முனைவர் தீபக் பாதக், ஐஐடி மும்பய்.
முந்தைய இதழில் வெளியான "அத்து மீறிய மைக்ரோசாப்ட்! அவதியைக் கொட்டித் தீர்த்த பேராசிரியர்!" கட்டுரையின் தொடர்ச்சி...
மைக்ரோசாப்டின் இச்செயல்களுக்கு பிரபலமான ஸ்டார் வார் திரைத் தொடர்களில் இடம்பெறும் வாக்கியங்கள் கச்சிதமாகப் பொருந்துகின்றன. "என்னுடன் இருந்தால் இருக்கலாம் இல்லையெனில் என்னுடைய எதிரி நீ" என்பதே அவ்வாக்கியம் எனக் கருதுகிறேன். மைக்ரோசாப்டுக்கு ஏற்றவாறு அதனை "நீ எவ்வாறு எம்முடன் இருக்க வேண்டும் என்பதை நான் தீர்மானித்த வழிகளில் இருந்தால் இருக்கலாம் இல்லையெனில் நீ என்னுடைய எதிரி" எனக் கொள்ளலாம்.
தனி நபர்களைச் சற்றே நாம் மறந்து விடலாம். OOXML க்கு எதிராக செயற்பட்டமைக்காக தீய நிறுவனமாக முத்திரைகுத்தப்பட்டு அதனால் தேச நலனுக்கே குந்தகம் விளைவிப்பதாக விவரிக்கப்பட்ட எமது ஸ்தாபனத்தின் நற்பெயர் என்னாவது? இதன் மூலம் மைக்ரோசாப்ட் எமது ஸ்தாபனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முற்பட்டுள்ளது. ஐஐடி மும்பய்க்கு அதன் நடத்தை குறித்து மைக்ரோசாப்டிடமிருந்து எவ்வித நற்சான்றிதழும் தேவையில்லை. ஆனால் இவ்விடையூறை எம்மால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. பல இரவுகளில் பல்வேறு கற்பனைகளுக்கு ஆளாகி கெட்ட கனவுகளுக்கு உள்ளானேன்.
இத்தகைய எண்ணங்கள் கோபத்தாலும் புண்படுத்தப்பட்டமையாலும் எமது சிந்தனைகளுக்கு வருவதன் எளிமையானக் காரணம் எமது ஸ்தாபனத்தின் மீதான எமக்குள்ள பிடிப்பே எமது தொழிலுக்கு உந்துதலாக அமைந்திருப்பது ஆகும்! நான் மிகவும் நேசிக்கும் ஐஐடி மும்பைக்கு எதிராக வழங்கப்படும் இத்தகைய சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை எம்மால் சகித்துக் கொள்ள இயலாது. கமிட்டியின் எந்தவொரு நிறுவனத்தின் எந்தவொரு பிரதிநிதியாலும் இத்தகைய தவறான அவதூறுகளைப் பொறுத்துக் கொள்ள இயலாது.
ஐஐடி மும்பய் என்பது உயர்கல்விக்கான புகழ்பெற்ற ஒரு பயிலகம் மட்டும் அல்ல என்பதனை இங்கே சுட்டிக்காட்டிட விழைகிறேன். அது தேசத்தினுடைய "ஐஐடி அமைப்பின்" ஒரு பாகமாகும். வல்லமை வாய்ந்த எமது தேசத்தின் சிறப்பான சட்டங்களால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எமது வல்லமை பொருந்திய அரசாங்கத்தினால் மிகவும் கவனமாக ஆதரிக்கப்பட்டு போஷிக்கப்படும் அமைப்பாகும். திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு நுட்மாக அறிவினை சிறப்பான முறையில் வழங்கி அவர்களது தொழில் வாழ்க்கை உருவாக்கத்திற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வித்திட முனைந்த அமைப்பாகும்.
தாங்கள் பேசும் மொழிகளைச் சாராது, தாங்கள் பின்பற்றும் சமயங்களைப் பொருட்படுத்தாது, தாங்கள் ஏழ்மையிலும் ஏழ்மையானவரா, பணக்காரரிலும் பணக்காரரா என்பதைப் பொருட்படுத்தாது தங்களது திறமையை வெளிப்படுத்த வல்ல எந்தவொரு இளைஞரையும் அனுமதித்து அவர்தம் வளமான வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள வழி வகை செய்யும் அமைப்பாகும்
இந்திய திறமையின் கனவுகளின் ஒரு அடையாளம் ஐஐடி அமைப்பு என்பதனை மைக்ரோசாப்ட் புரிந்து கொள்ளட்டும். இவ்வமைப்பின் நிலையை மட்டம்தட்ட மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், அதிலும் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், எமது தேசத்தினால் கண்ணியத்துடன் ஏற்கப்படும் எனக் கருதிட வேண்டாம். ஐஐடி மும்பய் நாட்டு நலன்களுக்கு எதிராக செயற்பட்டது எனக் கூறுவது கண நேரங் கூட நம்பப்பட மாட்டாது. ஆயினும் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதே ஒருவரை வருத்தமடையச் செய்வதோடு பொதுவில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கருதச் செய்கிறது. இதனால் ஏற்படுத்தப் பட்ட புண் ஆற்ற இயலாதது.
