இத்தகைய சூழ்நிலையில் ஓபன்ஆபீஸ், கேஆபீஸ், அபிவோர்டு போன்ற பயன்பாடுகளை தாங்களாக முன்வந்து தங்களது பணிகளிலும் பணியிடங்களிலும் பயன்படுத்தி பிரபலப் படுத்திட உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இச் செய்தியினை பறைசாற்றி பிறரும் கட்டற்ற உரையாக்க பயன்பாடுகளை பயன்படுத்திட ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.