[உத்தமம் அமைப்பின் மஞ்சரிக்காக எழுதியது - ஆமாச்சு]
கணினியைத் தீண்டாத ஒருவர் இல்லவே இல்லை எனும் நிலை வெகு தூரத்தில் இல்லை. மென்பொருளை உருவாக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருப்போரும் நம்மிடையே அதிகம் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் நிறுவனம் ஒன்றிடம் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு அதன் வாடிக்கையாளர்களுக்காக மென்பொருளை இயற்றுகின்றனர். இவற்றைத் தவிர தனித்து இயற்றித் தருவோரும், சிறிய நிறுவனங்கள் பலவற்றில் பணிபுரிவோரும் இருக்கின்றனர்.
எப்படியாயினும் மென்பொருளை இயற்ற வல்ல இவ்வொவ்வொருவரின் ஆற்றலையும் கட்டுப்படுத்தக் கூடிய பேராபத்தாய் சட்டப்பூர்வமான தடையாய் மென்பொருள் படைப்புரிமம் (Software Patents) அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இன்றைய தேதியில் மென்பொருள் படைப்புரிமத்திற்கு வழிவகையில்லை என்பது ஆறுதலான செய்தி.
ஆனால் இதனை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெரிய நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. மென்பொருளை உருவாக்கும் ஒருவரைத் தான் இது பாதிக்கிறது எனக் கருத வேண்டாம். கணினியைப் பயன்படுத்தும்
ஒவ்வொருவருக்கும் இது பேராபத்தாய் அமையும்.
மென்பொருளின் ‘நிரல்களுக்கு படைப்புரிமம்’ என்பது இதன் பொருளல்ல. மாறாக மென்பொருள் உருவாக்கத்திற்கு வித்திடும் ‘எண்ணங்களுக்கு/ சிந்தனைகளுக்கு படைப்புரிமம்’ என்பதாகும்.
அதாவது ஒரு மென்பொருள் படைப்புரிமம் என்பது ஒரு குறிப்பிட்ட நிரலின் மீதானது அல்ல. மாறாக ஒரு நிரலில் என்றல்லாது, பல நிரல்களில் – பல்லாயிரக்கணக்கான நிரல்களில் பயன்படுத்திடக் கூடிய எண்ணங்களை
உள்ளடக்கியது. இத்தகைய இடங்களிலெல்லாம் இவை வேறு பல சிந்தனைகளோடு இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இவ்விடயத்தை நடுநிலையோடு நாம் அணுக வேண்டுமானால் இன்று அதிகம் பயன்படுத்தப்படும், குழப்பத்தை விளைவிக்கும் பதமாகத் திகழும் ‘அறிவு சார் சொத்து’ என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்கத் துவங்கவேண்டும்.
ஏனெனில் தங்களுக்குள் பொதுவாக எதையுமே கொண்டிராத பதிப்புரிமம், படைப்புரிமம், வர்த்தக முத்திரை எனும் மூன்றையும் கோர்த்து குழப்புகிறது இப்பதம். இவற்றுக்கிடையே இருக்கும் நூலிழையிலான ஒற்றுமைகளைக் காட்டி
இவற்றை ஒன்றாகக் கருதச் சொல்லும் அறிவுசார் சொத்து எனும் அபத்தத்தை புறந்தள்வதே இதனை அணுகுதற்கான சரியான வழி.
இம்மூன்று குறித்த சட்டங்களும் வெவ்வேறானவை. இவை ஒவ்வொன்றும் எழுப்பும் பொதுவான வாதங்களும் வேறானவை. ஆக பதிப்புரிம சட்டங்களைப் பற்றி தாங்கள் ஏதாவது கற்க நேரிட்டால் அவை படைப்புரிமச் சட்டங்களிலிருந்து வேறானவை எனக் கருத வேண்டும். படைப்புரிம சட்டங்கள் பற்றி வாசிக்க நேரிட்டால் அவையும் பதிப்புரிமச் சட்டங்களும் ஒன்றல்ல எனத் தாங்கள் கருத வேண்டும். இவ்வழியில் தங்களது எண்ணங்கள் அமையுமாயின் அதனடிப்படையில் எழும் தங்களது கருத்துக்களும் சரியாகவே அமையும்.
