இயங்கு தளம் - Operating System
தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும். பிரபலமாகக் கிடைக்கப் பெறும் கட்டற்ற இயங்கு தளங்கள் லினக்ஸ் கருவினைப் பயன்படுத்துகின்றன.
கரு - Kernel
இயங்கு தளங்களின் பிரதான பகுதி கருவென்று அழைக்கப்படும். கணினியின் வளங்களை பராமரிப்பது கருவின் முக்கியப் பணிகளுள் ஒன்று. எளிமையாக வன்பொருள் மற்றும் மென்பொருட்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கருவினுடையது எனலாம்.
மேலோடு - Shell
இடப்படும் ஆணைகளை இயக்க உதவுவது மேலோடு-ஷெல் எனப்படுகிறது. ஆணைகளை இனங்கண்டு கொள்ள பயன்படும் ஷெல் ஒரு நிரலாக்க மொழியும் ஆகும். ஒரு வரியொடுக்கியாக (interpreter) ஷெல் பல்வேறு ஆணைகளுக்கான இடைமுகப்பாக திகழ்கிறது. இத்தகைய பயன்பாடுகளை ஒருசேர இயக்க உதவும் வாய்ப்பையும் தருவதால் ஒரு நிரலாக்க மொழியாகவும் கருதப்படுகிறது. உடனுரையாடும் (interactive) விதமாவும் அது இல்லாத பிற வழிகளிலும் மேலோடுதனைப் பயன்படுத்தலாம். உடனுரையாடும் விதமாகப் பயன்படுத்திடும் போது ஆணைகளை விசைப்பலகையினின்றும் அதல்லலாத நிலையில் கோப்பொன்றிலிருந்தும் ஆணைகளை பெற்று மேலோடு இயக்கும். bash குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் பரவலாகக் கிடைக்கப் பெறும் மேலோட்டின் பெயராகும்.
வழங்கி - Server
கோருவோருக்கு குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதால் வழங்கியென்று அழைக்கலாம். தரப் படும் சேவைகள் பல விதமாக இருக்கலாம். உதாரணத்திற்கு இணைய வழங்கி. இணையச் சேவைகளை வழங்குதற்கு இது பயன்படுகிறது. அபாச்சி இன்று உலகம் நெடுகிலும் பரவலாகப் பயன்படுத்தப் படும் இணைய வழங்கியாகும்.
வாங்கி - Client
சேவைகளை வழங்குவது வழங்கி எனக் கொண்டால் அதனைப் பெற்றுக் கொள்ளும் கருவிகளை வாங்கி என அழைக்கலாம். மடல்களை பரிமாறிக் கொடுக்கும் மையமாக ஒரு இடத்தில் மடல் வழங்கியினை நிறுவிக் கொள்ளலாம். மடல்களை நம்மிடத்திலிருந்து அனுப்ப பெற்றுத் தர மடல் வாங்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை வழங்கியின் மூலமாக பரிமாறப்படும்.