கணிமொழி - ஆவணி - ஆகஸ்டு 2008

விலையிலிருந்து விடுதலை வரை

ம ஸ்ரீ ராமதாஸ்

கணினிகளின் விலையென்னவோ குறைந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு உயிர் கொடுத்து உறவாட வைக்கும் முக்கிய மென்பொருளான இயங்கு தளத்தின் இன்றைய விலை நிலையென்ன? பிரபலமாகப் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தினை எடுத்துக் கொள்வோம். இதன் அண்மைய வெளியீடான விஸ்டாவின் விலை தோராயமாக ரூபாய் நாலாயிரம்(1).

தமிழகத்தில் ஒரு நிறுவனம் இன்றைய தேதியில் பத்து கணினிகள் கொண்ட ஒரு ஏற்பாட்டினை தங்கள் அலுவலகக் காரணங்களுக்காக செய்ய விழைகிறார்கள் என வைத்துக் கொள்வோம். கணினிகளுக்காக அவர்கள் தர வேண்டிய விலை கணினி ஒன்றுக்கு இருபதாயிரம் என வைத்துக் கொண்டால், பத்திருபது இருநூறு. ஆக வன்பொருட்களுக்கான முதலீடு இரண்டு இலட்சம் ஆகிறது.

அப்போ மென்பொருளின் விலை. நாற்பதாயிரம். மொத்த முதலீட்டில் இயங்கு தள செலவிற்கான பங்கு மட்டும் ஏறத்தாழ இருபது சதவிகிதம். இதைத் தாண்டி வோர்டு, எக்ஸ்எல், பவர் பாயிண்ட் முதலிய ஆபீஸ் பயன்பாடுகள் இருக்கு. எதைப் போட்டாலும் ஏதாச்சும் வந்துடுமோன்னு கிலி ஏற்படாம இருக்க கூடவே களை கட்டு (ஆன்டி வைரஸ்) நிரல்கள் வேற நிறுவணும். இதுக்கெல்லாம் விலைப் போட்டா? வன்னுக்கான செலவைத் தாண்டி மென்னுக்கு ஆகுமென மென்னடைக்குதா?

அட! என்னோடது தான பத்து கணினியும். அதான் ஒரு விஸ்டா ஒரு ஆபீஸ் சூட் வாங்கிட்டேனே. இதையே போட்டு மத்த கணினியிலும் நிறுவினா தான் என்னன்னு நினைக்கிறீங்களா? வாங்கும் போது ஒத்துக்கிட்ட உடன்படிக்கை படி இது சரி வராதே?

பிராண்டட் கணினிகளை தாங்கள் தேர்வு செய்து வாங்கியிருப்பின் இயங்கு தளத்தின் விலை அதில் முன்னமே அடக்கப்பட்டிருக்கும். நிற்க! இப்படி அடக்கக் கூடாது, எங்க மேல மென்பொருளுக்கான விலையை திணிக்கக் கூடாது, எவ்வியங்கு தளத்தினைப் பயன்படுத்த வேண்டுமென்பது எங்கள் விருப்பம் என ஐரோப்பாவில் சிலர் சமீபத்தில் பிரபல கணினி தயாரிப்பு நிறுவனங்களோடு வழக்காடி இயங்கு தளத்தின் பெயரால் திணிக்கப்பட்ட காசை திரும்பப் பெற்றது ஆறுதலான விடயம்(2)!

பாகங்களை தனித் தனியாக வாங்கி ஒருங்கிணைக்கப் பட்ட கணினியாக இருப்பின் தாங்கள் முறையாக தனியாகத் தான் மென்பொருள் வாங்க வேண்டும். பள்ளிக்கூடம் முதலான கல்விக்கூடங்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும், அது ஐந்திலே வளைத்து பின் ஐம்பது வரை அறுவடைக்கு தயார் செய்யும் நயமென கூட புரியாதவர்களா நாம்?

