உலாவி - Browser
அகில உலக இணையத்திலோ உட் பிணையமொன்றிலோ இருக்கக் கூடிய இணைய தளமொன்றின் இணையப் பக்கத்தில் கிடைக்பெ பெறும் உரைகள், படங்கள், பதிவொளிகள் (வீடியோ), இசை போன்ற பலவகைப்பட்ட தரவுகளையும் அணுகி பார்வையிட்டு அவற்றுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவும் பயன்பாடாக உலாவிதனை விவரிக்கலாம். பயர்பாக்ஸ், கான்கொயரர், எபிபனி போன்றவை கட்டற்று கிடைக்கும் பிரபல உலாவிகளாகும். இதனை ஆங்கிலத்தில் பிரவுஸர் என வழங்குவர்.
இணையரங்கம் - Internet Relay Channel
இணையத்தின் மூலம் பலரும் உடனுரையாடுதற்கான ஒரு ஏற்பாடு இணையரங்கம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் இன்டர்நெட் ரிலே சானல் என வழங்குவர். இணைய வழங்கியொன்றில் பல இணையரங்குகள் இருக்கும். தங்களுக்கு உகந்ததாக ஒருவர் தேர்வு செய்யும் அரங்கமொன்றினுள் நுழைந்து யார் வேண்டுமானாலும் அவ்வரங்கினுள் இருக்கும் பிற எவருடனும் உரையாட இயலும். பிரபலமாகப் பயன்படுத்தப் படும் இணையரங்க வழங்கியாக http://irc.freenode.net தனை கருதலாம்.
அளிக்கை - Presentation
ஆங்கிலத்தில் பிரஷன்டேஷன் என சொல்வதை நாம் அளிக்கை எனச் சொல்கிறோம். எடுத்துக் கொண்ட பொருளை முன்னே அமர்ந்திருப்போருக்கு நல்ல முறையில் அளித்திட உறுதுணையாக இருப்பதால் அளிக்கை என கொள்ளப்பட்டது.
மென்களஞ்சியம் - Software Repository
பிரபலமாக வழங்கப்பெறும் குனு/ லினக்ஸ் இயங்கு தளங்கள் கிடைக்கப்பெறும் மென்பொருட்களை பல்வகைப் படுத்தி காத்து வைக்கும் இணைய இடங்களுக்கு மென் களஞ்சியங்கள் எனப் பெயர். இணையத்தில் இருந்த வாறே பொதிகளை நிறுவிட, பதிவிறக்கிட இவைப் பயன்படுத்தப் படுகின்றன.
வழங்கல் - Distribution
குனு/ லினக்ஸினை அடிப்படையாகக் கொண்டு கிடைக்கப்பெறும் இயங்கு தளங்களை பொதுவாக வழங்கல் எனக் கருதுகிறோம். டெபியன் லினக்ஸ் வழங்கல், ரெட்ஹாட் லினக்ஸ் வழங்கல் என குனு/ லினக்ஸ் வழங்கல்கள் அழைக்கப்படுவதுண்டு.