Archive for the ‘விழிப்புணர்வு’ Category
கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள் – அறிவியல் நகரம், சென்னை
சென்னை அக்டோபர் 20, “கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்” எனும் கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப் பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள ஆறு பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை முப்பது
மாணவர்கள் மாலை முப்பது மாணவர்கள் என பயிற்சியின் பாங்கு அமைந்திருந்தது.
கலந்து கொண்ட மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகம், வேதியியல், இயற்பியல் கணிதம்,
ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பதற்குத் துணை புரியும் கட்டற்ற மென்பொருள்கள் சில விளக்கப்பட்டு, அவற்றை அவர்களே செய்து பார்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. கணினி வழி தமிழ் அறிமுகமும் தட்டச்சுப் பயிற்சியும்
வழங்கப்பட்டது. மாணவர்களோடு பள்ளி ஆசிரியர்களும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு வானவியல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பி. தேவதாஸ்
தொடங்கிவைத்தார். அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் முனைவர் பி. ஐயம்பெருமாள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை மாணவர்களுக்காக இந்திய லினக்ஸ் பயனர் குழு சென்னை & NRCFOSS-AU வின் பாரதி சுப்பிரமணியம் & ஸ்ரீ ராமதாஸ், உபுண்டு தமிழ்க் குழும தொடர்பாளர் தங்கமணி அருண் ஆகியோர் நடத்தினர்.
பி.கு:
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி பள்ளிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு உதவிய அறிவியல் நகரத்தின் அலுவலர் ஹேமா,
நிகழ்ச்சிக்கு மடிக்கணினிகள் தேவைப்பட்ட போது தங்களது மடிக்கணினியை தந்துதவிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் சௌமியா கிருஷ்ணன், இராஜேஷ்,
நிகழ்ச்சி குறித்த தங்கள் அலோசனைகளை வழங்கிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் பி. இராமன், தியாகு
ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலந்து கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபுண்டு இயங்குதள வட்டு உள்ளிட்ட ஆவணங்களின் தயாரிப்பிற்கான வளங்களை வழங்கிய கட்டற்ற திறந்த மூல மென்பொருள் வளத்திற்கான தேசிய மையம்,
நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி அணுகிய போது அனுமதி தந்து ஊக்கமளித்து உதவிய அறிவியல் நகரத்தின் செயற்குழுவின், தலைவர் பேராசிரியர் எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
மென்விடுதலை நாள் விழா, சென்னை
வருடா வருடம் செப்டம்பர் திங்கள் மூன்றாவது சனிக்கிழமை மென்விடுதலை நாளாக கட்டற்ற மென்பொருள்[1] ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது சமயம் உலகம் நெடுகிலும் உள்ள குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் தத்தமது இடங்களில் மென்விடுதலைக் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு
நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.
அதே போல் சென்னை மாநகரத்தில் மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் 19/09/2009, சனிக்கிழமை அன்று – சென்னை குனு/ லினக்ஸ் பயனர் குழுவால், பிர்லா கோளரங்கத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள மென்விடுதலை நாள் விழாவில், விளக்க உரைகளுக்கும் அரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மென்பொருளை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கீழ்க்காணும் சுதந்தரங்கள் அளிக்கப்படுவதை, அரசியல் ரீதியாக உறுதி செய்யவைக்க ஒன்றுபடுவோமாக!
* எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது
சுதந்தரம்).
* நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல்
ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்).
முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும்.
* பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம்.
(மூன்றாவது சுதந்தரம் )
* ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த
மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண்
நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
பட்டிருத்தல் வேண்டும். (நான்காவது சுதந்தரம்)
ஆரக்கள்ளின் சன் உட்கொள்கை எழுப்பும் ஐயங்கள்…
ஜாவா தொழில் நுட்பத்தின் காரண கர்த்தாவான சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது. ஐபிஎம் சன்னை வாங்கப் போகிறது என்று செய்திகள் கசிந்து பின்னர் இல்லையென ஆன போது சற்றே பெருமூச்சு விட்டிருக்கையில் இப்படியொரு சேதி! நிற்க.
இத்தகைய கும்பெனி உட்கொள்கைகள் (அக்யூசிஷன்) ஏற்படும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகள் பல இருக்கும் என்ற போதும் – மாடாய் உழைத்து எல்லாம் தந்த தொழிலாளர்களையும் சேர்த்து விலைபேசும் போது – தொழிலாளர்களின் கருத்துக்கள் ஏன் கேட்கப்படுவதில்லை? மாதச் சம்பளம் கிடைத்தால் போதும் கம்பனியை யார் நடத்தினால் என்ன என இவர்களும் ஏன் இருக்கிறார்கள்? தங்களது கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என இவர்கள் ஏன் நினைப்பதில்லை?
ஆரக்கிள் – மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் போன்றே ஒரு தனியுரிம மென்பொருள் நிறுவனம். எப்படி டெபியன் (நான் பயன்படுத்தி வரும் உபுண்டுவை தவிர்த்த காரணம் கீழே விளங்கும்) உள்ளிட்ட கட்டற்ற இயங்குதளங்கள் விண்டோஸுக்கு ஆப்பு வைக்க தொடங்கியுள்ளனவோ அதே போல் ஆரக்கள்ளின் தரவுத் தள ஏக போக சாம்ராஜ்யத்தை அசைத்துக் காட்டியதில் மிகப்பெரிய பங்கு மை எஸ் க்யூ எல் எனும் கட்டற்ற தரவுத் தளத்திற்கு உண்டு.
ஆரக்கிள் – ஜாவா – விண்டோஸ் – வெப்லாஜிக் என்றிருந்த பயன்பாட்டு உருவாக்க தனியுரிம உலக நெறியை தகர்த்த கூட்டணியாகும் குனு/ லினக்ஸ் – அபாச்சி- மை எஸ் க்யூ எல் – பி எச் பி.
சன் மைக்ரோசிஸ்டமும் ஒரு காலகட்டத்தில் தனியுரிம மென்பொருள் ஏகாதிபதியாக கொடி கட்டித் திகழ்ந்து பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதன் படைப்புகளை கட்டற்று செய்வதென முடிவு கொண்டது. இது கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து மை எஸ் க் யூ எல்லை விலைக்கும் வாங்கியது.
வரலாறு இப்படி இருக்க இன்றைய இச்சம்பவம் பல்வேறு வினாக்களை நம்முன்னே எழுப்பி நிற்கின்றது..
- கும்பனிகளால் போஷிக்கப்பட்டு பராமரிக்கப்படும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களுக்கு தொழிலாளர்களாகவும் – தன்னார்வலர்களாகவும் பங்களித்து வருவோர் இத்தகைய சூழலில் எத்தகைய முடிவினை மேற்கொள்வர்? மேற்கொள்ள வேண்டும்?
- ஒரு கும்பனி கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டை ஏற்றொழுகினாலும் – கும்பனி முறையில் உள்ள இக்கொடுக்கல் – வாங்கல் குற்றத்தின் காரணமான – தன்னை அது இழக்க நேரிடும் போது – அது அதன் பங்களிப்பாளர்களக்கு தரும் உத்தரவாதம் தான் என்ன? (தற்சமயம் நான் பங்களித்து வரும் உபுண்டு திட்டமும் ஒருவகையில் இத்தகையது என்கிற போது – எனக்கு நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வியுமாகும் இது – ஏற்கனவே சூசேவை நாவல் வாங்கியதால் ஏற்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன…)
- இவற்றைக் கொண்டு பார்க்கிற போது முற்றிலும் சமூகம் சார்ந்த முறையால் உந்தப்பட்ட கட்டற்ற மென்பொருள் திட்டங்களே மேலானவையாக – கட்டற்ற தன்மைக்கு இறுதி வரை உறுதியளிப்பதாக தோன்றுகிறதே! ஆனால் கும்பனிகளைச் சாராது இவற்றை தொழில் ரீதியாக வெற்றி பெறச் செய்வது எப்படி?
இச்சம்பவத்திற்கே உரியதாக..
- கடந்த சில வருடங்களாக சன் மைக்ரோசிஸ்டம் உலகளாவி மேற்கொண்டு வரும் கட்டற்ற மென்பொருள் திட்டங்களின் நிலை என்னவாகும்? அவற்றின் பிரதி ஆரக்களின் நிலைப்பாடு எப்படி அமையும்?
