கணிமொழி - வைகாசி - மே 2008

அக்கம் பக்கம்...

சந்தைக்கு வந்தது நியோ பிரிரன்னர் - உலகின் கட்டற்ற உலா உரையாடி

அது சரி தம்பி! கணினில மட்டுந்தானா மென்பொருள் இருக்கு! அவனவன் ஊரைச்சுற்றி வரும்போது உடன் ஒட்டிகிட்டு திரியும் உரையாடிகளும் தான் மென்பொருட்களால் இயக்கப் படுகின்றன. அதுல பயன்படுத்தற மென்பொருளும் கட்டற்று இருக்க வேண்டாமா என ஏங்கியோரின் ஆசைகளை நனவாக்கும் விதமாக இந்தியச் சந்தையை இம்மாத இறுதியில் தட்ட விருக்கிறது நியோ பிரிரன்னர்! முன்பதிவு துவங்கி பல வாரங்கள் ஆச்சுங்கோ!

பாரதத்தில் நியோ பிரிரன்னருடைய அதிகார பூர்வ விற்பனைப் பிரதிநிதியாக இடாசிஸ்டம்ஸ் நிறுவனம் செயற்படுகிறது. இவ்வுலா உரையாடியின் தற்போதைய மதிப்பு ரூ 20000/- ஆகும். வரிகள், தங்கள் முகவரிக்கே கொண்டு சேர்த்தல், முப்பது நாட்களில் திரும்பப் பெறும் வாய்ப்பு, ஒரு வருட உத்தரவாதம் என அனைத்தும் இத்தொகைக்குள் அடக்கம். மே மாத இறுதியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்களால் பிரிரன்னரை அனுப்பத் துவங்க இயலும் என இந்நிறுவனத்தின் பிரதிநிதி ரக்ஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கொண்டு விவரங்கள் அறிய sales@idasystems.net என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

விடுதலையை முழுமையாக பேணும் "குனுசென்ஸ் - டெல்டா" இயங்குதளம் வெளியிடப்பட்டது

என்னதான் லினக்ஸ் இயங்குதளங்கள் விடுதலை தருதுன்னு சொன்னாலும் அவற்றுள் பெரும்பாலானவை, வர்த்தக நோக்கங்களுக்காக பூரண விடுதலையை கொஞ்சம் தள்ளிப் போடத்தானே செய்யுது என சுணங்கும் நெஞ்சங்களை நெகிழ வைக்க வெளியிடப்பட்டுள்ள இயங்குதளம் குனுசென்ஸ். இதன் புதிய வெளியீடு மே ஒன்றாம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும் வர்த்தக காரணங்களுக்காக தனியாக ரெஸ்டிரிக்டட் (restricted), நான்-பிரீ (non-free) போன்று பெயரிட்டு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை வலியுறுத்தும் நான்கு சுதந்தரங்களுடன் ஒத்துப் போகாத மென்பொருட்களையும் இன்றைய பிரபல குனு லினக்ஸ் இயங்கு தளங்கள் தரத்தான் செய்கின்றன. ஒரு செயலைச் செய்யும் மென்பொருள் கட்டற்று இருந்தால் தான் பயன்படுத்துவேன். இல்லைனா அச்செயலை செய்யும் கட்டற்ற மென்பொருளை உருவாக்கவே விழைவேன் எனக் கொள்கைப் பிடிப்போடு இருக்கும் ஜீவிகளால் அத்தகையோருக்காக உருவாக்கப் பட்ட இயங்கு தளம் இது.

உபுண்டுவின் அதிக கால ஆதரவு பதிப்பான ஹார்டி ஹெரானை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ்வியங்குதளம், மென்பொருட்கள் வழங்கப்படும் உரிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவை கட்டற்ற மென்பொருளாக இருக்க இன்றியமையாத சுதந்தரங்களனைத்தையும் பயனர்களுக்கு வழங்கினால் மாத்திரமே ஏற்கிறது. உபுண்டுவில் இயல்பிருப்பாக தனியுரிம மென்பொருட்கள் சில தரங்கூட்டிடும் பொருட்டு சேர்க்கப் படுகின்றய. வன்பொருள் இயக்கிகள் சில இதற்கு உதாரணம். பிரபலமான பிற இயங்கு தளங்களுக்கும் இது பொருந்தும்.

தாங்கள் இத்தகைய புத்தறிவு கொண்டவராக ஆசைப்பட்டால் இவ்வியங்கு தளத்தை அதன் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாகும்.