கணிமொழி

கட்டற்ற கணிநுட்பம்

Archive for the ‘உபுண்டு’ Category

குனு லினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

with one comment

நாம் விரும்பிப் பயன்படுத்தும் இயங்கு தளங்களாக கட்டற்ற இயங்கு தளங்கள் திகழத் தொடங்கி விட்டன. பெடோரா, டெபியன், ரெட்ஹாட், பாஸ், ஜென்டூ, உபுண்டு என இவை பல வடிவங்களில் கிடைத்து நாம் விரும்பியதை தேர்வு செய்து பயன்படுத்தும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. இவை என்னுடயை மொழியில் கிடைக்க வேண்டும் என்பது தாய்மொழிப்பற்றுடைய எவரும் கொள்ளக் கூடிய விருப்பமாகும்.

இதனையே நோக்கமாகக் கருதி பல்வேறு மொழிப்பெயர்ப்பு குழுக்களும் பணியாற்றி வருகின்றன. அவற்றின் மூலம் பங்களிப்போருக்கும் புதிதாய் மொழிப்பெயர்க்க வருவோருக்கும் அடிக்கடி எழும் கேள்வி ஒரு சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல் என்ன என்பதே. ஒரே பொருளைக் கொண்ட பலச் சொற்கள் இருக்கலாம் என்ற போதும் அவை ஒரே பணிச் சூழலில் வெவ்வேறு பகுதிகளில் பிரதிபலிப்பது இயங்குதளத்தை பயன்படுத்துவோருக்கு அனாவசியச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இவற்றை போக்கும் ஒரு முயற்சியாக பெடோரா சமூகம், நாம் குனு லினக்ஸ் பணிச் சூழல்களை அன்றாடம் பயன்படுத்துகிற போது அதிகம் காண நேரிடும் சொற்களையும் சொற்றொடர்களையும் தொகுத்து அவற்றுக்கு நிகரான பிறமொழிச் சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை பெடோரா குழுமத்திற்கே அன்றி அனைத்து கட்டற்ற மென்பொருள்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளு க்கும் பயனளிக்கக் கூடியவை. இத்திட்டத்தை பெடோரா குழுமத்தார் Frequently Used Entries For Localisation (FUEL)[1] என்று அழைக்கிறார்கள்.

இப்பதங்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் கோரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதியும் பதிமூன்றாம் தேதியும் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC அலுவல வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை அளிக்க விருப்பமுடையோர் எமது amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் IRC மூலம் கலந்து கொள்ளலாம். irc.freenode.net வழங்கியின் #fedora-tamil அரங்கின் மூலம் தங்களது பரிந்துரைகளை வழங்கலாம். இந்நிகழச்சியின் ஏற்பாட்டுக் காரியங்களிலும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் எம்மை தொடர்பு கொள்ளவும். இரண்டு நாட்களிலும் அமர்வுகள் காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை ஐந்து மணி வரை நடைபெறும். பரிந்துரைகள் வேண்டப்படும் சொற்கள் http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods கோப்பில் கிடைக்கப் பெறுகின்றன.

———– நிகழ்ச்சி நிரல் —————–
நோக்கம்: குனு லினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம்

தேதி: 12/12/2009 & 13/12/2009

இடம்: 1) CDAC சென்னை, தரமணி
2) #fedora-tamil at irc.freenode.net

நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை
—————————–

[1] – https://fedorahosted.org/fuel/ & https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

விவேகானந்தா வித்தியாலயா பள்ளி அறிவியல் கண்காட்சியில் உபுண்டு அறிமுக நிகழ்ச்சி

without comments

கடந்த 7-8,நவம்பர்-2009 ஆகிய இரண்டு நாள் விவேகானந்தா வித்தியாலயா பள்ளி நிர்வாகம் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததுடன், உபுண்டு லினக்ஸ் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் பற்றிய அறிமுக நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியானது சென்னை, பெரம்பலூர் மற்றும் வியாசர்பாடி ஆகிய  இரண்டு பகுதிகளிலுள்ள விவேகானந்தா பள்ளிகளில் நடப்பெற்றது.

ubuntu-demo

ubuntu-demo

சென்னையில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள்  ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியில் பங்கு  கொண்டதுடன்  உபுண்டு பற்றிய அறிமுகத்தையும்  பற்றி அறியும் வாய்ப்பை பெற்றனர். நிகழ்ச்சியில் உபுண்டுவை லினக்ஸை வட்டு மூலம் எப்படி இயக்குவது மற்றும் எப்படி நிறுவுவது என்பது பற்றியும் நேரடி காட்சி மூலம் விளக்கப்பட்டது.

