கணிமொழி - ஆடி - ஜூலை 2008

அக்கம் பக்கம்...

கணிமொழிக்கு மொழிபெயர்ப்பாளர்கள் - எழுத்தாளர்கள் தேவை

கணிமொழி இதழுக்கு உலக அரங்கில் நடைபெறும் கட்டற்ற மென்பொருள் பற்றிய செய்திகளை தந்திடும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர்களும் எழுதாளர்களும் தேவைப் படுகிறார்கள். மாதம் குறைந்த பட்சம் ஒரு கட்டுரையையாவது மொழிபெயர்த்து வழங்கலாம். பயனர்களுக்கேற்ற உதவி பக்கங்களை இயற்றித் தரலாம். இன்னும் பல வழிகளில் பங்களிக்கலாம். தங்களுக்கு விருப்பம் இருப்பின் தள நிர்வாகியை தொடர்பு கொள்ளவும்.

லினக்ஸ் மின்ட் 5 - எலைசா வெளியிடப்பட்டது

பிரபல குனு/ லினக்ஸ் இயங்குதளமான உபுண்டுவின் வழி வந்த லினக்ஸ் மின்டின் ஐந்தாவது வெளியீடு "எலைசா" எனப் பெயரிடப்பட்டு அண்மையில் நிகழ்ந்தது. தடையேதுமற்று ஊடக வசதிகள், பொலிவானதொரு இடைமுகப்பு போன்றவற்றிற்றகு கவனம் கொடுப்பதாக இவ்வெளியீடு திகழ்கிறது. உபுண்டு களஞ்சியங்களையே இது பிரதானமாகக் கொள்கிறது.

பதிவிறக்கிப் பயன்படுத்த http://linuxmint.com.

சூசே 11.0 க்கான வாசல் திறந்தது

நாவல் (Novell) நிறுவனத்தின் படைப்பான ஓபன்சூசேவின் 11.0 வது வெளியீடு அண்மையில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டில் ELCOT நிறுவனம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பயன்படுத்திட வேண்டி 30000 த்துக்கும் அதிகமான கணினிகளில் ஓபன் சூசே 10.0 தனை நிறுவிப்பொருத்தி வழங்கியது நினைவிருக்கலாம்.

பதிவிறக்க: http://en.opensuse.org/

கட்டற்ற இசைக் களஞ்சியம் - ஜாமென்டோ

இசைகளும் கட்டற்று இருக்க ஏதுவாய் அனைவரும் தடையேதுமின்றி இரசித்து மகிழ்ந்திடும் வண்ணமாய் ஜாமென்டோ இணைய தளம் திகழ்கிறது. இதிலுள்ள எந்தவொரு இசை ஆல்பத்தையும் தாங்கள் பதிவிறக்கக் கூடும் என்பதோடு எவ்வித சட்ட உறுத்தலும் இல்லாது யாருடனும் எங்கேயும் எவ்விதத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய முயற்சியினை தமிழ் கலைத் துறையினரும் மேற்கொண்டால் அதனால் விளையும் இன்பத்திற்கு அளவும் உண்டோ! மேலுமறிய: http://www.jamendo.com

பட்டையைக் கிளப்பும் பயர்பாக்ஸ் 3.0 உலாவி

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிட வேண்டி வேண்டி விண்ணபித்திருக்கினர் பயர்பாக்ஸ் உலாவியின் பறைசாற்றுத் துறையினர். ஆனால் உலகின் கட்டற்ற உலாவியான பயர்பாக்ஸ் ஒரே நாளில் கிட்டத்தட்ட 80 இலட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களை கண்டுள்ளது.

காரணம்? அதன் புத்தம் புதிய மேம்படுத்தப் பட்ட வெளியீடு (பயர்பாக்ஸ் 3) அண்மையில் நிகழ்ந்தது. இன்னும் தாங்கள் பதிவிறக்கவில்லையெனில் உடனே பயணிக்க வேண்டிய முகவரி: http://getfirefox.com