அட என்னப்பா நீ! யார் இதெல்லாம் பத்தி கவலைப் படறா? எல்லாம் வட்டுலேர்ந்து வட்டடிச்சோமோ நிறுவிப் பயன்படுத்தினோமோன்னு இல்லாம இதெல்லாம் யோசிச்சுக்கிட்டு! என சொல்லும் ஒரு சாரார். ம்ம்ம்.. எனக்கொரே ஒரு நெக்கு தான் இந்த விடயத்துல. எங்கம்மா திருடாதேன்னு எனக்கு சொன்ன மாதிரி என் குழந்தைக்கு நானும் சொல்லணும்னா இந்த விடயம் நெருடத்தான் செய்யுது. நீங்க உங்க குழந்தைக்கு அப்படி சொல்ல விரும்பலைன்னா நான் சொல்ல ஒன்னும் இல்லை!

அதுக்காக ஒருத்தர் உழைச்சு கஷ்டப் பட்டு தயாரிச்ச மென்பொருளை ஓசில அள்ளிக்கிட்டா என்னப்பா ஆகறது? தயாரிச்சவன் போண்டிதானே ஆகணும். அதுலையும் நியாயம் இருக்கத்தானே செய்யுதுன்னு உங்க மூளை சலவைச் செய்யப் பட்டிருந்தா ஒன்னு புரிஞ்சுக்கோங்க இப்படி பேசறவங்க எல்லாரும் தங்கள் உடல் பொருள் உழைப்பை ஒரு லம்பான மாச சம்பளத்துக்காக நிறுவனம் ஒன்னுக்கு அடமானம் வைக்கத் தயங்காதவங்கன்னு!

சரிதான். வழி சொல்லாம வாயாற பேசறது ஒன்னும் பெரிய விஷயமில்லை. வேற வழி தெரியலையே என்ன செய்ய? ஒன்னு வட்டு வாங்க காசு பத்தல. என்னத்தான் இருக்குன்னு பார்க்க பயன்படுத்தணுங்கற ஆசயையை அடக்க இதை விட்டா இந்த ஏழை நாட்டுல வழியென்ன?

அடடா வெறுங்கையிலே முழம் போடலைங்க. எண்பதுகளில் இந்த கேள்வியைக் கேட்டிருந்தா இப்போ வழியில்லை, ஆனா நாங்க சொல்றதுல நியாயம் இருக்கு, அதுக்காக நீங்களும் தோள் கொடுங்கன்னு குரல் கேட்டிருக்கும். ஆனா காலம் மாறிப்போச்சு. நியாயத்திற்காக ரிச்சர்ட் ஸ்டால்மேன் எனும் மனிதரின் அறை கூவல் இன்று பல்லாயிரக் கணக்கானோரின் பேரொலியாய் உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒலிக்க மட்டுமில்லை ஒளிகாட்டியும் கொண்டிருக்கிறது.

ஒன்றல்ல இரண்டல்ல. குனு லினக்ஸ் - குனு ஹர்ட் - குனு பிஎஸ்டி - ஓபன் சோலரிஸ் இப்படி அகிலத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டிற்கு மாற்றாய் பல முளைத்து அதிலும் அவரவருக்கு வேண்டிய படி வேண்டிய வழிகளில் விடைகளைத் தந்து கொண்டிருக்கின்றது. இருக்கறதைக் காட்டிலும் இதிலென்ன அப்படி என்ன சிறப்புன்னு கேக்கறீங்களா?

துணி வாங்கினதோட அத் துணிக்கடைக் காரருக்கும் துணிக்குமுள்ள தொடர்பு போய் அதன் முழு உரிமையாளராய் நாம எப்படி ஆகறோமோ அதே மாதிரி இம்மென்பொருட்களைப் பெற்றதும் இவற்றை படைத்தவருக்கும் அதற்கும் உள்ள தொடர்பு போகிறது. அப்படி வாங்கின பொருளை எந்த நோக்கத்துக்காகவும் எப்படியும் பயன்படுத்தும் உரிமை நமக்கு கிடைப்பது முதல் விடயம்.

ஒரு பைக் வாங்கினதும் அதன் நிறத்தை மாற்றி, அதன் சைலன்சரை கழட்டி, அதுக்கு பின்னாடி வேற பெரிய சக்கரத்தை மாட்டி சும்மா கும்முன்னு நம்ம தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றி ஓட்டுவது போல் மென்பொருளையும் நமக்கு தெரியலைன்னாலும் தெரிஞ்சவங்களைக் கொண்டு தேவைக் கேற்ற மாதிரி மாற்றி பயன்படுத்திக் கொள்ள இயல்வது இரண்டாவது விடயம்.

