கணிமொழி - ஆனி - ஜூன் 2008

அத்து மீறிய மைக்ரோசாப்ட்! அவதியைக் கொட்டித் தீர்த்த பேராசிரியர்!

முனைவர் தீபக் பாதக், ஐஐடி மும்பய்.

குறிப்பு: திறந்த ஆவண வடிவத்தை ஆதரிக்கக் கோரி கணிமொழியின் முதலாவது இதழில் கட்டுரை வெளியிட்டு மைக்ரோசாப்டின் OOXML சர்வதேச தரமாகவிருப்பதையும் சுட்டியிருந்தோம். அதன் பொருட்டு இந்தியாவில் நிகழ்ந்த சம்பவங்களால் தமக்கேற்பட்ட அனுபவங்களை தமது பதிவின் வாயிலாக வெளிபடுத்தியிருந்தார் ஐஐடி மும்பயின் பேராசிரியர் தீபக் பதக் அவர்கள். அக்கட்டுரையின் இன்றியமையாப் பகுதிகளாக கணிமொழி கருதுபவற்றின் தமிழாக்கத்தின் முதற் பகுதியை இங்கே வழங்குகிறோம்.

மைக்ரோசாப்டின் காரியங்களால் ஏற்பட்ட மோசமான விளைவுகளுக்கு பதிலளிப்பதே எமது உண்மையான நோக்கமாகும். இதனையே எம்முடன் பணிபுரிவோருக்கும் ஏனைய பிற வாசகர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மாறாக எமது இக்கடிதம் தவறுதலாக உடன் பணிபுரியும் பிறரையோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்தையோ அல்லது வேறெந்த வாசகரையோ புண்படுத்துமாறு அமைந்திருப்பின் அதற்காக மன்னிப்புக்கோருகிறேன்.
-- முனைவர் தீபக் பாதக் , 26 மே 2008

தனிப்பட்ட எமது உளைச்சலுக்கான காரணம்

எம் உடன் பணிபுரிவோரது பெயருக்கும் எமது ஸ்தாபனத்தின் பெயருக்கும் LITD 15 (இந்திய அரசினை பிரதிநிதிக்க வேண்டி ஏற்படுத்தப்பட்ட 22 அங்கத்தினர்களைக் கொண்ட குழுவின் பெயர்) கமிட்டியின் ஏனைய பிறரது பெயருக்கும் மைக்ரோசாப்ட் ஏற்படுத்திய களங்கமும் அவதூறுமே எமது உளைச்சலுக்கான முதற் காரணம். அரசாங்கத்தால் நன்கு ஏற்படுத்தப் பட்ட முறையொன்று தமது பணியை பூர்த்தி செய்து இந்தியாவின் முடிவில் மாற்றம் இல்லை என உறுதியாகத் தெரிவித்த பின்னும் மைப்ரோசாப்ட் இந்திய தலைமையை தமது நிலையை மாற்ற வேண்டி தொடர்ந்து பாரப்படுத்தியது எமது உளைச்சலுக்கான இரண்டாவது காரணமாகும். மற்றவைக்கு மத்தியில் எமது மன நிம்மதியையும் நல்லுறக்கத்தையும் கடந்த இரு மாதங்களாக இவ்விருவிடயங்கள் குலைத்து வந்துள்ளன. எமது எண்ணங்களையும் சினத்தையும் இப்பகுதியில் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

களங்கம் கற்பிக்கப்பட்ட எம்முடன் பணிபுரிவோர் எமது ஸ்தாபனம் மற்றும் ஏனைய பிற நிறுவனங்கள்

முந்தைய பகுதியில் (இவற்றைப் பற்றி அறிய ஆங்கில மூலத்தை அணுகவும்) ஐஐடி மும்பயில் நாங்கள் மேற்கொண்ட அணுகுமுறையையும் பணியையும் விரிவாக விவரித்திருந்தேன். மைக்ரோசாப்ட் எழுப்பிய புகாரில் ஒன்று இந்தியக் குழுவையேப் பற்றியது. இக்குழு எமது ஸ்தாபனத்திலிருந்து முனைவர் சரத் சந்திரனனையும் உள்ளடக்கியிருந்தது.