மேலும் உபுண்டுவில் உள்ள கல்விக்கான மென்பொருள்கள் மூலம்  எப்படி  அன்றாடம் பாடங்களை படித்து பயன்பெறுவது என்பது பற்றியும் அறிமுகம் செய்து காட்டப்பட்டது. +2 மாணவர்கள் சிலருக்ககு உபுண்டுவில் “C”  மூலம் நிரல்கள் எழுதுவது  பற்றியும் அறிமுகம் செய்து காண்பிக்கப்படது. பின்னர் உபுண்டு வட்டுக்கள் கேட்டு வந்தவர்களுக்கு வட்டுக்கள் எழுதி வழங்கப்பட்டன.

uabuntu-demo

uabuntu-demo

இந்நிகழ்ச்சி மூலம் பள்ளிகளுக்கு என்று தனி வட்டு ஒன்றை உருவாக்கவும் உபுண்டு தமிழ் குழுமம் முடிவு எடுத்துள்ளது, அதை வருங்கால நிகழ்ச்சியிகளில் வழங்கப்படும். மேலும் இதுபோன்ற பள்ளி நிகழ்ச்சிகள்  மூலம் கட்டற்ற மென்பொருள் அனைவரையும் சென்றடைய செய்தமைக்கு விவேகானந்தா பள்ளி நிர்வாகத்திற்கு மிக்க நன்றி.

நிகழ்ச்சி இனிதே நடந்திட தன்னார்வத்துடன் முன்வந்து பங்களித்து உதவி புரிந்தமைக்கு இரவிச்சந்திரன், ஸ்ரீதர் – சுதேசிய இயக்கத்திற்கும், இராஜி, பாஸ்கர், ஆமாச்சு மற்றும் தங்மணி அருண் – உபுண்டு தமிழ்  மற்றும் லினக்ஸ்-பயனர்- குழுமத்திற்கு  நெஞ்சார்ந்த  வணக்கங்கள்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களை கான இங்கே செல்லவும்.

புதுமைப் புரட்சிக்கு வித்திட்ட லினக்ஸ் கருத்தரங்கு

without comments

DSCI0041

சேலத்தில் லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாகலமாக நடைபெற்றது. இணையம் தொடர்பான சேவைகளை வழங்கிவரும் விஷுவல் மீடியா நிறுவனமும், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ் செய்தித்தளமான சங்கமம்லைவ்.காம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சேலம் பழைய பஸ்நிலையம் அருகேஉள்ள ஸ்ரீவாசவி மஹாலில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடுமையான மழையால் கருத்தரங்கு காலை 11 மணிக்கு துவங்கப்பட்டது.  உபுண்டு லினக்ஸ் தமிழ் ஒருங்கிணைப்பாளர் திரு.ராமதாசன் கலந்துகொண்டு இக்கருத்தரங்கை சிறப்பாக வழிநடத்தினார் அவருடன் ஈரோடு தனியார் கல்லூரி மாணவர் திரு.கனகராஜ் இணைந்து வழிநடத்தினார்.


இக்கருத்தரங்கில் திரு.ராமதாசன் அவர்கள்  கட்டற்ற மென்பொருளை பயன்படுத்துவதன் நோக்கம்  மற்றும் பயன்கள், உபுண்டு லினக்ஸ் பயன்கள், பயன்படுத்தும் முறை மற்றும் மென்பொருட்களை நிறுவும் முறை போன்றவற்றையும், திரு.கனகராஜ் அவர்கள் லினக்ஸ்சை நிறுவும் முறைப் பற்றி பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
linux1
பின் உணவு இடைவேளைக்குப் பிறகு கோவை கே.ஜி லினக்ஸ் சொல்யூசன் நிறுவனத்தினர் அவர்களின் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் -ன அதிரடி சோதனைப் பற்றியும் பின்னர் அதிலிருந்து  படிப்படியாக விண்டோசையும்  லினக்சையும்
தின் கிளையன்ட்(THIN CLIENT) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செலவினைகளை குறைத்தது  எவ்வாறு என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் சென்னை மாப்டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் பல்க் SMS மற்றும் சிறு நிறுவனங்களுக்கான  மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருட்களையும் பற்றியும் விளக்கப்பட்டது.

linux_salem2
பின்னர் பார்வையாளர்களுக்கான கேள்வி நேரம் அறிவிக்கப்பட்டது.
அப்போது உபுண்டு லினக்சின் நோக்கம் என்ன, மேலும் அவற்றில் உள்ள நிறுவனங்களுக்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று எடுத்துரைத்தனர். இக்கேள்விகளுக்கு ராமதாசன் அவர்கள் பதிலளித்தார். மேலும் இன்னொரு பார்வையாளர் ஏற்கனவே ரெட்ஹாட் போன்றவை பணம் கட்டித்தான் வாங்கவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை உபுண்டுவும் அப்படி மாறாது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்டு அதிரவைத்தார்.
அப்போது திரு.ராமதாசன் அவர்கள் சில விஷயங்களை நாம் தவறாக புரிந்துகொள்வதுதான் காரணம் ரெட்ஹேட் என்பது ட்ரேட் மார்க் . முதலில் ட்ரேட் மார்க் என்ன என்பதை நாம் சரியாகி புரிந்துகொள்ள வேண்டும் . மேலும் சிலர் இப்போது பயன்பாட்டிற்கு வந்த லினக்சில் மோடத்திற்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று கேட்டனர். ஆனால் உபுண்டு லினக்சில் தற்போது வரும் பதிப்பில் அதற்கான அனைத்து ட்ரைவர்களும் தானாகவே எடுத்துக்கொள்ளப்பட்டும் என்றும் எடுத்துரைத்தார். அந்நேரத்தில் அவர் யூஎஸ்பி வழியாக இணையத்தை பயன்படுத்திக்காட்டினார். மேலும் விண்டோஸ் பயன்பாடுகளை வைன் (wine)இடைமுகத்துடன் எவ்வாறு பயன்படுத்துவது என்று ராமதாசன் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விரிவுரையாளர்கள் திரு.காமாட்சி மற்றும் கல்பனா சேக்கிழார், மற்றும் மருத்துவர் சேக்கிழார் , பாரத் பாலிடெக்னிக்கல்லூரி விரிவுரையாளர்கள் , மேட்டூர் அனல்மின்நிலைய ஊழியர்கள், சேலத்தில் உள்ள வணிக வரி அலுவலர்கள், நாகரத்தினம் பொறியியல் கல்லூரியின் சேர்மன் டாக்டர். சந்திரமோகன்,மற்றும் சேலத்த்தை சுற்றியுள்ள கல்லூரிகளில் இருந்து பெரும்பாலனோர் கலந்துகொண்டனர். கல்லூரிகளில் தற்போது பருவத்தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் மாணவர்கள் கலந்துகொள்ள இயலாதா சூழ்நிலையில் அவர்களின் சார்பில் அவர்களின் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிட்டத்தக்கது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
மேலும் இக்கருத்தரங்கு குறித்து பார்வையாளர்களிடம் கருத்து கேட்டபோது அனைவரும் இக்கருத்தரங்குகள்  மேலும் மேலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

