கணிமொழி - வைகாசி - மே 2008

யுனிக்ஸ் ஆயத்தம்...

ம ஸ்ரீ ராமதாஸ், என் ஆர் சி பாஸ், சென்னை

நிரலற்ற கணினியை உயிரற்ற உடம்பு என்றுதான் சொல்ல வேண்டும். கணினியினை துவங்குமாறு தாங்கள் ஏவியதும் இயங்கு தளமெனும் சிறப்பம்சங்கள் நிறைந்த நிரலினைத் துவக்குவதே அதன் முதற் பணி. கணினியின் வன்பொருள் வளங்கள் பராமரிப்பு எனும் சிக்கலான காரியத்தை தன்சிரமேற் கொண்டு ஏனைய பிற மென்பொருட்கள் பணி செய்ய உதவுவதே இதன் பணியாகும்.

இயங்கு தளத்தினை துவக்கும் இப்பணிக்கு பூட்டிங் (ஆயத்தம்) என்று பெயர். இங்ஙனம் ஆயத்தம் ஆகுதற்கு தேவையான குறிப்புகள் BIOS எனப்படும் பேஸிக் இன்புட் அவுட்புட் சிஸ்டத்தில் அமைக்கப் பெற்றிருப்பதால் அதற்குண்டான வழிகளை தங்கள் கணினி அறிந்தேயிருக்கும்.

இந்த BIOS சிப், பூட் லோடர் எனப்படும் ஆயத்த நிரலை வன்தட்டில் (ஆயத்த கருவி) தேடும்படிக்கு பணிக்கும். முன்னாளைய குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் LILO எனப்படும் ஆயத்த நிரல் பயன்படுத்தப்பட்டது. இந்நாளைய குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் GRUB எனப்படும் ஆயத்த நிரல் பயன்படுத்தப்படுகிறது. இவ் ஆயத்த நிரலின் பணியே இயங்கு தளத்தினை துவக்குவது.

இவ் ஆயத்த நிரலானது கெர்னல் எனப்படும் கருவினைத் தேடி அதனை நினைவிலேற்றி துவக்குவதன் மூலம் இதனைச் செய்கிறது. கரு துவங்கிய கையோடு அக்கம் பக்கம் இதர வன்பொருட்களை இனங்கண்டு நிரல்களை இயக்குதற்கு தயாராகிறது. இதனை சாதாரண நினைவிடங்களில் அல்லாது I/O துறைகளைத் தீண்டுவதின் மூலமாக கருவானது செய்கிறது. இத்துறைகள் சிறப்பம்சம் வாய்ந்த வட (Bus) முகவரிகளாகும். ஆணைகள் இடப்படுவதை உணரும் கருவி நிர்வாகிகளை (Device Controllers) இவை பெற்றிருக்கலாம். கருவானது தன்னகத்தே எதனை எங்கே தேட வேண்டும் போன்ற விவரங்களையும் அப்படி தேடியது கிடைத்திடின் நிர்வாகிகள் (Controllers) எவ்வாறு செயற்படும் என்பது பற்றிய விவரங்களையும் தன்னகத்தே முன்னமே கொண்டு விளங்குகிறது. கருவின் இப்பணிக்கு தன்னிச்சைத்தேடல் (autoprobing) என்று பெயர்.

ஆயத்த நேரத்தில் தாங்கள் காணும் பெரும்பாலான தகவல்கள் I/O துறைகளின் வழியாக கரு செய்யும் தன்னிச்சைத் தேடல்களே. இதன் மூலம் இத்தேடல்களுக்கு அதனகத்தே என்ன இருக்கிறது என்பதையும் அதனை தங்கள் கணினிக்கு தக்கவாறு எவ்வாறு பொருத்தலாம் என்பது பற்றியும் ஆராய்கிறது. இப்பணியை செய்வதில் லினக்ஸ் கருவானது ஏனைய பல யுனிக்ஸ் கருக்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது. DOS அல்லது விண்டோஸ் உடையதைக் காட்டிலும் இன்னும் பல மடங்கு சிறந்ததெனக் கொள்ளலாம். லினக்ஸின் திறம்பட்ட இவ் ஆயத்த நேர தேடல்களே அதன்பால் கணிசமான பயனர்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருந்தது என்றே ஆரம்ப கால லினக்ஸ் காரர்கள் கருதுகிறார்கள்.

இப்படி கருவினைத் முழுமையாக துவக்கியதோடு ஆயத்த பணி பூர்த்தியாகிவிட்டதாக கருத வேண்டாம். இது பயணத்தின் முதல் அடியே!

தொடர்ந்து வாசிக்க...