கா சேது - கொழும்பு
கட்டுரைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுதல், மாற்றுக் கருத்துக்கள், விளக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள் என பலவற்றையும் வாசகர்கள் மறுமொழி மடல்களில் எழுதலாம். அவற்றை மாததிற்கு ஒரு முறை தான் தொகுத்து அடுத்த இதழுடன் வெளியிடுவதை விட ஒரு துணையான வலைப்பதிவு தளத்தில் வரும் மடல்களை உடனுக்குடன் வெளியிடின் பயன் மிகும். அவ்வாறு ஒரு துணை கருத்து மன்றத்தையும் ஏற்படுத்தி நடத்துவதைப்பற்றி ஆலோசிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.
கணிமொழி முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
குமரேசன் - காஞ்சிபுரம் (ஆங்கில மடலின் தமிழாக்கம்)
கணிமொழி நன்றாக உள்ளது. தனக்கென்றதொரு அலங்காரத்தை பெற்று விளங்குகிறது. விவரங்களை அளிக்கும் விதமென்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. எம்மை போன்ற இளம் வாசகர்களை இவ்விடயத்தில் கவரவில்லையெனினும் காட்சி கண்கொட்டும் அளவிற்கு உள்ளது. வரைகலையோடு விவரங்களை தர முனையலாம்.
தமிழ்ச் சொல்லே ஆயினும் சில இடங்களில் அதன் பொருளை எம்மால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. என்னைப் போலவே நம் மக்களுக்கும் இத்தகைய சிரமம் இருக்கலாம். இதற்கு தீர்வு காண்பது நல்லது. மேலும் உலாவியுடன் பொருந்துவதில் சிக்கல் இருக்கிறது. மின்னெழுத்துக்களை பதிவிறக்க வசதி வேண்டும்.
மேலும் கணிமொழியானது தமக்கே உரித்தான பத்திரிக்கை தன்மையை தொடர்ந்து சமூகப் பொறுப்பினை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறேன். ஒட்டுமொத்தமாக இது ஒரு மிகச் சிறந்த முயற்சி.
புகழேந்தி - சென்னை (ஆங்கில மடலின் தமிழாக்கம்)
நல்ல பணி. வாசிப்போருக்கு பயனளிக்க வல்ல இணைப்புகளை தளத்தில் சேர்க்கலாம். மொழிநடை கட்டுரைகளின் தன்மை நன்றாக உள்ளது. நடை எளிமையாகவும் புரிந்துக் கொள்ளத் தக்கதாகவும் உள்ளது.