லினக்ஸ் இயங்குதளம் குறித்த விழிப்புணர்வு அனைவரிடைய பரவலாக இருந்து வருகிறது என்றாலும் அதனை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க இதுபோன்ற கருத்தரங்குகள் தேவை
மேலும் இச்செய்தியை அனைவருக்கும் எடுத்துச்செல்ல உதவிய சுதந்திரமென்பொருள் வலைப்பூ மற்றும் மற்றும் சூர்யாகண்ணன் அவர்களின் வலைப்பூவிற்கும் , சென்னை ஆன்லைன் ஆசிரியர் மற்றும் நிறுவனத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் – அறிவியல் நகரம், சென்னை

with one comment

பேரா. தேவதாஸ்

சென்னை அக்டோபர் 20, “கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்” எனும் கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப் பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள ஆறு பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை முப்பது

மாணவர்கள் பயிற்சி செய்வதை நோட்டமிடும் பாரதி

மாணவர்கள் பயிற்சி செய்வதை நோட்டமிடும் பாரதி

மாணவர்கள் மாலை முப்பது மாணவர்கள் என பயிற்சியின் பாங்கு அமைந்திருந்தது.

கலந்து கொண்ட மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகம், வேதியியல், இயற்பியல் கணிதம்,

ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பதற்குத் துணை புரியும் கட்டற்ற மென்பொருள்கள் சில விளக்கப்பட்டு, அவற்றை அவர்களே செய்து பார்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. கணினி வழி தமிழ் அறிமுகமும் தட்டச்சுப் பயிற்சியும்

பயிற்சி எடுக்கும் மாணவர்கள்

பயிற்சி எடுக்கும் மாணவர்கள்

வழங்கப்பட்டது. மாணவர்களோடு பள்ளி ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு வானவியல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பி. தேவதாஸ்

முனை. ஐயம்பெருமாள்

முனை. ஐயம்பெருமாள்

தொடங்கிவைத்தார். அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் முனைவர் பி. ஐயம்பெருமாள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை மாணவர்களுக்காக இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை & NRCFOSS-AU வின் பாரதி சுப்பிரமணியம் & ஸ்ரீ ராமதாஸ், உபுண்டு தமிழ்க் குழும தொடர்பாளர்  தங்கமணி அருண் ஆகியோர் நடத்தினர்.

பி.கு:

நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி பள்ளிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உதவிய அறிவியல் நகரத்தின் அலுவலர் ஹேமா,

மாணவர்களுடன் அருணும் ஆமாச்சுவும்

மாணவர்களுடன் அருணும் ஆமாச்சுவும்

நிகழ்ச்சிக்கு மடிக்கணினிகள் தேவைப்பட்ட போது தங்களது மடிக்கணினியை தந்துதவிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் சௌமியா கிருஷ்ணன், இராஜேஷ்,

நிகழ்ச்சி குறித்த தங்கள் அலோசனைகளை வழங்கிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் பி. இராமன், தியாகு

ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கலந்து கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபுண்டு இயங்குதள வட்டு உள்ளிட்ட ஆவணங்களின் தயாரிப்பிற்கான வளங்களை வழங்கிய கட்டற்ற திறந்த மூல மென்பொருள் வளத்திற்கான தேசிய மையம்,

நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி அணுகிய போது அனுமதி தந்து ஊக்கமளித்து உதவிய அறிவியல் நகரத்தின் செயற்குழுவின், தலைவர் பேராசிரியர் எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி தட்டுத் தடுமாறாமல் தட்டச்சு செய்யலாம்

with 3 comments

இனி உபுண்டுவிலும் தட்டுதடுமாறாமல் தட்டச்சு செய்யலாம். அதற்கான தீர்வுதான் IOK(Indic Onscreen Keyboard). ஏனென்றால் இயல்பிருப்பாக பெடோராவில் மட்டுமே IOK இருக்கிறது. மேலும் IOKவானது rpm பொதியாக மட்டுமே கிடைக்க பெற்று வந்தது. நான் அதன் மூல நிரலை எடுத்து உபுண்டுவில் நிறுவக்கூடிய debபொதியாக மாற்றியுள்ளேன். IOK பற்றிய சிறு வரையறை மற்றும் அதை உங்கள் கணிணியில் நிறுவுவது பற்றியும் கீழே காணலாம்.

IOK(Indic Onscreen Keyboard)

தற்போது கீழ்காணும் மொழிகளின் இன்ஸ்கிரிப்ட் கீ மேப்புகளை IOK-யில் காணலாம்

  • அஸ்ஸாமி
  • பெங்காலி
  • குஜராத்தி
  • ஹிந்தி
  • கன்னடம்
  • மராத்தி
  • மலையாளம்
  • பஞ்சாபி
  • ஒரியா
  • சிந்தி
  • தமிழ்
  • தெலுங்கு

IOK -யில் இருக்கும் பட்டியல் பெட்டியின்(drop down list) மூலம் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிகளில் நமக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பட்டியல் பெட்டியில் வரும் மொழிகளானது அவரவர் கணிணியில் /usr/share/m17n/ என்ற அடைவினுள் இருக்கும் இன்ஸ்கிரிப்ட் கீ மேப்புகளை பொறுத்ததாகும். பின்னர் நீங்கள் IOK-யில் இருக்கும் பொத்தான்களை க்ளிக் செய்வதன் மூலம் அதை இயக்கலாம். இது நீங்கள் தேர்வு செய்த மொழியின் எழுத்துருக்களை காட்டுவதோடு மட்டுமில்லாமல், நீங்கள் க்ளிக் செய்யும் எழுத்துருவை அப்போது பயன்பாட்டில் உள்ள மற்றொரு விண்டோவில் பதியவும் செய்யும்.

IOK-யின் மற்றொரு செயல்பாடு என்னவெனில் இயல்பிருப்பாக இருக்கும் இன்ஸ்கிரிப்ட் கீ மேப்புகளை நம் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இத்தகு பயன்பாடுகள் நிறைந்தIOK(Indic Onscreen Keyboard) பொதியை உங்கள் கணிணியில்(உபுண்டு இயங்குதளத்தில்) நிறுவுவது எப்படி என்பதை பார்ப்போம்.

உங்கள் கணிணியில்

System->Administration->Software Sources என்பதில்

Third-Party Software என்பதை தேர்வு செய்யவும். பின்னர் Add என்ற பொத்தானை க்ளிக் செய்யவும். பின்னர் ஒரு குறுந்திரை தோன்றும், அதில் APT line: என்பதில் பின்வரும் வரியை உள்ளிடவும்.

deb http://ppa.launchpad.net/suji87-msc/ppa/ubuntu karmic main

பிறகு close என்ற பொத்தானை க்ளிக் செய்யதவுடன் தோன்றும் திரையில் Reload என்பதை க்ளிக் செய்யவும்.

பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி IOK-வை உங்கள் கணிணியில் நிறுவலாம்

  1. Synaptic Package Manager

System → Administration → Synaptic Package Manager

சென்று iok என்பதை வலது க்ளிக் செய்துMark for installation என்பதை தேர்வு செய்யவும். பின்னர் Apply என்பதை க்ளிக் செய்தவுடன் IOK உங்கள் கணிணியில் நிறுவ பட்டுவிடும்.

எடுத்துக்காட்டு:

Written by suji

October 14th, 2009 at 5:10 pm

ஆரக்கள்ளின் சன் உட்கொள்கை எழுப்பும் ஐயங்கள்…

without comments

ஜாவா தொழில் நுட்பத்தின் காரண கர்த்தாவான சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. ஐபிஎம் சன்னை வாங்கப் போகிறது என்று செய்திகள் கசிந்து பின்னர் இல்லையென ஆன போது சற்றே பெருமூச்சு விட்டிருக்கையில் இப்படியொரு சேதி! நிற்க.

இத்தகைய கும்பெனி உட்கொள்கைகள் (அக்யூசிஷன்) ஏற்படும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகள் பல இருக்கும் என்ற போதும் – மாடாய் உழைத்து எல்லாம் தந்த தொழிலாளர்களையும் சேர்த்து விலைபேசும் போது – தொழிலாளர்களின் கருத்துக்கள் ஏன் கேட்கப்படுவதில்லை? மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் கம்பனியை யார் நடத்தினால் என்ன என இவர்களும் ஏன் இருக்கிறார்கள்? தங்களது கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என இவர்கள் ஏன் நினைப்பதில்லை?

ஆரக்கிள் – மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போன்றே ஒரு தனியுரிம மென்பொருள் நிறுவனம். எப்படி டெபியன் (நான் பயன்படுத்தி வரும் உபுண்டுவை தவிர்த்த காரணம் கீழே விளங்கும்) உள்ளிட்ட கட்டற்ற இயங்குதளங்கள் விண்டோஸுக்கு ஆப்பு வைக்க தொடங்கியுள்ளனவோ அதே போல் ஆரக்கள்ளின் தரவுத் தள ஏக போக சாம்ராஜ்யத்தை அசைத்துக் காட்டியதில் மிகப்பெரிய பங்கு மை எஸ் க்யூ எல் எனும் கட்டற்ற தரவுத் தளத்திற்கு உண்டு.