ஆக, பௌதீகச் சொத்துக்களைப் போல இதனைக் கருதுக எனச் சொல்வதாலும் அதீதமாக பொதுமைப்படுத்தப்பட்டு மக்களை வெவ்வேறான சட்டங்களை ஒன்றாகக் கருத வைப்பதாலும், ‘அறிவு சார் சொத்து’ எனும் இப்பதமானது தீமை பயப்பதாகிறது. பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை உள்ளடக்கியது. படைப்புரிமைச் சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில் அவசியமற்றது.
மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை அறியத் துணை புரிகிறது.
“அறிவுசார் சொத்து” என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் விளம்பரத்திற்கு ஊக்கதொகை வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர். இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு
அம்சத்திலும் அவை மாறுபட்டு விளங்குகின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே மாறுபட்டு நிற்கின்றன.
பதிப்புரிமம் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று. எழுதப்படும்/ பதியப்படும் எதுவுமே பொதுவாக பதிப்புரிமம் பெறுகிறது. அவை நுட்பமாக, ஆழமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் படைப்புரிமமோ ஒருவரது விண்ணப்பத்தினை அடிப்படையாகக் கொண்டு அதற்கென நிறுவப்பட்ட அமைப்பு வழங்குவதாகும்.
படைப்புரிமம் வழங்கப்பட வேண்டுமானால் வெளிப்படுத்தப்பட்ட சிந்தனை புதியதாக பயனுள்ளதாக இதுவரை தெளியப்படாத ஒன்றாக இருத்தல் வேண்டும். பதிப்புரிமத்திற்கும் படைப்புரிமத்திற்கும் உள்ள மற்றொரு வேறுபாடு அவை
அமலில் இருக்கும் கால அளவாகும். பதிப்புரிமத்தின் கால அளவு மிக அதிகமானதாகும். சில நாடுகளில் சில குறிப்பிட்ட விடயங்களில் இவை நூற்றைம்பது ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் படைப்புரிமம் இருபது ஆண்டுகளுக்கானது. இருபது ஆண்டுகள் என்பது மற்ற துறைகளில் எப்படியோ கணினி தொடர்புடைய துறையில் மிகப்பெரியதாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இணையம் என்பது புதிய விடயமாகப் பார்க்கப்பட்டது. ஐபிஎம் கணினிகள் ஏதொ
புதிய பொம்மைகளாக தோன்றிக்கொண்டிருந்தன. வோர்ல்டு வைட் வெப் என இன்றழைக்கப்படும் ஒன்று அன்று கிடையாது. ஆனால் இன்றைய சூழல் நம்மனைவருக்குமே தெரியும்.
யாரோ ஒருவர் ஒரு புதினத்தை இயற்றுகிறார் என வைத்துக் கொள்வோம். அதற்கு பதிப்புரிமம் பெற்றவராகிறார் அவர். இதன் பாதிப்பு எதுவுமே இல்லாத ஒரு சூழலில் ஏதோ ஒரு மலையடிவாரத்தில் அமர்ந்து ஓராண்டு காலத்தில் தாங்களும்
ஒத்த சிந்தனைகளை உள்ளடக்கிய புதினத்தை படைத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இவ்விடயத்தில் அவரது சிந்தகைனையை திருட இயலாத ஒரு மலையடிவார சூழலில் தாங்கள் இருந்ததை வெளிக்காட்டி பதிப்புரிமையைத் தாங்கள்
மீறவில்லை என நிரூபிக்க முடியும்.
ஆனால் படைப்புரிமம் அத்தகையது அல்ல. இது சிந்தனையொன்றின் மீது ஒருவருக்கு இருக்கும் எதேச்சாதிகரத்தைப் பற்றியது. படைப்புரிமம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள சிந்தனைகள், தங்களுடைய சொந்த சிந்தனைகள் எனத்
தங்களால் காட்ட முடிந்தாலும் கூட பயனற்றது. அதனைப் பயன்படுத்தாத வண்ணம் தங்களுக்கு தடை விதிக்கப்படலாம்.
ஆக அறிவு சார் சொத்து என யாராவது தெரிவித்தால் ஒன்று அவர் குழம்பிப்போயிருக்கிறார் அல்லது அதனால் தனிப்பட்ட இலாபங்கள் அவருக்கு கிடைப்பதால் குழப்பவிழைகிறார் என்று கருதலாம். வெற்றிப் பெற்றதாக வெகு சிலரைக் காட்டி மற்றவரை எல்லாம் பாதளத்திற்குள் தள்ளும் இலாட்டரி முறைக்கு ஒப்பாக மென்பொருள் படைப்புரிமத்தை பிரபல பத்திரிக்கை ஒன்று வர்ணித்திருந்தது.