நேஷனல் இன்பொர்டமேடிக்ஸ் மையத்தின் நிலையென்ன? தாம் ODF இந்தியக் கூட்டணியின் அங்கம் இல்லை என்பதனைத் தெளிவுபடுத்திய பின்னரும், அதனைச் சார்புடையதாக OOXML க்கு எதிரானதாக நாட்டு நலனுக்கு குந்தகம் விளைவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது எமக்கு ஒத்த இன்னலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றவாறு செயற்படவில்லை என்ற கீழ்த்தரமான குற்றச்சாட்டினால் எமது சினம் இன்னும் ஆழமாகிறது. NIC உடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. NIC யின் முனைவர் சேஷகிரி முதல் முனைவர் கைரோலா வரை அனைவரையும் எமக்கு தனிப்பட்டு தெரியும். இவர்கள் தங்களது தொழில் வாழ்வில் தேச நலனுக்காகவே பணிபுரிந்திருக்கின்றனர் என நான் உத்தரவாதம் அளிக்கின்றேன். NIC யின் எண்ணற்ற தொழில்நுட்ப அலுவலர்கள் தொலை தூர தாலுக்காகளிலும் மாவட்டங்களிலும், மாவட்ட நிர்வாகம், மத்திய மாநில அரசாங்கங்களுக்காக பயன்பாடுகளை உருவாக்கித் தந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் அத்துறையைச் சார்ந்த ஏனையோரைப் போல் டாலருக்கு நிகரான ஊதியங்களுக்கு வேலைபார்ப்பது கிடையாது. ஆனால் எமது எண்ணத்தில் அவர்களே பாரத மின்னாளுமையின் பேசப்படாத நாயகர்கள். இவ்விடத்தே நான் அதிக சிக்கல் வாய்ந்த பெரிய திட்டங்களை செய்து காட்டியுள்ள இத்துறை சார்ந்த கம்பனிகளை குறைத்து மதிப்பிடவில்லை. மாறாக NIC தனில் உள்ள ஒருவர் தேச நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பார் எனக் குற்றஞ்சாட்டுவது உண்மையாகவே ஒரு நோஞ்சான்தனமான செயல்.
BRM குழுவில் ஐஐடி மும்பை மற்றும் NIC தமது பிரதிநிதிகளையும் கொண்டிருந்தமையால், புகாரில் வெளிப்படையான இக்குற்றச்சாட்டுக்கள் இன்னும் விவரமாகவே கொடுக்கப்பட்டிருந்தன. நேரடியாகக் பொருள்படும் படி பார்க்கிற போது முன்னர் சுட்டப்பட்ட அனைத்து அங்கத்தினர்களுமே ஒத்த குற்றச்சாட்டுக்கு, மைக்ரோசாப்டின் ODFகூட்டணியின் அங்கத்தினர் என்ற புகாரால், ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் இவ்வபத்தம் கண்டிப்பாக பொருந்தாது.
மைக்ரோசாப்ட் இந்நிறுவனங்களின் பிரதிநிதி OOXML க்கு எதிராக வாக்களிப்பர் என அனுமானித்திருந்ததா? இந்நிறுவனங்கள் தங்கள் நிலைப் பற்றி மீண்டும் சிந்தித்து 'ஒழுங்காக' வாக்களிக்க வேண்டும் என சமிக்ஞை செய்ய முற்படுகிறதா? ஒருவரைத் தவிர யாரும் இதனைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. TCS ன் நிலையென்ன? TCS ம் ODF இந்தியக் கூட்டணியின் அங்கத்தினராக இருப்பதால் அதுவும் ஆகஸ்டு 2007 ல் நடைபெற்ற கமிட்டியின் வாக்கெடுப்பின் போது தேச நலன்களுக்கு எதிராக செயல்பட்டதா? மைக்ரோப்டின் புகாரை வாசிக்கும் ஒருவர் TCS க்கு எதிரான எண்ணங்களை வளர்த்துக் கொள்வாராயின் என்ன செய்வது? இக்குற்றச்சாட்டு குறித்து கமுட்டியில் அங்கத்தினராக இருக்கும் TCS தனின் உறுப்பினருக்கு தெரியவாவது தெரியுமா? அப்படியாயின் ISO வில் OOXML க்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என இறுதியாக அவர் ஏன் வாக்களித்தார் என மக்கள் அறிய விழையலாம். TCS, மைக்ரோசாப்டின் உந்துதலாலா OOXML தனை ஆதரிப்பதால், அது தன்னைத் தானே சுத்திகரித்துக் கொண்டு தற்போது தேச நலன்களுக்கு தக்கபடி நடந்துகொண்டுள்ளது! ஆனால் மைக்ரோவாப்டின் அனைத்துக் குற்றச்சாட்டுக்ளையும் வழக்குகளையும் வாசிக்கும் மூத்தோர் இப்படி வேறுபாட்டினை தெளிவாக இனங்கண்டு கொள்வரா?