ஆரக்கிள் – ஜாவா – விண்டோஸ் – வெப்லாஜிக் என்றிருந்த பயன்பாட்டு உருவாக்க தனியுரிம உலக நெறியை தகர்த்த கூட்டணியாகும் குனு/ லினக்ஸ் – அபாச்சி- மை எஸ் க்யூ எல் – பி எச் பி.

சன் மைக்ரோசிஸ்டமும் ஒரு காலகட்டத்தில் தனியுரிம மென்பொருள் ஏகாதிபதியாக கொடி கட்டித் திகழ்ந்து பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதன் படைப்புகளை கட்டற்று செய்வதென முடிவு கொண்டது. இது கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து மை எஸ் க் யூ எல்லை விலைக்கும் வாங்கியது.

வரலாறு இப்படி இருக்க இன்றைய இச்சம்பவம் பல்வேறு வினாக்களை நம்முன்னே எழுப்பி நிற்கின்றது..

  • கும்பனிகளால் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு தொழிலாளர்களாகவும் – தன்னார்வலர்களாகவும் பங்களித்து வருவோர் இத்தகைய சூழலில் எத்தகைய முடிவினை மேற்கொள்வர்? மேற்கொள்ள வேண்டும்?
  • ஒரு கும்பனி கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டை ஏற்றொழுகினாலும் – கும்பனி முறையில் உள்ள இக்கொடுக்கல் – வாங்கல் குற்றத்தின் காரணமான – தன்னை அது இழக்க நேரிடும் போது – அது அதன் பங்களிப்பாளர்களக்கு தரும் உத்தரவாதம் தான் என்ன? (தற்சமயம் நான் பங்களித்து வரும் உபுண்டு திட்டமும் ஒருவகையில் இத்தகையது என்கிற போது – எனக்கு நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வியுமாகும் இது – ஏற்கனவே சூசேவை நாவல் வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன…)
  • இவற்றைக் கொண்டு பார்க்கிற போது முற்றிலும் சமூகம் சார்ந்த முறையால் உந்தப்பட்ட கட்டற்ற மென்பொருள் திட்டங்களே மேலானவையாக – கட்டற்ற தன்மைக்கு இறுதி வரை உறுதியளிப்பதாக தோன்றுகிறதே! ஆனால் கும்பனிகளைச் சாராது இவற்றை தொழில் ரீதியாக வெற்றி பெறச் செய்வது எப்படி?

இச்சம்பவத்திற்கே உரியதாக..

  • கடந்த சில வருடங்களாக சன் மைக்ரோசிஸ்டம் உலகளாவி மேற்கொண்டு வரும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களின் நிலை என்னவாகும்? அவற்றின் பிரதி ஆரக்களின் நிலைப்பாடு எப்படி அமையும்?
  • மை எஸ் க்யூ எல்லை சன் வாங்கியது.. சன்னை ஆரக்கிள் வாங்கியுள்ளது.. மை எஸ் க்யூ எல்லும் ஆரக்கிள்ளும் கோட்பாட்டு ரீதியாகவும் சரி – தொழில் ரீதியாகவும் எதிரெதிர் படைப்புகள். அப்படியிருக்க ஆரக்கள்ளிடம் விலை போய்விட்ட மை எஸ் க்யூ எல்லின் வருங்காலம் என்ன?

தொடர்புடைய பதிவுகள்:

http://www.pluggd.in/technology/oracle-sun-acquisition-4027/
http://blogs.computerworld.com/oracle_sun_what_happens_to_mysql

மூலம்: http://amachu.net/blog/?p=175

உபுண்டுவில் தினமணி தினத்தந்தி வாசிப்பது எப்படி (அ) புதிய மின்னெழுத்துக்கள் சேர்ப்பது எப்படி?

with 4 comments

தினமலர் உள்ளிட்ட நாளேடுகள் யுனிகோடினைப் பயன்படுத்துவதால் அதன் செய்திகளை வாசிப்பதில் இயல்பாக உபுண்டுவில் சிக்கல் இருக்காது.

தினமலர் - சிக்கல் இல்லை

தினமலர் - சிக்கல் இல்லை

தினமணி – தினத்தந்தி ஆகியன யுனிகோடுக்கு இன்னும் மாறாது இருப்பதால் சிக்கல் நிலவுகிறது.

தினத்தந்தி - மின்னெழுத்து வேண்டுகிறது

தினத்தந்தி - மின்னெழுத்து வேண்டுகிறது

தினமணி - திரிந்து தெரியும் எழுத்துக்கள்

தினமணி - திரிந்து தெரியும் எழுத்துக்கள்

இவ்விரண்டு நாளேட்டையும் ஒழுங்காக வாசிக்க அவை தரும் மின்னெழுத்துக்களை நிறுவிப் பயன்படுத்திடல் வேண்டும்.