தாங்கள் மென்பொருள் ஒன்றை உருவாக்க விழைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். துரதிருஷ்டவசமாக மென்பொருள் படைப்புரிமத்திற்கு முட்டாள்தனமாக அங்கீகாரம் வழங்கும் நாடொன்றில் வசித்து, சட்டத்துக்கு உட்பட்டு
இத்தொழிலை படைப்புரிம முறைகளுக்கு இணங்கி செய்ய விழைந்தால் என்னவாகும்? தாங்கள் செய்ய வேண்டியது என்ன?
முதலாவது இருக்கக் கூடிய படைப்புரிமங்களை எல்லாம் ஆராய்ந்து எதனை தங்கள் நிரல்களில் இடக்கூடாது எனும் முடிவுக்கு வரவேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் படைப்புரிமத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் அதற்குரிய அலுவலகங்களினால் மிக இரகசியமாக பரிசீலிக்கப்படுபவை. படைப்புரிமங்கள் இன்றோ நாளையோ அடுத்த வருடமோ கூட வழங்கப்படலாம். வழங்கப்படும் போது அச்சிந்தனையின் அடிப்படையில் தங்கள் மென்பொருள் அமைந்திருந்தால் அது தடைக்கு உள்ளாகலாம்.
இது தர்க்க ரீதியான சாத்தியமே என நினைத்துவிட வேண்டாம். இப்படி நிகழந்துள்ளது. 1984 ஆம் வருடம் தரவுகளை சுருக்கும் compress நிரல் இயற்றப்பட்டது. இது LZW தரவு சுருக்க வழிமுறையை ஒழுகியிருந்தது. இதனை அந்நிரலின் ஆசிரியர் ஒரு பத்திரிக்கையின் மூலம் கற்றிருந்தார்.
அந்நேரத்தில் அந்த LZW வழிமுறைக்கு படைப்புரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் 1985 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் படைப்புரிமதாரர் இதனை இனி யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கவில்லை. மாறாக போகட்டும் போகட்டும். பலரும் இதிலிருந்து வெளிவர முடியாதபடிக்கு இவ்வழிமுறையை பயன்படுத்தட்டும். பின்னர் நாம் ஒரு பிடி பிடித்துக் கொள்ளலாம் எனும் வஞ்சக எண்ணம் கொண்டிருந்தார்.
இதனை அறிந்து கொண்ட குனு இயக்கத்தின் வழிகாட்டி ரிச்சர்டு ஸ்டால்மேன் தரவுகளை சுருக்கும் சிறந்த வழிமுறை வேண்டும் என பொதுவில் விண்ணப்பம் வைத்தார். அப்படியான அவர்களின் தேடலின் விளைவாக பலத் தடைகளைக் கடந்து இன்று தரவுகளை சுருக்கப் பயன்படும் gzip வழிமுறை கிடைக்கப்பெற்று அதனைக் கொண்டு அதற்குரிய மென்பொருள் படைக்கப்பட்டது. அதுவே இன்று winzip போன்ற பிற தரவு சுருக்க மென்பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆக தங்கள் நிரலில் தாங்கள் கையாளும் வழிமுறை ஏற்கனவே படைப்புரிமம் பெற்றதா, படைப்புரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதா எனத் தங்களால் தேட இயலாது. வழங்கப்பட்ட படைப்புரிமங்களை மட்டுமே ஒருவரால் பார்க்க முடியும்.ஐரோப்பிய படைப்புரிம அலுவலகத்தில் சில பத்தாயிரங்களை கடந்தும் அமேரிக்காவில் பல நூறு ஆயிரங்களாகவும் இவற்றின் எண்ணிக்கை இருக்கின்றன.ஆக, குறிப்பிட்ட எந்தவொரு நேரத்திலும் தாங்கள் ஒரு படைப்புரிமத்தால்
அச்சுறுத்தப் படுவீர்கள் என்பதே நிதர்சனமான உண்மை. இது நிகழும் போது, இந்த படைப்புரிமத்தை மறுத்துரைப்பதற்கான சட்டரீதியான சாத்தியக் கூறுகளை தங்களால் கண்டெடுக்க முடிந்தால், பலிகடா ஆகாமல் தங்களால் தங்களைக்
காத்துக் கொள்ள இயலும். தாங்கள் அத்தகைய முயற்சியினை மேற்கொள்ளலாம். ஒரு வேளை வெற்றிப் பெற்றால், கண்ணி வெடிகளால் நிரப்பப்பட்ட வயலொன்றில் ஒரே ஒரு வெடியிலிருந்து தப்பித்ததாகுமே தவிர அனைத்திலிருந்தும் அல்ல.