நண்பர்களையும் எதிரிகளையும் ஒரே மாதிரி களங்கப்படுத்தும் இத்தகைய வழிதான் என்னே!
தேசத்திற்கு சிறப்பாக சேவை புரிந்து வரும் இவ்வமைப்புகளுக்கு எதிராக மைக்ரோசாப்ட் பொய்யான அறிக்கைகளை இட்டுள்ளது. மைக்ரோசாப்டின் தலைமை அதன் பின்னர் எங்களை சந்தித்தது, ஐஐடி மும்பையுடைய பங்களிப்பை பாராட்டி தமது தவறுக்காக எங்களிடத்தே மன்னிப்பும் கோரியது. தனிப்பட்டு அம்மன்னிப்பை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அமைப்பு ரீதியாக காண்கிற போது இது கட்டாயமாக போதவே போதாது. ஐஐடி மும்பை, NIC உள்ளிட்ட பல அமைப்புகளின் பெயர்களுக்கு தவறாக திட்டமிடப்பட்டு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளிடம் களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் புகார் தெரிவிக்கப்பட்ட அனைவருக்கும் மைக்ரோசாப்ட் முறையாக எழுதி அவற்றை திரும்பப்பெற வேண்டும். இது கூட செய்யப்படவில்லையென்றால் விளைவு என்னவாக இருக்கும் என எம்மால் ஊகிக்க இயலவில்லை.
சேற்றை வாரியிறைக்கும் மைக்ரோசாப்டின் இம்முயற்சிகளுக்கு ஒருவர் எவ்வாறு பிரதிபலிக்கக்கூடும் என்பதை வெளிப்படுத்த நான் "தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் இணைந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் மைக்ரோசாப்ட்" எனும் அனுமானங்களின் அடிப்படையிலானப் புகாரை இயற்றியுள்ளேன். "மைக்ரோசாப்டின் படைப்புரிமம் பெற்ற சேற்றைவாரியிறைக்கும் முறைமை" என இப்புகாரை வடிக்கையில் குறிப்பிட்டுள்ளேன். தனியானதொரு பிற்சேர்க்கையாக அதனை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். இதன் நோக்கம் இத்தகைய புகார்களும் அதனைத் தொடரும் பிற புகார்களும் நம்மனைவரையுமே பாதகத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே. தேசிய சர்வதேச முகமைகளில் தமது தனியாளுமையை மேம்படுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் முயற்சி மேற்கொள்வதையும் இந்திய பணிமேசை சந்தையில் தமக்கிருக்கும் இறுக்கமான பிடிப்பை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதையும் இப்புகார் விவரிக்கிறது. INFOSYS, TCS, WIPRO, NASSCOM முதலியவை மைக்ரோசாப்டுக்கு அதன் தீமைக்கு துணைபோவதன் மூலம் நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும் சித்தரிக்கின்றது.
முழுக்க முழுக்க அனுமானங்களின் அடிப்படையிலான புகாராயினும் இதன் கடைசி விடயம் எம்மை உணர்வு பூர்வமாக பெரிதும் பாதித்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கு இந்நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அனைவரும் அறிந்ததே. இதன் முந்தைய மற்றும் இன்றைய தலைவர்கள் நவீன இந்தியாவின் உதாரணப் புருஷர்கள். அவர்களை நெருக்கமாக அறியும் வாய்ப்பும் அவர்களுடைய நெருக்கமான நட்பும் கொண்டவனாக கருதப் படுபவன் நான். எமது நாட்டின் குடிமக்களில் பலர் இவர்களுக்கு எதிராக இத்தகைய அவதூறுகளை வீசினால் பதிலுக்கு மிகக் கடுமையான விமர்சனங்களை தருவர் என்பதில் எமக்கு ஐயமில்லை. இப்புகழ்பெற்ற பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை ஆர்வத்துடன் எதிர்கொள்வோருள் நானும் இருப்பேன். இவர்களும் இவர்களுடைய நிறுவனங்களும் உரிய மரியாதையுடன் நடத்தப்படவேண்டும்.
தொடரும்...