தினமணிக்கான மின்னெழுத்தைப் பதிவிறக்க: http://www.dinamani.com/fonts/tmnews.ttf

தினத்தந்திக்கான மின்னெழுத்துக் கிடைக்குமிடம்: http://dailythanthi.com/fontdownload/Eltpan-n.ttf

இரண்டு மின்னேழுத்துக்களையும் பதிவிறக்கிக் கொள்ளவும். இயல்பாக இவைத் தங்கள் Desktop அடைவிற்குள் இறங்கும். உபுண்டுவில் இரண்டு விதமாகத் தாங்கள் மின்னெழுத்துக்களைச் சேர்க்கலாம்.

  1. தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக – இம்முறையில் சேர்க்கப்படும் மின்னெழுத்தின் தாக்கம் அனைத்துப் பயனர்களுக்கும் இராது சேர்த்துக்கொண்ட பயனருக்கு மாத்திரமே கிட்டும்.
  2. அனைவருக்கும் – அனைவருக்கும் பயன்படும் வண்ணம் மின்னெழுத்தைச் சேர்ப்பது.

நாம் தினமணி மின்னெழுத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் தினத்தந்தி மின்னெழுத்தை அனைவரது பயன்பாட்டிற்காகவும் சேர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மின்னெழுத்தைப் பயன்படுத்துதல் – தினமணி

  • தனிப்பட்ட பயன்பாடு என்கிறபோது அமர்வின் பயனர் தனக்கென்று ஒரு மின்னெழுத்தைப் பயன்படுத்தப் போகிறார். இதற்கு அவருடைய இல்ல அடைவில் .fonts என்றொரு அடைவு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • Places –> Home Folder தேர்வு செய்து Ctrl + H கொடுத்தால் மறைக்கப்பட்டிருக்கும் அடைவுகளும் சேர்த்துக் காட்டப்படும். File –> Create Folder கொடுத்து அதனால் உருவாகும் அடைவிற்கு .fonts என்று பெயரிடவும்.
  • Applications –> Accessories –> Terminal தொடங்கவும். டெஸ்க்டாப்பில் பதிவிறக்கப்பட்ட தினமணி வாசிப்பதற்கான மின்னெழுத்தை நாம் முந்தைய படியில் உருவாக்கிய .fonts அடைவிற்குள் இட வேண்டும். அதற்கு,
    $ cp Desktop/tmnews.ttf .fonts/
    மாற்றங்கள் நிலை பெற வேண்டி கீழ்காணும் ஆணையிடவும்.
    $ fc-cache -f -v .fonts
    தங்களது பயர்பாக்ஸை மூடி விட்டு மீண்டும் துவங்கவும். தினமணி தளத்தைப் பார்வையிடவும்.
தெளிவான தினமணி

தெளிவான தினமணி

அனைவரது பயன்பாட்டிற்காகவும் மின்னெழுத்தை சேர்த்தல் – தினத்தந்தி

  • தினத்தந்தி மின்னெழுத்தை பதிவிறக்கிக் கொள்ளவும்.
  • Alt-F2 கொடுத்து தோன்றும் சாளரத்தில் gksu nautilus /usr/share/fonts/truetype என்று கொடுக்கவும்
  • மின்னெழுத்து வசிக்கப் போகும் இடம்...

    மின்னெழுத்து வசிக்கப் போகும் இடம்...

  • கடவுச் சொல் கோரப்படும் போது கொடுக்கவும்.
  • தோன்றும் சாளரத்தில் File –> Create Folder கொடுத்து அவ்வடைவிற்கு myfonts எனப் பெயரிடவும்.
  • myfonts அடைவிற்குள் பயணித்து பணிமேசையில் (Desktop) இருக்கும் மின்னெழுத்தை (Eltpan-n.ttf) இழுத்துப் போடவும் (Drag & Drop).
  • இழுத்துப் போடுங்க..

    இழுத்துப் போடுங்க..

  • முனையத்தைத் துவக்கவும்.(Application –> Accessories –> Terminal)
  • sudo fc-cache -f -v /usr/share/fonts/truetype/myfonts/ ஆணையிடவும்.
  • பயர்பாக்ஸை மூடி விட்டு மீண்டும் திறந்து தினத் தந்தி தளத்திற்கு பயணிக்கவும்.
தெளிவான தந்தி

தெளிவான தந்தி

Written by amachu

November 25th, 2008 at 10:26 pm

உபுண்டுவில் தமிழ்99 – ஸ்கிம் பயன்படுத்தி..

with 7 comments

அனுமானங்கள்

  • உபுண்டு 8.10 இன்டிரிபிட் ஐபக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டு பயனர் உபுண்டுவை நிறுவியுள்ளார்.
  • அமர்வின் மொழியும் ஆங்கிலமாகவே இருக்கப் போகிறது.
  • ஸ்கிம் பயன்பாடு கொண்டு தமிழ்99, பொனடிக் உள்ளிட்ட வழிகளில் தமிழில் தட்டெழுத விரும்புகிறார்.
  • பயனர் இணைய வசதி பெற்றிருக்கிறார்.

வழிமுறை

  1. உபுண்டு 8.10 நிறுவிய கையோடு System –> Administration –> Synaptic Package Manager துவக்கவும்.
  2. அதில் தேடுதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள களத்தில் scim-m17n எனக் கொடுத்து தேடப்பட்ட அப்பொதி திரையில் தோன்றியதும் நிறுவிடும் பொருட்டு அதனைத் தேர்வு செய்யவும். பின்னர் வலது புறமாக எலியத்தினைச் சொடுக்கி Mark for Installation கொடுக்கவும். கீழ்காணும் காட்சிப்பதிவு தங்களுக்கு துணைபுரியும்.
  3. scim-m17n நிறுவிட வேண்டி தேடப்படுகிறது...

    scim-m17n நிறுவிட வேண்டி தேடப்படுகிறது...