நம்மால காசு கொடுத்து வாங்க முடிந்த ஒரு பொருள். நண்பனோட ஏழ்மை நிலை இடங்கொடுக்கலன்னா எப்படி நாம கொடுத்து உதவுவோமோ அதே மாதிரி வாங்கின மென்பொருளையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள முயலும் போது யாரும் தடுக்க இல்லாது இருப்பது மூன்றாவது முக்கியமான விடயம். இப்போ இருக்கும் பிரபல மென்பொருள் இப்படி செய்வதை குற்றமெனச் சொல்வதை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்று இல்லை.

வேறென்ன தேவை ஒரு மென்பொருளிடமிருந்து? இத்தனை நாள் நானும் ஒரு சாதாரண பயனரா இருந்தேன். இப்போ மூல நிரல்கள் கிடைச்சதனால மென்பொருளை மாற்றி என்னோட தேவைக்கேற்ற மாதிரி வடிவமைச்சுக்கிட்டிருக்கேன். மேம்படுத்தப்பட்ட இம்மென்பொருளில் செய்யப்பட்ட மாற்றங்கள் பிறருக்கும் பயன்படலாங்கறதுனால இதை வெளியிட விரும்பறேன்னு ஒருத்தர் நினைச்சா அவரால யார் கிட்டேயும் அதன் பொருட்டு அனுமதி வாங்காமலே செய்ய இயல வேண்டும். இது நாலாவது முக்கியமான விடயம்.

இப்படி நாலும் இருக்கும் மென்பொருட்கள் நாளும் நமக்கு பெற்றுத் தருவது டிஜிட்டல் "விடுதலை" என்பது மறக்க கூடாத மேலான விடயம்.

இப்படி நச்சுன்னு இந்த நாலு விடயங்களையும் சிர மேற்கொள்ளும் மென்பொருள் கட்டற்ற மென்பொருள்(3). அட அப்படி மென்பொருட்கள் இருக்கான்னு கேட்க வேண்டாம். எல்லாரும் உலகை உலாவ இன்று அன்றாடம் பயன்படுத்தத் துவங்கியிருக்கும் பயர்பாக்ஸ் உலாவி இத்தகைய முறையில் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருமொன்று. இன்று பலரும் பதிவிட்டு தங்கள் வாழ்க்கைப் பயணத்தை பதிய வைக்க பயன்படுத்தும் வோர்டுபிரஸ் ஒரு கட்டற்ற மென்பொருள். கலைக் களஞ்சியமென்றால் விகிபீடியா எனும் அளவிற்கு மாறிவிட்ட விகிபீடியா இத்தகைய நெறிகளால் உந்தப் பட்ட மகத்தான திட்டம். வரிசை வளர்ந்து கொண்டிருக்க இன்னும் என்ன யோசனை?

ஸ்லாக்வேர், டெபியன், ரெட்ஹாட், பெடோரா, ஜென்டூ, உபுண்டு என நம் விருபத்திற்கேற்றவாறு தேர்வு செய்யத் தான் எத்தனை வெளியீடுகள்? ´ரே பணிச்சூழலில் சிக்கி தெவிட்டாமல் குநோம், கேடீயீ என நீளும் பணிச்சூழல்களும் அவ்வவற்றிற்குரிய பயன்பாடுகளும். இதையெல்லாம் பார்த்த பின்பும்,

தனியுரிம மென்பொருளில் இது இருக்கு. இந்த மென்பொருளில் இருக்கறது அதுல இல்லை. நான் என்ன செய்யட்டும்? அப்படின்னு சொல்றவங்களில் நீங்களும் இருந்தீங்கன்னா,

ஒருத்தருக்கு உரிமையான மென்பொருளென்றால் அதை உருவாக்குவது பராமரிப்பது இப்படி எல்லாமே அவரோட தலைச்சுமையாகுது. யாவருக்குமான நெறியில் எவரும் பங்கெடுக்கும் வாய்ப்பினை நல்கி கட்டற்று வெளிவரும் மென்பொருள் உலகில் ஏதாச்சும் ஒன்று குறையுதுன்னா அதை களைய முயற்சி எடுக்க வேண்டிய முதன்மையான பொறுப்பு உங்களுக்கும் எனக்கும் இருக்குங்கறது சொல்லித் தெரியணுமா என்ன?

மேற்கோள்கள்: