Archive for the ‘பறை’ Category
கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் – அறிவியல் நகரம், சென்னை
சென்னை அக்டோபர் 20, “கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்” எனும் கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப் பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள ஆறு பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை முப்பது
மாணவர்கள் மாலை முப்பது மாணவர்கள் என பயிற்சியின் பாங்கு அமைந்திருந்தது.
கலந்து கொண்ட மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகம், வேதியியல், இயற்பியல் கணிதம்,
ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பதற்குத் துணை புரியும் கட்டற்ற மென்பொருள்கள் சில விளக்கப்பட்டு, அவற்றை அவர்களே செய்து பார்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. கணினி வழி தமிழ் அறிமுகமும் தட்டச்சுப் பயிற்சியும்
வழங்கப்பட்டது. மாணவர்களோடு பள்ளி ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு வானவியல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பி. தேவதாஸ்
தொடங்கிவைத்தார். அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் முனைவர் பி. ஐயம்பெருமாள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை மாணவர்களுக்காக இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை & NRCFOSS-AU வின் பாரதி சுப்பிரமணியம் & ஸ்ரீ ராமதாஸ், உபுண்டு தமிழ்க் குழும தொடர்பாளர் தங்கமணி அருண் ஆகியோர் நடத்தினர்.
பி.கு:
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி பள்ளிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உதவிய அறிவியல் நகரத்தின் அலுவலர் ஹேமா,
நிகழ்ச்சிக்கு மடிக்கணினிகள் தேவைப்பட்ட போது தங்களது மடிக்கணினியை தந்துதவிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் சௌமியா கிருஷ்ணன், இராஜேஷ்,
நிகழ்ச்சி குறித்த தங்கள் அலோசனைகளை வழங்கிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் பி. இராமன், தியாகு
ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலந்து கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபுண்டு இயங்குதள வட்டு உள்ளிட்ட ஆவணங்களின் தயாரிப்பிற்கான வளங்களை வழங்கிய கட்டற்ற திறந்த மூல மென்பொருள் வளத்திற்கான தேசிய மையம்,
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி அணுகிய போது அனுமதி தந்து ஊக்கமளித்து உதவிய அறிவியல் நகரத்தின் செயற்குழுவின், தலைவர் பேராசிரியர் எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மென்விடுதலை நாள் விழா, சென்னை
வருடா வருடம் செப்டம்பர் திங்கள் மூன்றாவது சனிக்கிழமை மென்விடுதலை நாளாக கட்டற்ற மென்பொருள்[1] ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது சமயம் உலகம் நெடுகிலும் உள்ள குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் தத்தமது இடங்களில் மென்விடுதலைக் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு
நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.
அதே போல் சென்னை மாநகரத்தில் மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் 19/09/2009, சனிக்கிழமை அன்று – சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுவால், பிர்லா கோளரங்கத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள மென்விடுதலை நாள் விழாவில், விளக்க உரைகளுக்கும் அரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மென்பொருளை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கீழ்க்காணும் சுதந்தரங்கள் அளிக்கப்படுவதை, அரசியல் ரீதியாக உறுதி செய்யவைக்க ஒன்றுபடுவோமாக!
* எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது
சுதந்தரம்).
* நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல்
ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்).
முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
* பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம்.
(மூன்றாவது சுதந்தரம் )
* ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த
மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண்
நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும். (நான்காவது சுதந்தரம்)
டாட்கம்யூனிசப் பிரகடனம்..
பன்னாட்டு முதலாளித்துவத்தை பெரியதொரு மாயை பரிதவிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ‘கட்டற்ற தகவல்’ எனும் இப் பரிதவிப்பால் உலகமயமாக்கலின் அதிகார மையங்கள் அனைத்தும் தங்களுக்குள்ளே அயோக்கியத்தனமானக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு இம்மாயையை விரட்டிட முயற்சிசெய்கின்றன. அது மைக்ரோசாப்டாகட்டும், டிஸ்னியாகட்டும், உலக வர்த்தக மையம் ஆகட்டும், ஐக்கிய அமேரிக்க காங்கிரஸாகட்டும், ஐரோப்பிய கமிஷனாகட்டும் – அனைவரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர்.
இந் நவீன டிஜிட்டல் யுகத்தில் விடுதலைக்காக முழக்கமிடுவோரில் – வழிபறிப்பவன் (Pirate), தற்சார்புடைமைவாதி (Anarchist), கம்யூனிஸ்டு என்று கண்டிக்கப்பட்டு களங்கம் கற்பிக்கப்படாதோர் எங்கே உளர்? இக்களங்கங்களை கற்பித்து வருவோர் அதிகாரத்தில் இருக்கும் கொள்ளைக்காரர்கள் என்பதையே நாம் கண்டு வந்துள்ளோம். மாற்றம் ஒன்றையே தனது நிலைப்பாடாக கொண்ட சமூகத்தில் நியாயத்திற்கு புறம்பான சலுகைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டியே இவர்கள் அனைவரும் “அறிவு சார்” சொத்து என்று இயம்புகின்றனர். அதே சமயம் உலகமயமாக்கலின் அதிகார மையங்கள் அனைத்தாலும், விடுதலைக்கான இவ்வியக்கம் தன்னளவிலேயே பேராற்றல் வாய்ந்தது எனவும் ஏற்கப்பட்டுள்ளது. உலகமனைத்திற்கும் நாம் நமது எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டிய சரியான தருணம் இது. “கட்டற்ற தகவல்” எனும் இப்பரிதவிப்பின் பாலபாடத்தை உலகம் உணர்ந்திட வேண்டி நாம் நமக்கே ஆனதொரு பிரகடனத்தைச் செய்கிறோம்.
உடைமையாளரும் உருவாக்குவோரும்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் காரணமாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகளால், பொருளுடை தொழிற் சமூகத்தின் பரிமாண வளர்ச்சியின் காரணமாக பிறந்த கட்டற்ற தகவலுக்கான இவ்வியக்கம், புதியதொரு சமுதாயக் கட்டமைப்பின் வருகையை உலகமனைத்திற்கும் அறிவிக்கின்றது.
வர்க்கப் போராட்டங்களின் வரலாறொன்றினை இது வரை இருந்து வந்திருக்கும் அனைத்து சமூகங்களின் வரலாறும் நம்முன்னே நிறுத்துகின்றன.
பிரபுக்களும் அடிமைகளும், பாதிரிகளும் பிளெபுக்களும், ஆண்டானும் அடிமையும், வழிசெலுத்துவோரும் வழிசெலுத்தப்படுவோரும், பொருளுடையோரும் பொருளற்றோரும், அதிகாரமுடையோரும் அதிகாரமற்றோரும், ஒரே சொல்லில், ஒடுக்குவோரும் ஒடுக்கப்பட்டோரும், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக தடையேதுமின்றி தொடர்ச்சியாக, மறைமுகமாகவும் நேரடியாகவும் தங்களுக்கிடையே மோதிக் கொண்டுள்ளனர். இம்மோதல்கள் பெரும்பாலும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் புரட்சிகரமான புனருத்தாரணத்திற்கோ, மோதிக்கொள்ளும் இருவர்க்கங்களின் பொதுவான வீழ்ச்சிக்கோ வித்திட்டுள்ளன.
ஐரோப்பிய அதிகாரத்தின் உலகளாவிய விரிவாக்கத்தின் காரணமாக கிளைத்த நவீனத்திடமிருந்து தோன்றிய தொழிற் சமூகமும் வர்க்கப் பகைமைகளை தகர்த்தெரிந்திடவில்லை. மாறாக அது புதிய வர்க்கங்களை தோற்றுவித்தது. ஒடுக்கத்திற்கான புதிய ஏற்பாடுகளை ஏற்படுத்தியது. பழைய வகைப் போராட்டங்களுக்கு பதிலாக புதிய வகைப் போராட்டங்களை முன்வைத்தது. ஆனாலும் பொருளுடைத்தோர் வலுப்பெற்ற இக்காலகட்டம் வர்க்கப் பகைமைகளின் வகைகளை மட்டுப்படுத்தியது. சமூகமானது இருபெரும் வர்க்கங்களாக, பெரும் பகைமை பாராட்டும் இருபெரும் துருவங்களாக, எதிரெதிர்த்துக் கொள்ளும் பொருளுடைத்தோராகவும் பொருளற்றோராகவும் பிரிக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தது.
தொடரும்..
யாவர்க்குமான மென்பொருள் இயக்கம்/ அறக்கட்டளை
உபுண்டு தமிழ் குழுமம் உள்ளிட்ட கட்டற்ற மென்பொருள் தொடர்பான செயல்கள் தரும் உற்சாகத்தினைத் தொடர்ந்து தமிழகத்தில் இம்முயற்சிகளுக்கு பொதுவான செயல் வடிவம் கொடுக்கவும், http://kanimozhi.org.in/kanimozhi/?p=224 பக்கத்தில் உள்ளவற்றை மேற்கொள்ள வேண்டி வளங்கள் வசதிகள் திரட்டிட வேண்டியும், தகவல் தொழில்நுட்பத்தினைப் பொறுத்த வரை கட்டற்ற மென்பொருள் கொள்கையை தழுவியதாக அரசின் நிலைப்பாடு அமைய காரியங்கள் மேற்கொள்ளவும்‘யாவர்க்குமான மென்பொருள் இயக்கம்/ அறக்கட்டளை‘ அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் கொள்கைகளால் உந்தப்பட்ட அதே சமயம் நமது தேவைகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப செயல்படும் இயக்கமாக இது அமையும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புக்கள் கலந்துரையாடல்களின் விளைவாய் இவ்வியக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இவ்வியக்கத்தின் முதற் படைப்பாய் ‘கட்டற்ற மென்பொருள்‘ புத்தகத்தினை காணிக்கையாக்குகிறோம். இம்முயற்சிக்கு தொடக்கம் முதலே உற்ற துணையாய் நிற்கும் ஸ்ரீநிவாஸன், அருண், பாரதி ஆகியோருக்கு நன்றி. இது குறித்த ஆரம்ப கட்ட விவாதங்களுக்கும் செயல்களுக்கும் அடித்தளம் அமைத்துத் தந்த என் ஆர் சி பாஸ் அமைப்பிற்கு நன்றி.
இம்முயற்சி வெற்றிபெற உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்.
‘தன்மொழியாக்கம் – பன்மொழியாக்கம்’ – கட்டற்ற மென்பொருள் மாநாடு – கொச்சின்
நவம்பர் 15, 16 கேரள மாநிரம் கொச்சியில் நடைபெற்ற கட்டற்ற மென்பொருள் மாநாட்டின் ஒரு பகுதியாக ‘தன்மொழியாக்கம் – பன்மொழியாக்கம்’ (http://nfm2008.atps.in/) எனும் தலைப்பில் கோரா மொகந்தி – ஷ்யாம் ஆகியோருடன் கலந்து கொண்டு அரங்கிலிருந்தோருடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இங்கே குறிப்பிடப்படும் விடயங்களுக்கு பலரது பங்களிப்புகள் தேவைப்படுகின்றன.
தொடர்ச்சியாக எவ்விதத்திலாவது பங்களிக்க இயலும், ஏற்பாடு செய்ய இயலும் என்றாலோ, அல்லது குறிப்பிடப்பட்டுள்ள திட்டத்தில் தாங்களோ தாங்கள் சார்ந்த அமைப்போ ஏற்கனவே ஈடுபட்டிருந்தாலோ இங்கே பகிர்ந்து கொள்ளவும்.
பணி இரட்டிப்பும் வீண் விரயமும் நேரா வண்ணம் தொடர்ந்து திட்டங்கள் மேற்கொள்ள இது உதவும்.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கட்டற்ற மென்பொருள் உலகிற்கு நாங்கள் அளித்து வரும் பங்கும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியதாக நாங்கள் கருதுபவற்றையும் இவ்விடத்தே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
குநோம், கேடியி ஆகிய குனு லினக்ஸ் இயங்கு தள பணிச்சூழல்களில் குநோமின் தமிழாக்கப்பணி தொடர்ச்சியாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்து வருகிறது. கேடியி தமிழாக்கம் கடந்த வெளியீடு (4.1) முதற்கொண்டு
குறைந்தபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளது. இப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன எனும் விடயமே நிறைவினைத் தரும் ஒன்றாகும். ஆயினும் இவையெல்லாம் பிழைகளுக்காக சரிபார்க்கப்பட்டு தரமானதாக்கப் படவேண்டியுள்ளன. ஆவணமாக்கம் எனும் விடயம் இன்னும் எட்டிப் பார்க்கப்படாமலே இருக்கிறது.
இன்னும் அதிக அளவிலான தன்னார்வலர்கள் இதன் பொருட்டு தேவைப்படுகிறார்கள். தாம் விரும்பிப் பயன்படுத்தும் குனு லினக்ஸ் பயன்பாட்டை மொழிபெயர்த்தும் உதவலாம். மேலும் இடை முகப்புகளை மொழிபெயர்க்க தொடங்கிய காலங்களில் கணினிக்கு பழக்கப்பட்டோரில், தமிழ் இடைமுகப்பினை விரும்பி பயன்படுத்துவோர் குறைவாகவே இருக்கின்றனர் என்பதை உணர முடிந்தது. ஓபன் ஆபிஸ், பயர்பாக்ஸ் போன்ற பயன்பாடுகள் தங்களது தொடர்ச்சியான பராமரிப்பிற்கு தகுந்தோரை தேடிக்கொண்டிருக்கின்றன.
ஆயினும் தமிழில் ஆவணங்கள் வேண்டும் எனும் எண்ணமும் விளக்கங்கள் தமிழில் கொடுக்கபடுவது நல்லது எனும் எண்ணமும் அதிகம் தென்படவே அத்தகைய முயற்சிகள் மேற்கொண்டு அதில் தோன்றிய படியே பலனும் கிட்டியதெனலாம். கட்டற்ற
மென்பொருளாலால் ஆன இயங்கு தளமான உபுண்டுவிற்கு தமிழிலேயே ஆதரவு தர வேண்டும், குனு/ லினக்ஸ் இயங்குதளமான அதில் தமிழ் தொடர்புடைய தொழில்நுட்ப விடயங்கள் அலசப்படவேண்டும் எனும் நோக்கில் தொடங்கப்பட்ட உபுண்டு தமிழ்
குழுமமும் எண்ணிய படி நகரத் தொடங்கியுள்ளது.
ஆயினும் தமிழில் ஒருவர் தட்டெழுத விரும்பி தட்டச்சுப் பலகையைப் பார்த்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. ஆங்கில வழி தமிழ் தட்டெழுதும் முறையையே கணினியை தீண்டும் வசதி பெற்றிருப்போர் பின்பற்றுகின்றனர். இது கூடாது என்று இணைய ஊடகங்கள், பொது நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிலை முற்றிலும் மாற அந்த அந்த மாநில மொழி தாங்கிய இரு மொழி விசைப்பலகைகள் புழக்கத்திற்கு வர வேண்டும். இதுவே நாளை அனைவரது இல்லத்திலும் கணினி
வரும் போது, சிறு குழந்தையும் தமிழை தட்டிப் பார்க்க கணினியை எட்டிப் பார்க்கும் போது எளிதாக்கும்.
தமிழில் ஆர்வம் கொண்டு மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்தோருக்கும் தடங்களாக இருந்தது / இருப்பது தட்டச்சு பயிற்சி இல்லாமையே ஆகும். மேலும் மொழிப்பெயர்ப்பில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாக விளங்குவது பொதுவான சொற்களை ஏற்படுத்திக் கொண்டு மொழிப்பெயர்ப்பாளர்கள் பயன்படுத்தாது இருப்பது. ஒரே பொருளை உணர்த்தும் இரு வேறு சொற்கள் இருக்கலாம் என்றாலும் தமிழ் இடைமுகப்புகளை ஒருவர் பயன்படுத்த விரும்புகிற போது இவை சிக்கலாகத் தான் இருக்கின்றன. அரசு சார்ந்த சில மொழிபெயர்ப்பு முயற்சிகளும் பணி விரயமாக அமைந்தது வருத்தத்திற்குரியது.
குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அதிக அளவிலான கட்டற்ற மின்னெழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளன. தற்போது இருக்கக் கூடியவை சாதாரண பயன்பாட்டிற்கு போதுமானதாக இருந்தாலும் கலை அம்சம் வாய்ந்த கட்டற்ற
மின்னெழுத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. உபுண்டு போன்ற இயங்குதளங்களில் கிடைக்கும் மின்னெழுத்துக்களும் குறை நிறைந்தவைகளாகவே இருக்கின்றன. இவற்றைக் களைய மின்னெழுத்துப் பயிற்சி வகுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். வருங்காலங்களில் இவை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் டாப்-டாம்-யுனிகோடு என்று பல்வேறு வகை மின்னெழுத்துக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றிட வேண்டிய கட்டற்ற பயன்பாடு தேவைப்படுகிறது. மேலும் தட்டச்சுப் பயிற்சி செய்ய உதவும் ஒரு பயன்பாடும் தேவைப்படுகிறது.
உரையை குரலாக மாற்றிட வேண்டிய பணிகள், தட்டெழுதும் போது பிழைகளைச் சொல்லி சரி செய்ய உதவும் ஏற்பாடு, அச்சில் உள்ளவற்றை இனங்கண்டு உரைகளாக மாற்றும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன், உடல் ஊனமுற்றோரும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்திட ஏதுவாக உருவாக்கப்பட்டிருக்கும் ஓஆர்சிஏ போன்ற பயன்பாடுகள்,
ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெர்க்க உதவும் மொழிபெயர்ப்பு கருவிகள் என செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.
மேலும் குநோம், கே பணிச் சூழல் ஆகிய இரண்டிலும் தமிழ்நாட்காட்டி வசதிகள் சேர்க்கப்பட வேண்டியுள்ளன. கணினிகள் மக்களைச் சென்றடையும் வேகத்தைக் காட்டிலும் கையடக்க மொபைல் கருவிகள் வேகமாக சென்றடைந்து விட்டன என்பது
நிதர்சனம். அத்தகைய கருவிகள் கட்டற்ற மென்பொருளை தாங்கியதாக தமிழ் வசதிகள் தருவதாக இருப்பது இல்லை. மொபைல் கருவிகளில் கட்டற்ற தமிழ் வசதிகள் பற்றி ஆர்வம் செலுத்துவோர் தேவை.
மேலும், யாரோ ஒருவர் பயன்பாடுகளை இயற்றுவார் நாம் காலம் முழுவதும் மொழிபெயர்த்துக்கொண்டே இருப்போம் எனும் நிலை போய் நாமே நமக்குத் தேவையான மென்பொருளை இயற்றுவதோடு பெரிய/ முக்கியத் திட்டங்களுக்கு நம்மிடமிருந்தும் பங்களிப்புகள் வர வேண்டும்.
விக்கிபீடியா, விக்சனரி, கணிமொழி உள்ளிட்ட விடயங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இவையெல்லாம் தமிழில் செய்ய வேண்டும் என்பது ஒரு மலை. கட்டற்று செய்ய வேண்டும் என்பது இன்னொரு மலை. அடிவாரம் தென்படுகிறது.
ஏறத் துவங்க வேண்டும்.
கட்டற்று இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தமையால் “கட்டற்ற மென்பொருள்” என்ற பெயரில் ரிச்சர்டு எம் ஸ்டால்மேன் அவர்களின் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.
இங்கே எம்மால் விடுபட்டிருக்கக் கூடிய தங்கள் கற்பனையில் உள்ள தமிழ் சார்ந்த கட்டற்ற மென்பொருள் திட்டம் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்தவும்.
ஈரோட்டில் அரங்கேறிய இன்டிரிபிட் ஐபக்ஸ்…
உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸின் தமிழ் வடிவம் ஈரோடு ஐடி அசோசியேஸன் சார்பில், நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஒரு நாள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஐடி அஸோசியேஸனின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். உபுண்டு தமிழ் குழுமம்/ சென்னை குனு லினக்ஸ் பயனர் குழு சார்பாக ஸ்ரீராமதாஸ், ஊட்டி பத்மநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தித் தந்தனர்.
கலந்து கொண்டோருக்கு உபுண்டு நிறுவும் முறை, உபுண்டுவில் தமிழ் வசதிகள் செய்து கொள்வது, உபுண்டுவில் இணைய வசதிகள், உபுண்டுவில் பொதிகள் நிர்வாகம், பாடல் – திரைப்படங்கள் கேட்க – பார்க்கப் பயன்படுத்தப்படும் பயன்பாடுகள், குனு/ லினக்ஸ் கோப்பு முறைமை உள்ளிட்ட தலைப்புகளில் செய்முறை விளக்கங்கள் தரப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
- இந்நிகழச்சியில் உபுண்டுவின் நேரடி வெளியீடு பயன்படுத்தப்படாமல் திரையில் தோன்றும் முதல் மொழியே தமிழ் மொழியாகக் கொண்ட மாற்றப்பட்ட வடிவத்தினை நிறுவி பயன்படுத்தியமை. (தொடர்ச்சியாக பங்களித்து வரும் குநோம் உள்ளிட்ட தமிழாக்கக் குழுக்களுக்கு நன்றி.)
- சென்னைக்கு வெளியே நிகழச்சியினை நடத்திட வேண்டும் என நாங்கள் கோரிய போது மிக வேகமாக செயல்பட்டு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நடத்திக் காட்டிய ஈரோடு ஐடி அசோசியேஸன்.
- ஆர்வத்துடன் கலந்து கொண்ட ஈரோடு ஐடி அசோசியேஷன் உறுப்பினர்கள்.
- கற்றது விட்டுப்போகக் கூடாது என்பதற்காக, அதிரடியாக இன்னும் சில வாரங்களுக்குள் கலந்து கொண்டோருக்காக ஈரோடு ஐடி அசோசியேஸன் அறிவித்துள்ள உபுண்டு போட்டி.
கனிவான உபசரிப்போடு இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முன்னின்று உழைத்த திரு. இராஜா, திரு பாலு, திரு ஸ்ரீநிவாஸன், திரு முத்தரசு, திரு மனோகர் உள்ளிட்ட ஈரோடு ஐடி அசோசியேஷனின் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். முழுமையான மன நிறைவை ஏற்படுத்திய நிகழ்வு இது.
இந்நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட மின்னேட்டினைப் பெற்றுக் கொள்ள: http://ubuntu-tam.org/avanam/nigazhchi/2008/nov/erode/
படைப்புரிமமெனும் பேராபத்து…
[உத்தமம் அமைப்பின் மஞ்சரிக்காக எழுதியது - ஆமாச்சு]
கணினியைத் தீண்டாத ஒருவர் இல்லவே இல்லை எனும் நிலை வெகு தூரத்தில் இல்லை. மென்பொருளை உருவாக்கும் ஆர்வமும் ஆற்றலும் இருப்போரும் நம்மிடையே அதிகம் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் நிறுவனம் ஒன்றிடம் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு அதன் வாடிக்கையாளர்களுக்காக மென்பொருளை இயற்றுகின்றனர். இவற்றைத் தவிர தனித்து இயற்றித் தருவோரும், சிறிய நிறுவனங்கள் பலவற்றில் பணிபுரிவோரும் இருக்கின்றனர்.
எப்படியாயினும் மென்பொருளை இயற்ற வல்ல இவ்வொவ்வொருவரின் ஆற்றலையும் கட்டுப்படுத்தக் கூடிய பேராபத்தாய் சட்டப்பூர்வமான தடையாய் மென்பொருள் படைப்புரிமம் (Software Patents) அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இன்றைய தேதியில் மென்பொருள் படைப்புரிமத்திற்கு வழிவகையில்லை என்பது ஆறுதலான செய்தி.
ஆனால் இதனை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று பெரிய நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. மென்பொருளை உருவாக்கும் ஒருவரைத் தான் இது பாதிக்கிறது எனக் கருத வேண்டாம். கணினியைப் பயன்படுத்தும்
ஒவ்வொருவருக்கும் இது பேராபத்தாய் அமையும்.
மென்பொருளின் ‘நிரல்களுக்கு படைப்புரிமம்’ என்பது இதன் பொருளல்ல. மாறாக மென்பொருள் உருவாக்கத்திற்கு வித்திடும் ‘எண்ணங்களுக்கு/ சிந்தனைகளுக்கு படைப்புரிமம்’ என்பதாகும்.
அதாவது ஒரு மென்பொருள் படைப்புரிமம் என்பது ஒரு குறிப்பிட்ட நிரலின் மீதானது அல்ல. மாறாக ஒரு நிரலில் என்றல்லாது, பல நிரல்களில் – பல்லாயிரக்கணக்கான நிரல்களில் பயன்படுத்திடக் கூடிய எண்ணங்களை
உள்ளடக்கியது. இத்தகைய இடங்களிலெல்லாம் இவை வேறு பல சிந்தனைகளோடு இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
இவ்விடயத்தை நடுநிலையோடு நாம் அணுக வேண்டுமானால் இன்று அதிகம் பயன்படுத்தப்படும், குழப்பத்தை விளைவிக்கும் பதமாகத் திகழும் ‘அறிவு சார் சொத்து’ என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்கத் துவங்கவேண்டும்.
ஏனெனில் தங்களுக்குள் பொதுவாக எதையுமே கொண்டிராத பதிப்புரிமம், படைப்புரிமம், வர்த்தக முத்திரை எனும் மூன்றையும் கோர்த்து குழப்புகிறது இப்பதம். இவற்றுக்கிடையே இருக்கும் நூலிழையிலான ஒற்றுமைகளைக் காட்டி
இவற்றை ஒன்றாகக் கருதச் சொல்லும் அறிவுசார் சொத்து எனும் அபத்தத்தை புறந்தள்வதே இதனை அணுகுதற்கான சரியான வழி.
இம்மூன்று குறித்த சட்டங்களும் வெவ்வேறானவை. இவை ஒவ்வொன்றும் எழுப்பும் பொதுவான வாதங்களும் வேறானவை. ஆக பதிப்புரிம சட்டங்களைப் பற்றி தாங்கள் ஏதாவது கற்க நேரிட்டால் அவை படைப்புரிமச் சட்டங்களிலிருந்து வேறானவை எனக் கருத வேண்டும். படைப்புரிம சட்டங்கள் பற்றி வாசிக்க நேரிட்டால் அவையும் பதிப்புரிமச் சட்டங்களும் ஒன்றல்ல எனத் தாங்கள் கருத வேண்டும். இவ்வழியில் தங்களது எண்ணங்கள் அமையுமாயின் அதனடிப்படையில் எழும் தங்களது கருத்துக்களும் சரியாகவே அமையும்.
ஆக, பௌதீகச் சொத்துக்களைப் போல இதனைக் கருதுக எனச் சொல்வதாலும் அதீதமாக பொதுமைப்படுத்தப்பட்டு மக்களை வெவ்வேறான சட்டங்களை ஒன்றாகக் கருத வைப்பதாலும், ‘அறிவு சார் சொத்து’ எனும் இப்பதமானது தீமை பயப்பதாகிறது. பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை உள்ளடக்கியது. படைப்புரிமைச் சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில் அவசியமற்றது.
மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை அறியத் துணை புரிகிறது.
“அறிவுசார் சொத்து” என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் விளம்பரத்திற்கு ஊக்கதொகை வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர். இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு
அம்சத்திலும் அவை மாறுபட்டு விளங்குகின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே மாறுபட்டு நிற்கின்றன.
பதிப்புரிமம் இயல்பாக இருக்கக்கூடிய ஒன்று. எழுதப்படும்/ பதியப்படும் எதுவுமே பொதுவாக பதிப்புரிமம் பெறுகிறது. அவை நுட்பமாக, ஆழமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் படைப்புரிமமோ ஒருவரது விண்ணப்பத்தினை அடிப்படையாகக் கொண்டு அதற்கென நிறுவப்பட்ட அமைப்பு வழங்குவதாகும்.
படைப்புரிமம் வழங்கப்பட வேண்டுமானால் வெளிப்படுத்தப்பட்ட சிந்தனை புதியதாக பயனுள்ளதாக இதுவரை தெளியப்படாத ஒன்றாக இருத்தல் வேண்டும். பதிப்புரிமத்திற்கும் படைப்புரிமத்திற்கும் உள்ள மற்றொரு வேறுபாடு அவை
அமலில் இருக்கும் கால அளவாகும். பதிப்புரிமத்தின் கால அளவு மிக அதிகமானதாகும். சில நாடுகளில் சில குறிப்பிட்ட விடயங்களில் இவை நூற்றைம்பது ஆண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் படைப்புரிமம் இருபது ஆண்டுகளுக்கானது. இருபது ஆண்டுகள் என்பது மற்ற துறைகளில் எப்படியோ கணினி தொடர்புடைய துறையில் மிகப்பெரியதாகும். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இணையம் என்பது புதிய விடயமாகப் பார்க்கப்பட்டது. ஐபிஎம் கணினிகள் ஏதொ
புதிய பொம்மைகளாக தோன்றிக்கொண்டிருந்தன. வோர்ல்டு வைட் வெப் என இன்றழைக்கப்படும் ஒன்று அன்று கிடையாது. ஆனால் இன்றைய சூழல் நம்மனைவருக்குமே தெரியும்.
ஒத்த சிந்தனைகளை உள்ளடக்கிய புதினத்தை படைத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். இவ்விடயத்தில் அவரது சிந்தகைனையை திருட இயலாத ஒரு மலையடிவார சூழலில் தாங்கள் இருந்ததை வெளிக்காட்டி பதிப்புரிமையைத் தாங்கள்
மீறவில்லை என நிரூபிக்க முடியும்.
ஆனால் படைப்புரிமம் அத்தகையது அல்ல. இது சிந்தனையொன்றின் மீது ஒருவருக்கு இருக்கும் எதேச்சாதிகரத்தைப் பற்றியது. படைப்புரிமம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ள சிந்தனைகள், தங்களுடைய சொந்த சிந்தனைகள் எனத்
தங்களால் காட்ட முடிந்தாலும் கூட பயனற்றது. அதனைப் பயன்படுத்தாத வண்ணம் தங்களுக்கு தடை விதிக்கப்படலாம்.
ஆக அறிவு சார் சொத்து என யாராவது தெரிவித்தால் ஒன்று அவர் குழம்பிப்போயிருக்கிறார் அல்லது அதனால் தனிப்பட்ட இலாபங்கள் அவருக்கு கிடைப்பதால் குழப்பவிழைகிறார் என்று கருதலாம். வெற்றிப் பெற்றதாக வெகு சிலரைக் காட்டி மற்றவரை எல்லாம் பாதளத்திற்குள் தள்ளும் இலாட்டரி முறைக்கு ஒப்பாக மென்பொருள் படைப்புரிமத்தை பிரபல பத்திரிக்கை ஒன்று வர்ணித்திருந்தது.
தாங்கள் மென்பொருள் ஒன்றை உருவாக்க விழைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். துரதிருஷ்டவசமாக மென்பொருள் படைப்புரிமத்திற்கு முட்டாள்தனமாக அங்கீகாரம் வழங்கும் நாடொன்றில் வசித்து, சட்டத்துக்கு உட்பட்டு
இத்தொழிலை படைப்புரிம முறைகளுக்கு இணங்கி செய்ய விழைந்தால் என்னவாகும்? தாங்கள் செய்ய வேண்டியது என்ன?
முதலாவது இருக்கக் கூடிய படைப்புரிமங்களை எல்லாம் ஆராய்ந்து எதனை தங்கள் நிரல்களில் இடக்கூடாது எனும் முடிவுக்கு வரவேண்டும். இது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் படைப்புரிமத்திற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் அதற்குரிய அலுவலகங்களினால் மிக இரகசியமாக பரிசீலிக்கப்படுபவை. படைப்புரிமங்கள் இன்றோ நாளையோ அடுத்த வருடமோ கூட வழங்கப்படலாம். வழங்கப்படும் போது அச்சிந்தனையின் அடிப்படையில் தங்கள் மென்பொருள் அமைந்திருந்தால் அது தடைக்கு உள்ளாகலாம்.
இது தர்க்க ரீதியான சாத்தியமே என நினைத்துவிட வேண்டாம். இப்படி நிகழந்துள்ளது. 1984 ஆம் வருடம் தரவுகளை சுருக்கும் compress நிரல் இயற்றப்பட்டது. இது LZW தரவு சுருக்க வழிமுறையை ஒழுகியிருந்தது. இதனை அந்நிரலின் ஆசிரியர் ஒரு பத்திரிக்கையின் மூலம் கற்றிருந்தார்.
இதனை அறிந்து கொண்ட குனு இயக்கத்தின் வழிகாட்டி ரிச்சர்டு ஸ்டால்மேன் தரவுகளை சுருக்கும் சிறந்த வழிமுறை வேண்டும் என பொதுவில் விண்ணப்பம் வைத்தார். அப்படியான அவர்களின் தேடலின் விளைவாக பலத் தடைகளைக் கடந்து இன்று தரவுகளை சுருக்கப் பயன்படும் gzip வழிமுறை கிடைக்கப்பெற்று அதனைக் கொண்டு அதற்குரிய மென்பொருள் படைக்கப்பட்டது. அதுவே இன்று winzip போன்ற பிற தரவு சுருக்க மென்பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆக தங்கள் நிரலில் தாங்கள் கையாளும் வழிமுறை ஏற்கனவே படைப்புரிமம் பெற்றதா, படைப்புரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதா எனத் தங்களால் தேட இயலாது. வழங்கப்பட்ட படைப்புரிமங்களை மட்டுமே ஒருவரால் பார்க்க முடியும்.ஐரோப்பிய படைப்புரிம அலுவலகத்தில் சில பத்தாயிரங்களை கடந்தும் அமேரிக்காவில் பல நூறு ஆயிரங்களாகவும் இவற்றின் எண்ணிக்கை இருக்கின்றன.ஆக, குறிப்பிட்ட எந்தவொரு நேரத்திலும் தாங்கள் ஒரு படைப்புரிமத்தால்
காத்துக் கொள்ள இயலும். தாங்கள் அத்தகைய முயற்சியினை மேற்கொள்ளலாம். ஒரு வேளை வெற்றிப் பெற்றால், கண்ணி வெடிகளால் நிரப்பப்பட்ட வயலொன்றில் ஒரே ஒரு வெடியிலிருந்து தப்பித்ததாகுமே தவிர அனைத்திலிருந்தும் அல்ல.
அமேரிக்க படைப்புரிம அலுவலகம் வருடமொன்றுக்கு கிட்டத்தட்ட இலட்சம் மென்பொருள் படைப்புரிமங்களை வழங்குகின்றது. நமது தலைச் சிறந்த முயற்சிகளால் கூட இக்கண்ணிவெடிகளை அவை விதைக்கப்படும் வேகத்துக்கு
ஈடுகொடுத்து களைய இயலாது.
கட்டுப்படுத்துகின்றன. ஆனால் படைப்புரிம அமைப்பின் விதிகளின் படி எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் சட்டப்படி செல்லத் தக்கவையே. இவற்றுள் சில வெடிச் சுரங்கங்கள் அகற்றவே இயலாதவை. எந்தவொரு மென்பொருள் படைப்புரிமமும் தீமையானது. மேலும் ஒவ்வொரு மென்பொருள் படைப்புரிமமும் தாங்கள் தங்களின் கணினியினை பயன்படுத்துவதை அநியாயமாகக் படைப்புரிம விதிகள் சரியாக அமல்படுத்தப் படாத, “தவறுகளால்” விளைந்த
மென்பொருள் படைப்புரிமங்கள் பூதாகாரமாய் போகும் போது, வளரும் நாடுகள் பயன் அதிகம் மிக்க மென்பொருளை படைக்க முடியாது போய், படைக்கப்பட்ட மென்பொருள்களுக்கு, அதனைப் படைப்பதற்கான உரிமம் பெற்றோருக்கு, கப்பம் கட்டியே காலந்தள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படலாம்.
இருக்கக் கூடிய மென்பொருள் படைப்புரிமங்களையெல்லாம் ஒவ்வொன்றாக அழிப்பது நிரலாக்கத்தை பாதுகாக்காது. படைப்புரிமமானது இனியும் மென்பொருள் உருவாக்குவோரையும் பயனர்களையும் அச்சுறுத்தாது இருக்க, நாம் படைப்புரிம முறையையே மாற்ற வேண்டும்.இவ்விரு வாதங்களுக்கும் இடையே முரண்பாடெதுவும் இல்லை. நாம் குறுகிய கால
விடுதலைக்கும் நீண்ட கால நிரந்தர தீர்வுக்கும் உடனடியாக பணியாற்றத் துவங்கலாம். கவனம் கொடுக்கத் துவங்கினோமேயானால், தனிப்பட்ட மென்பொருள் படைப்புரிமத்துக்கு எதிராக பணிபுரியும் அதே நேரத்தில், பிரச்சனையை
முழுமையாகக் களைவதற்குத் தேவையான ஆதரவினைத் திரட்டும் இரட்டிப்பு வேலையையும் செய்ய இயலும்.
“தீயதான” மென்பொருள் படைப்புரிமங்களை, செல்லுபடியாகாத (அல்லது) தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்ட படைப்புரிமங்களோடு ஒப்பிடுதல் கூடாது. மென்பொருள் படைப்புரிமமொன்றினை வலுவிழக்கச் செய்யும் ஒவ்வொரு முறையும், வலுவிழக்கச் செய்ய முயற்சி செய்வதற்கான நமது திட்டங்கள் பற்றிப் பேசுகிற ஒவ்வொரு
எப்பாடு பட்டாவது மென்பொருள் படைப்புரிமத்தினை இந்தியாவில் புகுத்திவிடவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னர் 2005 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட படைப்புரிம மசோதாவிலிருந்து மென்பொருள் படைப்புரிமம் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டன(1).
ஆனால் தற்போது படைப்புரிம ஆவணம் என்ற பெயரில் இந்திய அறிவு சார் சொத்து நிறுவனம் கொண்டு வர முற்படும் ஆவணத்திற்கான வரைவில்(2) மறைமுகமாக மென்பொருளுக்கு படைப்புரிமம் வழங்கும் முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது விடயத்தில் மும்பை(3) மற்றும் சென்னையில்(4) நடைபெற்ற பாதிக்கப்படுவோருக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு கட்டற்ற மென்பொருள் இயக்காத்தாரும் குனு/ லினக்ஸ் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்புகளையும் அதற்கான காரணங்களையும் எடுத்துரைத்துள்ளனர். இதற்கென தனியான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக இந்திய அறிவுசார் சொத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்முறையும் மென்பொருள் படைப்புரிமம் எனும் பேராபத்து இந்தியாவில் நுழைந்திடாது தடுக்க வேண்டியது நமது கடமை. அதற்கான விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துங்கள். அறிவு தங்கு தடையின்றி அனைவரைக்கும்
கிடைப்பதற்கு போடப்படும் முட்டுக்கட்டைகளை களைய முன்வாருங்கள்.
மேற்கோள்கள்:
(1) http://yro.slashdot.org/yro/05/04/20/2311255.shtml?tid=155&tid=219
(2) http://www.patentoffice.nic.in/ipr/patent/DraftPatent_Manual_2008.pdf
(3) http://osindia.blogspot.com/2008/07/stakeholders-meeting-on-draft-patent.html
(4) http://kanimozhi.org.in/kanimozhi/?p=46
ஆறு மாதங்கள் – கணிமொழி வளர நீங்களும் எழுதலாமே!
கணிமொழி (http://kanimozhi.org.in) – கட்டற்ற மென்பொருள் சார்ந்த
விடயங்களை/ நடப்புகளை தமிழில் கொண்டு வர வேண்டி துவக்கப்பட்ட திட்டம்.
கட்டற்ற யாவருக்குமான கொள்கைகளால் உந்தப்பட்ட இந்த திட்டம் ஆறு
மாதங்களைக் கடந்து தவழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழில் எளிமையாக எழுதத் தெரிந்த எவரும் தங்களுக்கென ஒரு பயனர் கணக்கை
துவக்கி தங்களுக்குத் தெரிந்த கட்டற்ற மென்பொருள் சார்ந்த விடயத்தைப்
பற்றி எழுதத் துவங்கலாம்.
இது வரை பங்களித்து வந்த கணிமொழியின் கட்டுரையாசிரியர்கள்
அனைவருக்கும்(1) நன்றி, பாராட்டுக்கள். உங்களையும் கணிமொழிக்குப்
பங்களிக்க அழைக்கிறோம்.
(1)
1. அகிலன் – எம்ஐடி மாணவர்
2. அன்னபூரணி – இல்லத்தரசி
3. அப்துல் ஹலீம் – தென்கிழக்கிலங்கை பல்கலைக்கழகம்
4. அருண் – உபுண்டு தமிழ் குழும பொறுப்பாளர்
5. பாரதி சுப்ரமணியம் – மிடாஸ் கம்யூனிகேஷன்ஸ்
6. ஸ்ரீ ருத்ரன் – பங்களூரு
7. ஸ்ரீநிவாஸன் – லூகாஸ் டிவிஎஸ்
8. இரமண்ராஜ் – வழக்குரைஞர்
9. ஸ்ரீ ராமதாஸ் – ![]()
10. சௌமியா – முன்னாள் என் ஆர் சி பா ஸ் ஊழியர்
11. தணிகைராஜன் – தற்போதைய பொறுப்பாளர்
முக்திக்கு முக்தி – விடுதலையை உணர்வோம் – கும்பகோணம்
வாழ்வின் முக்திக்கு வழிகாட்டும் குடந்தை மாநகருக்கு மென்பொருள் முக்திக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆம். கட்டற்ற திறந்த மூல மென்வளத்துக்கான தேசிய மையமும் சென்னை குனு லினக்ஸ் பயனர் குழுவும் இணைந்து
செப் 27, 28 தேதிகளில் “விடுதலையை உணர்வோம்” என்ற தலைப்பில் இரண்டு நாள் கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்பினை, தஞ்சை சண்முகா பல்கலைக்கழகத்தின் ஸ்ரீநிவாஸ இராமானுஜ மையம், கும்பகோணத்தில் நடத்தின.
பல்கலைக் கழக மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் கொள்கை துவங்கி குனு லினக்ஸ் இயங்கு தளம் நிறுவும் முறை (உபுண்டு), பொதிகள் பராமரிப்பு, சி, சி++, பேர்ல், பைதான் நிரல்களை ஒடுக்கி இயக்கும் வழிமுறைகள், கிளேட், எரிக் உள்ளிட்ட உருவாக்கக் கருவிகள் அறிமுகம், குனு/ லினக்ஸ்+அபாச்சி+மை எஸ் க்யூ எல்+பிஎச்பி அறிமுகம், ரூபி ஆன் ரெயில்ஸ் அறிமுகம், சப்வர்ஷன் அறிமுகம், பயனர் குழுக்கள் இயங்கும் விதம் உள்ளிட்ட பல விடயங்களில் செய்முறையோடு கூடிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஸ்ரீநிவாஸ இராமனுஜ மையத்தின் கட்டற்ற திறந்த மூல மென்பொருள் குழுமம் துவக்கப்பட்டது. இதன் மூலம் குடந்தை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குனு லினக்ஸ் விழிப்புணர்வினை வருங்காலத்தில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் கொள்ளப்ட்டது. நிகழச்சிக்கான விரிவான ஏற்பாட்டினை மையத்தின் கணினித் துறைத் தலைவர் ஹரி பிரகாஷ் செய்திருந்தார். இராமதாசும் பாஸ்கரும் இவ்விரண்டு நாள் நிகழ்ச்சினை ஒன்றிணைந்து நடத்தினர்.
உபுண்டு ஆசான் திட்டம்
வணக்கம்,
வரும் டிசம்பர் மாதம் தொடங்கி உபுண்டு தமிழ் குழுமம் “உபுண்டு ஆசான் திட்டம்”
எனும் திட்டத்தை அறிமுகப்படுத்த விழைகிறது. இதன்படி உபுண்டு தமிழ்
குழுமத்தை சேர்ந்த ஆசான்கள் தமிழகம் நெடுகிலும் பயணித்து
உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்டு குனு லினக்ஸ் சார்ந்த
பாடங்களை பலதரப்பட்ட மக்களுக்கு புகட்டுவர்.
முதற்கண் இரண்டு விதமான பாடங்களை உபுண்டு தமிழ் குழுமம் வழங்க விரும்புகிறது…
1) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் குனு/ லினக்ஸ்
பயிற்சி வகுப்பு – ஆசிரிய/ மாணவர்களுக்கானது
2) உபுண்டு/ டெபியனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாள் குனு/ லினக்ஸ் பயிற்சி
வகுப்பு – அலுவலர்/ பொதுவானது
தேவைக்கேற்ப இவற்றின் தன்மையை மாற்றிக் கொள்ளலாம். மேலும் கோரும்
நிறுவனத்தை/ அமைப்பைச் சார்ந்து பாடங்கள் ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு
மொழிகளிலும் போதிக்கப்படும்.
இத்திட்டம் பரஸ்பர ஆதாயத்தினை கருதி மேற்கொள்ளப்படுகிறது. உபுண்டு தமிழ்
குழுமம் வருங்காலங்களில் தனது திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் தன்னைத்
தானே சார்ந்திருக்க துணை நிற்கும் ஒரு வழியாகவும் இதனைக் கருதுகிறோம்.
உபுண்டுவினை அடிப்படையாகக் கொண்டு பாடங்கள் எடுக்கும் ஆற்றல்
தங்களுக்கும் இருக்குமாயின் தங்களையும் உபுண்டு ஆசானாக வரவேற்கிறோம்.
தமிழில் எழுதிப் பேசி தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் எளிய ஆற்றலே
இதில் தங்களை இணைத்துக் கொள்ளப் போதுமானது.
மேற்குறிப்பிடப்பட்ட பாடத்திட்டங்களைத் தாண்டி வருங்காலங்கில் நிரலாக்கம்
உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் சேர்க்கவிருப்பம். அத்தகையதை இப்போதே
தங்களால் தர முடியுமானாலும் பெருமகிழ்ச்சி.
குனு லினக்ஸ் பயனர் குழுக்கள், அரசுத் திட்டங்கள், தன்னார்வ அமைப்புகள்,
கல்விக் கூடங்கள், தனியார்/ வர்த்தக நிறுவனங்கள் என அனைவருடனும்
இவ்விடயத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கின்றோம்.
உங்களுக்குத் தெரிந்த கல்விக்கூடங்கள், குனு லினக்ஸ் வசதி தேவைப்படும்
அமைப்புகள் என அனைவருக்கும் இத்திட்டம் பற்றிய அறிவிப்பினை
தெரியப்படுத்துங்கள். தாங்கள் சார்ந்துள்ள அமைப்பில் இத்தகைய
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் amachu@ubuntu.com என்ற
முகவரிக்கு உடன் மடல் எழுதுங்கள். நாங்கள் நாள் குறிக்கத்
தொடங்கிவிட்டோம்.
இது குறித்த விகி பக்கம்:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasan_Thittam
உபுண்டு ஆசான்கள் பற்றி அறிய/ தாங்களும் இணைய விரும்பிடின் பதிய:
http://ubuntu-tam.org/wiki/index.php?title=Ubuntu_Aasangal_Vivaram