  4. Apply தட்டினால் இணையத்திலிருந்து scim-m17n உடன் அது சார்ந்த பிற பொதிகளும் பெறப்பட்டு நிறுவப்படும். இது தமிழ் விசைப்பலகைகளுக்கான ஸ்கிம் அட்டவணைகளை நிறுவித் தரும்.
  5. பின்னர் ஒவ்வொரு அமர்விலும் ஸ்கிம்தானாகவே துவக்கப்பட்டு அனைத்து பயன்பாடுகளிலும் பயன்படுத்தப் பட ஏதுவாக முதற்கண் Alt-F2 கொடுத்து மேலெழும்பும் சாளரத்தில் gksudo gedit /etc/profile கொடுக்கவும். நிர்வாகப் பணியாகையால் கடவுச் சொல்லினை இடும் படி கோரப்படுவீர்கள். இது தங்கள் பயனர் பெயரோடு தொடர்புடைய கடவுச் சொல்லே!
  6. அமர்வு ஒவ்வொன்றிலும் ஸ்கிம் தானாகத் துவக்கம்பெற..

    அமர்வு ஒவ்வொன்றிலும் ஸ்கிம் தானாகத் துவக்கம்பெற..

  7. பின்னர் ஜிஎடிட் கொண்டு துவக்கப்பெறும் கோப்பின் அடிப்பகுதிக்கு பயணித்து கீழ்காணும் வரிகளை உள்ளிடவும்.
    # SCIM
    export XMODIFIERS=’@im=SCIM’
    export GTK_IM_MODULE=”scim”
    export XIM_PROGRAM=”scim -d”
    export QT_IM_MODULE=”scim”
    scim -d
    கீழ்காணும் காட்சிப்பதிவு தங்களுக்கு துணை புரியும்.
  8. /etc/profile

    /etc/profile

  9. தற்போதைய அமர்விலிருந்து வெளியேறி புதிய அமர்வினைத் துவக்கவும்.
  10. உரையாக்கப் பயன்பாடான ஜிஎடிட் தனை Applications –> Accessories –> Text Editor கொண்டு துவக்கியபின் Ctrl+Space தட்டினால் ஸ்கிம் தூண்டப்படும்.
  11. திரையின் வலது கீழ்புறம் தோன்றும் ஸ்கிம் தட்டியினைத் தட்டி தமிழ் மொழியில் தாங்கள் விரும்பும் தட்டச்சு முறையை தேர்வு செய்யுங்கள். தமிழ் டைப்ரைட்டர் முறை தேர்வு செய்யப்பட்டிருப்பதை கீழ்காணும் காட்சிப்பதிவு உணர்த்துகிறது.
  12. ஜிஎடிட் - தமிழ் தட்டச்சு முறை தோற்றம்...

    ஜிஎடிட் - தமிழ் தட்டச்சு முறை தோற்றம்...

  13. இனியென்ன தங்களுக்கு தெரிந்த தமிழ் தட்டச்சு முறையில் தட்டுங்க தட்டுங்க தட்டெழுதிக்கிட்டே இருங்க………
ஜிஎடிட் - வணக்கம்

ஜிஎடிட் - வணக்கம்

    இம்முறையைப் பின்பற்றினால் தமிழ்99, தமிழ் தட்டச்சு, பொனடிக், இன்ஸ்கிரிப்ட், ஐடிரான்ஸ் ஆகிய தட்டெழுதும் முறைகளில் தங்களால் தமிழில் உள்ளிட இயலும்.

Written by amachu

November 25th, 2008 at 1:32 pm

ஈரோட்டில் அரங்கேறிய இன்டிரிபிட் ஐபக்ஸ்…

without comments

தமிழ் மயமாக்கப்பட்ட வெளியீடு

தமிழ் மயமாக்கப்பட்ட வெளியீடு

உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸின் தமிழ் வடிவம் ஈரோடு ஐடி அசோசியேஸன் சார்பில், நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஐடி அஸோசியேஸனின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். உபுண்டு தமிழ் குழுமம்/ சென்னை குனு லினக்ஸ் பயனர் குழு சார்பாக ஸ்ரீராமதாஸ், ஊட்டி பத்மநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தித் தந்தனர்.

சிதறாது பதறாது கவனிக்கும் உறுப்பினர்கள்..

சிதறாது பதறாது கவனிக்கும் உறுப்பினர்கள்..

கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் தமிழ் வசதிகள் செய்து கொள்வது, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் பொதிகள் நிர்வாகம், பாடல் – திரைப்படங்கள் கேட்க – பார்க்கப் பயன்படுத்தப்படும் பயன்பாடுகள், குனு/ லினக்ஸ் கோப்பு முறைமை உள்ளிட்ட தலைப்புகளில் செய்முறை விளக்கங்கள் தரப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:

  • இந்நிகழச்சியில் உபுண்டுவின் நேரடி வெளியீடு பயன்படுத்தப்படாமல் திரையில் தோன்றும் முதல் மொழியே தமிழ் மொழியாகக் கொண்ட மாற்றப்பட்ட வடிவத்தினை நிறுவி பயன்படுத்தியமை. (தொடர்ச்சியாக பங்களித்து வரும் குநோம் உள்ளிட்ட தமிழாக்கக் குழுக்களுக்கு நன்றி.)
  • கூட்டிக் கழிச்சு பாரு! கணக்கு சரியா வரும்!