கொசு அடிக்க உதவும் கருவியால் எவ்வாறு மலேரியாவினை ஒழிக்க முடியாதோ அதேபோல், ஒவ்வொரு படைப்புரிமத்திற்கு எதிராக போராடுவதென்பதும் மென்பொருள் படைப்புரிமத்தின் பாதகங்களை அகற்ற அறவே உதவாது. வெகு விரைவிலோ சிறிது காலம் கழித்தோ ஒரு படைப்புரிமம் தங்களின் நிரலை நாசம் செய்யப் போகின்றது.
அமேரிக்க படைப்புரிம அலுவலகம் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட இலட்சம் மென்பொருள் படைப்புரிமங்களை வழங்குகின்றது. நமது தலைச் சிறந்த முயற்சிகளால் கூட இக்கண்ணிவெடிகளை அவை விதைக்கப்படும் வேகத்துக்கு
ஈடுகொடுத்து களைய இயலாது.
கட்டுப்படுத்துகின்றன. ஆனால் படைப்புரிம அமைப்பின் விதிகளின் படி எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் சட்டப்படி செல்லத் தக்கவையே. இவற்றுள் சில வெடிச் சுரங்கங்கள் அகற்றவே இயலாதவை. எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் தீமையானது. மேலும் ஒவ்வொரு மென்பொருள் படைப்புரிமமும் தாங்கள் தங்களின் கணினியினை பயன்படுத்துவதை அநியாயமாகக் படைப்புரிம விதிகள் சரியாக அமல்படுத்தப் படாத, “தவறுகளால்” விளைந்த
படைப்புரிமங்களையே நம்மால் வெல்ல முடியும். மென்பொருள் படைப்புரிமத்தை அனுமதிப்பது எனும் கொள்கைதான் தொடர்புடைய ஒரே தவறு என்கிற போது நம்மால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை.
மென்பொருள் படைப்புரிமங்கள் பூதாகாரமாய் போகும் போது, வளரும் நாடுகள் பயன் அதிகம் மிக்க மென்பொருளை படைக்க முடியாது போய், படைக்கப்பட்ட மென்பொருள்களுக்கு, அதனைப் படைப்பதற்கான உரிமம் பெற்றோருக்கு, கப்பம் கட்டியே காலந்தள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம்.
இருக்கக் கூடிய மென்பொருள் படைப்புரிமங்களையெல்லாம் ஒவ்வொன்றாக அழிப்பது நிரலாக்கத்தை பாதுகாக்காது. படைப்புரிமமானது இனியும் மென்பொருள் உருவாக்குவோரையும் பயனர்களையும் அச்சுறுத்தாது இருக்க, நாம் படைப்புரிம முறையையே மாற்ற வேண்டும்.இவ்விரு வாதங்களுக்கும் இடையே முரண்பாடெதுவும் இல்லை. நாம் குறுகிய கால
விடுதலைக்கும் நீண்ட கால நிரந்தர தீர்வுக்கும் உடனடியாக பணியாற்றத் துவங்கலாம். கவனம் கொடுக்கத் துவங்கினோமேயானால், தனிப்பட்ட மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக பணிபுரியும் அதே நேரத்தில், பிரச்சனையை
முழுமையாகக் களைவதற்குத் தேவையான ஆதரவினைத் திரட்டும் இரட்டிப்பு வேலையையும் செய்ய இயலும்.
“தீயதான” மென்பொருள் படைப்புரிமங்களை, செல்லுபடியாகாத (அல்லது) தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட படைப்புரிமங்களோடு ஒப்பிடுதல் கூடாது. மென்பொருள் படைப்புரிமமொன்றினை வலுவிழக்கச் செய்யும் ஒவ்வொரு முறையும், வலுவிழக்கச் செய்ய முயற்சி செய்வதற்கான நமது திட்டங்கள் பற்றிப் பேசுகிற ஒவ்வொரு
முறையும்,”ஒரு படைப்புரிமத்தின் குறைவு, நிரலாளர்களின் அச்சுறுத்தல்களில் ஒன்று குறைவு. நமது இலக்கோ படைப்புரிமமே இல்லாத நிலை” என நாம் உறுதியாகச் சொல்ல வேண்டும்.
எப்பாடு பட்டாவது மென்பொருள் படைப்புரிமத்தினை இந்தியாவில் புகுத்திவிடவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் 2005 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட படைப்புரிம மசோதாவிலிருந்து மென்பொருள் படைப்புரிமம் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டன(1).
ஆனால் தற்போது படைப்புரிம ஆவணம் என்ற பெயரில் இந்திய அறிவு சார் சொத்து நிறுவனம் கொண்டு வர முற்படும் ஆவணத்திற்கான வரைவில்(2) மறைமுகமாக மென்பொருளுக்கு படைப்புரிமம் வழங்கும் முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது விடயத்தில் மும்பை(3) மற்றும் சென்னையில்(4) நடைபெற்ற பாதிக்கப்படுவோருக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு கட்டற்ற மென்பொருள் இயக்காத்தாரும் குனு/ லினக்ஸ் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்புகளையும் அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்துள்ளனர். இதற்கென தனியான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக இந்திய அறிவுசார் சொத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்முறையும் மென்பொருள் படைப்புரிமம் எனும் பேராபத்து இந்தியாவில் நுழைந்திடாது தடுக்க வேண்டியது நமது கடமை. அதற்கான விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துங்கள். அறிவு தங்கு தடையின்றி அனைவரைக்கும்
கிடைப்பதற்கு போடப்படும் முட்டுக்கட்டைகளை களைய முன்வாருங்கள்.
(இக்கட்டுரை ரிச்சர்டு எம் ஸ்டால்மன் அவர்களின் மென்பொருள் படைப்புரிமம் குறித்த கட்டுரைகள் மற்றும் ஆற்றிய உரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.)
மேற்கோள்கள்:
(1) http://yro.slashdot.org/yro/05/04/20/2311255.shtml?tid=155&tid=219
(2) http://www.patentoffice.nic.in/ipr/patent/DraftPatent_Manual_2008.pdf
(3) http://osindia.blogspot.com/2008/07/stakeholders-meeting-on-draft-patent.html
(4) http://kanimozhi.org.in/kanimozhi/?p=46
ஸ்கைப் உலகின் பல மூளைகளிலும் இருக்கும் உற்றாருடன் கதைக்க பயன்படும் ஒரு தனியுரிம மென்பொருளாகும். இதனைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். கட்டாயமான சூழல் உருவாகும் போது உபுண்டு இயங்கு தளத்தில் அதனை நிறுவும் வழிகள் இங்கே விவரிக்கப்படுகின்றன. இதற்குரிய கட்டற்ற மாற்றாக எகிகா திகழ்கிறது.

மென்பொருள் இருப்பிடம் தெரிவிக்க
உபுண்டு இயங்குதளத்தினை துவக்கிய பிறகு, Alt-F2 கொடுத்து எழும்பும் Run Application சாளரத்தில் கீழ்காணும் வரியை இடவும்,
gksudo gedit /etc/apt/sources.list
(இது பொதிகள் எங்கே கிடைக்கின்றன என உபுண்டுவிற்கு தெரிவிக்கும் வடிவமைப்புக் கோப்பை gedit எனும் பயன்பாட்டைக் கொண்டு தொகுக்க திறக்கும் படி பணிக்கிறது. அக்கோப்பு நிர்வாக உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே தொகுக்க இயலுமாகையால் gksudo உடன் பயன்படுத்தப்படுகிறது.)
கடவுச் சொல் தரும்படி கோரப்படுவீர்கள். தங்கள் பயனர் பெயருக்குரிய கடவுச் சொல்லினைக்கொடுத்ததும்

/etc/apt/sources.list
திறக்கப்படும் கோப்பின் இறுதி வரியாக இதனைச் சேர்க்கவும்.
deb http://download.skype.com/linux/repos/debian/ stable non-free
இவ்வரியே ஒளியூட்டப்பட்டு வலது புறமாகத் தெரியும் திரைக்காட்சியிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாங்கள் முனையத்தினை துவக்கவேண்டும். இதற்கு Applications –> Accesories –> Terminal மூலம் இதனைச் செய்யலாம்.
முனையத்தில் கீழ்காணும் இரண்டு கட்டளைகளை கொடுப்பதன் மூலம் தங்கள் கணினியில் ஸ்கைப்பினை தாங்கள் நிறுவிக் கொள்ளலாம்.

உபுண்டுவில் ஸ்கைப்...
$ sudo apt-get update
பொதிகளின் பட்டியலை புதுப்பிக்க இது உதவுகிறது. கிடைக்கக் கூடிய பொதிகளின் பட்டியலில் skype சேர்க்கப்படும். நிறுவல், நிர்வாகப் பணியாகையால் இவ் ஆணை இடும் போது கடவுச் சொல்லினைத் தரும் படி கோரப்படுவீர்கள்.
$ sudo apt-get install skype
இவ் ஆணை ஸ்கைப் தனை நிறுவிட துணை புரிகிறது. இவ்வகையில் பொதிதனை நிறுவ இணைய இணைப்பு பெற்றிருப்பது அவசியம்.
நிறுவி முடித்ததும் ஸ்கைப்தனை Applications –> Internet –> Skype வழியாக தொடங்கலாம்.
எம்பி3 இசை வடிவ ஆதரவு ஏன் இயல்பாக கிடைக்கப் பெறாது?
கணினியில் திரை இசை பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு இசைகளை எம்பி3 கோப்புகளாகவே பார்த்து பயன்படுத்தி இசைத்து பலருக்கும் பழக்கமாகியிருக்கும். பொதுவாக இன்று பிரபலமாக கிடைக்கப் பெறும் குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் இயல்பிருப்பாக எம்பி3 கோப்புகளை இசைப்பதற்கான ஆதரவு இருக்காது. எம்பி3 படைப்புரிமங்களால் கவரப்பெற்ற கட்டுப்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாகும். சில நாடுகளில் அதனை பயன்படுத்த சட்டம் அனுமதிக்கலாம். சில நாடுகளில் அனுமதி இல்லாது போகலாம். ஆகையால் குனு லினக்ஸ் இயங்கு தள தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து இதற்கான ஆதரவு பெரும்பாலும் இயல்பிருப்பாக கிடைக்காது.
கட்டற்ற ஓஜிஜி இசை வடிவம்
எம்பி3க்கு மாற்றாக கட்டற்ற மென்பொருள் உலகில் பவனி வரும் இசை வடிவத்திற்கு ஆக் அல்லது ஓஜிஜி என்று பெயர். இவ் வடிவத்திற்கான ஆதரவினை அனைத்து குனு லினக்ஸ் இயங்குதளங்களும் இயல்பாகவே அளிக்கின்றன. இதன் தரமும் எம்பி3க்ககு நிகரானதென்றால் மிகையாகாது.
மேலும் எம்பி3 கோப்புகளை ஆக் கோப்பாக மாற்றுதற்கும் பயன்பாடுகள் உள்ளன. அடாசிடி அத்தகைய பயன்பாடுகளில் குறிப்பிடத் தக்க ஒன்று. மேலும் பதிவொலி வட்டொன்றை தாங்கள் கணினிக்குள் இட்டால் குநோம் இடைமுகப்பு கொண்ட இயங்கு தளங்களில் ஆடியோ சிடி ரிப்பர் எனும் பயன்பாடு துவக்கப்பட்டு அதிலுள்ள கோப்புகளை வெளிக்கொணர்ந்து ஆக் வடிவத்தில் காத்து தரும்.
அதெல்லாம் வேண்டாம் எம்பி3 தான் கேக்கணுமா?
பொதுவாக ஜிஸ்ட்ரீமரை பின்பலமாக கொண்டு இயற்றப்பெற்ற ஊடக இயக்கிகளில் ஜிஸ்ட்ரிமர் அளிக்கும் கூடுதல் செருகு பொதிகளை நிறுவிடின் ஒருவரால் எம்பி3 கோப்புகளை குனு லினக்ஸ் இயங்குதளங்களில் இசைக்க இயலும். இச் செருகிகளுக்கு gstreamer-plugins-ugly மற்றும் gstreamer-plugins-bad எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றை தாங்கள் பயன்படுத்தும் இயங்குதளங்களுக்கு ஏற்ற நிறுவற் பயன்பாடுகளைக் கொண்டு நிறுவிக் கொண்டால் தங்களால் எம்பி3 கோப்புகளை கேட்க இயலும்.
ஆகிசையை ஆதரித்து ஒரு வலைப்பதிவு: http://amachu.net/blog/?p=3