இந்திய ODF (Open Document Format) கூட்டணி பற்றி மைக்ரோசாப்டின் புகார் சர்ச்சை செய்கிறது. இந்திய குழு பற்றிய அதன் பட்டியல், இந்தியக் குழுவானது பீரோவின் இரு உறுப்பினர்களையும் ODF இந்தியக் கூட்டணியின் இரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இப்புகார் எதிர்பார்த்தப்படியே இக்கூட்டணி OOXML க்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இந்தியாவின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது இக்குழு செயற்படுவதாவும் தெரிவிக்கிறது. போட்டிபோடும் தரமொன்றின் முன்னேற்றத்திற்குத் தடையேற்படுத்தும் பொருட்டு ஐஎஸ்ஓவின் முறைக்கு இக்குழு சவால் விடுக்கிறது என்றெல்லாம் சொல்லிச் செல்கிறது. இக்கடைசி விடயத்தில் எமக்குப் புரிந்த மட்டில் முக்கியமாக உணரப்பட்டவைகளை ஐஎஸ்ஓவிற்கு முன்வைக்க வேண்டியது கமிட்டியே அன்றி இக்குழுவல்ல. மைக்ரோசாப்டால் OOXML க்கு எதிராக பாரபட்சமாக செயற்படுவதாகவும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட கமிட்டியின் இரு தொழில்நுட்ப உறுப்பினர்கள் ஆற்றிய பணிகளுக்கு தங்களது கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

ODF கூட்டணியின் உறுப்பினர்களாக தெரிவிக்கப்பட்ட இருவர் பற்றி இவ்விடத்தே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்:

  • முனை. பாலசுப்பிரமணியன் - BRM க்கு முன்னதாக ஏற்படுத்தப்பட்ட சிறப்புத் துணைக் குழுவின் உறுப்பினராக மைக்ரோசாப்டின் பிரதிநிதியுடன் அதிக நேரம் செலவிட்டு 35 குறைகளை களைய தீர்க்க உதவியவர். அவர் நேஷனல் இன்பொர்மேடிக்ஸ் சென்டரை சார்ந்தவர். கமிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் முனை. நீதா வர்மா NIC, ODF கூட்டமைப்பின் அங்கம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
  • ஐஐடி மும்பயையைச் சார்ந்த முனை. சரத் சந்திரன் எம்முடன் பணிபுரியும் அனைவரைக் காட்டிலும் அதிக நேரம் OOXML ஆவணத்தின் மீது அதிக நேரம் செலவிட்டவர். இருந்த இருநூறு சிக்கல்களை களைய மைக்ரோசாப்டுடன் ஒத்துழைத்து, ஆகஸ்டு 2007 நடைபெற்ற சந்திப்பின் போது அவற்றை எண்பத்து இரண்டாக குறைக்கவும் உதவியவர்.

NIC தந்த விளக்கங்களின் விளைவாக, குழுவிற்கெதிரான மைக்ரோசாப்டின் பிரநிதித்துவம் ஐஐடி மும்பயை மட்டும் ODF கூட்டமைப்பின் உறுப்பினராக சுட்டி தனிமைப்படுத்துகிறது. ஆக ஐஐடி மும்பய் OOXML க்கு எதிரானதாகவும் அதன் காரணமாக அது நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் போட்டி போடும் தரமொன்றின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் புரிந்து கொள்ள இது வழி வகைச் செய்கிறது.