    கூட்டிக் கழிச்சு பாரு! கணக்கு சரியா வரும்!

  • சென்னைக்கு வெளியே நிகழச்சியினை நடத்திட வேண்டும் என நாங்கள் கோரிய போது மிக வேகமாக செயல்பட்டு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நடத்திக் காட்டிய ஈரோடு ஐடி அசோசியேஸன்.
  • ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஈரோடு ஐடி அசோசியேஷன் உறுப்பினர்கள்.
  • கற்றது விட்டுப்போகக் கூடாது என்பதற்காக, அதிரடியாக இன்னும் சில வாரங்களுக்குள்  கலந்து கொண்டோருக்காக ஈரோடு ஐடி அசோசியேஸன் அறிவித்துள்ள உபுண்டு போட்டி.

கனிவான உபசரிப்போடு இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முன்னின்று உழைத்த திரு. இராஜா, திரு பாலு, திரு ஸ்ரீநிவாஸன், திரு முத்தரசு, திரு மனோகர் உள்ளிட்ட ஈரோடு ஐடி அசோசியேஷனின் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். முழுமையான மன நிறைவை ஏற்படுத்திய நிகழ்வு இது.

இந்நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட மின்னேட்டினைப் பெற்றுக் கொள்ள: http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/nov/erode/

Written by amachu

November 10th, 2008 at 9:52 pm

உபுண்டுவில் ஸ்கைப்…

without comments

ஸ்கைப் உலகின் பல மூளைகளிலும் இருக்கும் உற்றாருடன் கதைக்க பயன்படும் ஒரு தனியுரிம மென்பொருளாகும். இதனைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். கட்டாயமான சூழல் உருவாகும் போது உபுண்டு இயங்கு தளத்தில் அதனை நிறுவும் வழிகள் இங்கே விவரிக்கப்படுகின்றன. இதற்குரிய கட்டற்ற மாற்றாக எகிகா திகழ்கிறது.

மென்பொருள் இருப்பிடம் தெரிவிக்க

மென்பொருள் இருப்பிடம் தெரிவிக்க

உபுண்டு இயங்குதளத்தினை துவக்கிய பிறகு, Alt-F2 கொடுத்து எழும்பும் Run Application சாளரத்தில் கீழ்காணும் வரியை இடவும்,

gksudo gedit /etc/apt/sources.list

(இது பொதிகள் எங்கே கிடைக்கின்றன என உபுண்டுவிற்கு தெரிவிக்கும் வடிவமைப்புக் கோப்பை gedit எனும் பயன்பாட்டைக் கொண்டு தொகுக்க திறக்கும் படி பணிக்கிறது. அக்கோப்பு நிர்வாக உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே தொகுக்க இயலுமாகையால் gksudo உடன் பயன்படுத்தப்படுகிறது.)

கடவுச் சொல் தரும்படி கோரப்படுவீர்கள். தங்கள் பயனர் பெயருக்குரிய கடவுச் சொல்லினைக்கொடுத்ததும்

/etc/apt/sources.list

/etc/apt/sources.list

திறக்கப்படும் கோப்பின் இறுதி வரியாக இதனைச் சேர்க்கவும்.

deb http://download.skype.com/linux/repos/debian/ stable non-free

இவ்வரியே ஒளியூட்டப்பட்டு வலது புறமாகத் தெரியும் திரைக்காட்சியிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாங்கள் முனையத்தினை துவக்கவேண்டும். இதற்கு Applications –> Accesories –> Terminal மூலம் இதனைச் செய்யலாம்.

முனையத்தில் கீழ்காணும் இரண்டு கட்டளைகளை கொடுப்பதன் மூலம் தங்கள் கணினியில் ஸ்கைப்பினை தாங்கள் நிறுவிக் கொள்ளலாம்.

உபுண்டுவில் ஸ்கைப்...

உபுண்டுவில் ஸ்கைப்...

$ sudo apt-get update

பொதிகளின் பட்டியலை புதுப்பிக்க இது உதவுகிறது. கிடைக்கக் கூடிய பொதிகளின் பட்டியலில் skype சேர்க்கப்படும். நிறுவல், நிர்வாகப் பணியாகையால் இவ் ஆணை இடும் போது கடவுச் சொல்லினைத் தரும் படி கோரப்படுவீர்கள்.

$ sudo apt-get install skype

இவ் ஆணை ஸ்கைப் தனை நிறுவிட துணை புரிகிறது. இவ்வகையில் பொதிதனை நிறுவ இணைய இணைப்பு பெற்றிருப்பது அவசியம்.

நிறுவி முடித்ததும் ஸ்கைப்தனை Applications –> Internet –> Skype வழியாக தொடங்கலாம்.

Written by amachu

October 19th, 2008 at 9:00 am