உண்மையில் இவையெல்லாம் எமக்கு பதிலுரைக்கவியலாத திகைப்பையே ஏற்படுத்துகின்றன. NIC மட்டுமல்லாது மைக்ரோசாப்டைக் காட்டிலும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் களைய அதிக அளவிலான உழைப்பை உண்மையில் சத்தமின்றி செய்ததென்னவோ ஐஐடி மும்பய்தான். மைக்ரோசாப்டே ஐஐடி மும்பயின் பணிகளை பல சமயங்களில் ஏற்றுக்கொண்டுள்ளது. இருந்த போதும் மைக்ரோசாப்டிற்கு இத்தகைய பிதற்றலானக் குற்றச்சாட்டை சுமத்த மட்டும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை. OOXML எதிர்வைத்த தொழில்நுட்ப சிக்கல்களை ஆராய தம்முடன் பணிபுரிவோருடன் முனை. வரத் சந்திரன் விலைமதிப்பற்ற நேரத்தினை செலவிட்ட போது மைக்ரோசாப்டுக்கு அவர் "நல்ல மனிதர்". மைக்ரோசாப்டின் தீர்வுகள் தொழில்நுட்பக் கவலைகளை களைகிறதா இல்லயா என்று அவர் ஆராய முற்படும்போது "முற்போக்கான" சிந்தனையாளராக கருதப்படுகிறார். பல்வேறு தரங்கள் இருக்கலாம் எனும் கருத்துடன் ஐஐடி மும்பய் ஒத்திசையும் போது அது நுகர்வோர் நலன்களுக்கும் நாட்டின் நலக்களுக்கு ஏற்றவாறும் நடப்பதாகக் கருதப்படும். ஆகஸ்டு 2007 ல் ஐஎஸ்ஓவில் இந்தியா வாக்களிப்பதற்கு முன்னர் நடைபெற்ற கடைசி சந்திப்பில், முனை. பதக் கமிட்டியின் அங்கத்தினர்களை ஒருமித்த கருத்து கொள்ள வலியுறுத்தி, நமது கவலைகள் எல்லாம் களையப்படுகிற பட்சத்தில், OOXML க்கு நாம் ஆதரவளிப்போம் என தெரிவிக்கும்படி கோரிய போது, முனை. பதக் நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டு நற்பணியாற்றியவராகக் கருதப்படுவார்.

வாக்கெடுப்பு தீர்வுக்கான சந்திப்பில் (Ballot Resolution Meeting - BRM) ஏற்கப்பட்ட வாக்களிப்பு முறைமை சரியல்ல எனவும், இந்தியாவின் கவலைகள் மட்டுமின்றி ஏனைய பிற NB க்களின் கவலைகளும் முறையான தொழில்நுட்ப விவாதங்களினால் களையப்ட வில்லை எனவும் முனை. சரத் சந்திரன் கருதினால் அவர் திடீரென சரியாக செயற்படவில்லை என்று பொருள். BRM ல் ஏற்கக் கூடாது என வாக்களிக்க வேண்டும் எனும் இந்தியக் குழுவின் முடிவோடு அவர் ஒத்துப் போனால், அவரும் அவரும் அவரது ஏனைய தொழில்நுட்ப காரியகர்த்தர்களும் கேடே உருவான ODF கூட்டணியின் அங்கத்தினர்களாக வர்ணிக்கப்படுவர். OOXML தனில் உள்ள பல்வேறு சிக்கல்கள் இன்னும் களையப்படாமையால் அது சர்வதேச தரமாகும் பக்குவத்தை இன்று வரை இன்னும் அடையவில்லை என்ற ஐஐடி மும்பயின் கருத்தை அவர் கமிட்டியிடம் தெரிவித்தால் அவர் முழுக்க முழுக்க OOXML க்கு எதிரானவராக வர்ணிக்கப்படுவார். 20 மார்ச் 2008 ல் LITD 15 ன் கடைசிச் சந்திப்பின் போது முடிவில் மாற்றமில்லை என ஐஐடி முமபய் தமது வாக்கை பதிவுச் செய்தால், நாங்கள் மைக்ரோசாப்டால் இந்திய தேச நலன்களுக்கு எதிராகச் செயல்படுவோராக மைக்ரோசாப்டால் சித்தரிக்கப்படுகின்றோம்.

இதுவே மைக்ரோசாப்ட் தனிநபர்களையும் நிறுவனங்களையும் மைக்ரோசாப்ட் நடத்திய விதம். நண்பர்களாக, முற்போக்கு சிந்தனையாளர்களாக, நாட்டு நலன்களுக்கு ஏற்றவாறு நடப்பவர்களாக ஒரு நாள். மைக்ரோசாப்ட் எதிர்பார்த்தபடி அல்லாது தங்களது தொழில்நுட்பக் கருத்துக்களைச் சொல்லத் துணிந்த நாளில் பகைவர்களாக, கேடு விளைவிக்கும் கூட்டணியின் உறுப்பினர்களாக! இதனைச் சொல்லுதற்காக எம்மை மன்னிக்கவும். "நண்பரொருவரை முதுகில்" குத்துவதே இதற்கேற்ற கண்ணியமான பதமாக எம் நினைவிற்கு வருகிறது.

தொடரும்...