- மை எஸ் க்யூ எல்லை சன் வாங்கியது.. சன்னை ஆரக்கிள் வாங்கியுள்ளது.. மை எஸ் க்யூ எல்லும் ஆரக்கிள்ளும் கோட்பாட்டு ரீதியாகவும் சரி – தொழில் ரீதியாகவும் எதிரெதிர் படைப்புகள். அப்படியிருக்க ஆரக்கள்ளிடம் விலை போய்விட்ட மை எஸ் க்யூ எல்லின் வருங்காலம் என்ன?
தொடர்புடைய பதிவுகள்:
http://www.pluggd.in/technology/oracle-sun-acquisition-4027/
http://blogs.computerworld.com/oracle_sun_what_happens_to_mysql
கட்டற்ற மென்பொருளை விலைக்கு விற்கலாமா?
மென்பொருளை விநியோகித்திடும் பொருட்டு ஒருவர் அதற்காக விலை கோரக் கூடாது என்பதும், அப்படியே கோரினாலும் அடக்க விலையை ஈடு செய்யப் போதுமான குறைந்த அளவிலேயே அவ்விலை இருத்தல் வேண்டும் என்பதுமே குனு திட்டத்தின் உளப்பாங்கு என்று பலர் நம்புகின்றனர்.
ஆனால் உண்மையில் கட்டற்ற மென்பொருள் விநியோகிப்போரை, அவர்கள் அதிகபட்சம் எவ்வளவு விலை வைத்து விற்க விரும்புகின்றரோ அவ்வளவு விலைக்கோ (அ) அவர்களால் அதிகபட்சம் எவ்வளவு விலை வைத்து விற்க முடியுமோ அவ்வளவு விலைக்கோ விற்குமாறு நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். சற்றே வியப்பூட்டும் விஷயமாக இது தங்களுக்கு தோன்றினால் தொடர்ந்து வாசியுங்கள்.
ஆங்கிலத்தில் பிரி என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. விடுதலையை குறிக்கவும் அது பயன்படலாம் விலையைக் குறிக்கவும் அது பயன்படலாம். பிரி சாப்டுவேர் பற்றி நாம் பேசுகிற போது நாம் விடுதலையைப் பற்றி பேசுகிறோம், விலையைப் பற்றி அல்ல. (பிரி ஸ்பீச், என்று நினைக்கவும் பிரி பீர் அன்று.) குறிப்பாக, நிரலை மாற்றியோ மாற்றாமலோ, இயக்குவதற்கும், மாற்றுவதற்கும், மறுவிநியோகம் செய்வதற்கும் பயனருக்கு சுதந்தரம் உண்டென்று அர்த்தம்.
டாட்கம்யூனிசப் பிரகடனம்..
பன்னாட்டு முதலாளித்துவத்தை பெரியதொரு மாயை பரிதவிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ‘கட்டற்ற தகவல்’ எனும் இப் பரிதவிப்பால் உலகமயமாக்கலின் அதிகார மையங்கள் அனைத்தும் தங்களுக்குள்ளே அயோக்கியத்தனமானக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு இம்மாயையை விரட்டிட முயற்சிசெய்கின்றன. அது மைக்ரோசாப்டாகட்டும், டிஸ்னியாகட்டும், உலக வர்த்தக மையம் ஆகட்டும், ஐக்கிய அமேரிக்க காங்கிரஸாகட்டும், ஐரோப்பிய கமிஷனாகட்டும் – அனைவரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர்.
இந் நவீன டிஜிட்டல் யுகத்தில் விடுதலைக்காக முழக்கமிடுவோரில் – வழிபறிப்பவன் (Pirate), தற்சார்புடைமைவாதி (Anarchist), கம்யூனிஸ்டு என்று கண்டிக்கப்பட்டு களங்கம் கற்பிக்கப்படாதோர் எங்கே உளர்? இக்களங்கங்களை கற்பித்து வருவோர் அதிகாரத்தில் இருக்கும் கொள்ளைக்காரர்கள் என்பதையே நாம் கண்டு வந்துள்ளோம். மாற்றம் ஒன்றையே தனது நிலைப்பாடாக கொண்ட சமூகத்தில் நியாயத்திற்கு புறம்பான சலுகைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டியே இவர்கள் அனைவரும் “அறிவு சார்” சொத்து என்று இயம்புகின்றனர். அதே சமயம் உலகமயமாக்கலின் அதிகார மையங்கள் அனைத்தாலும், விடுதலைக்கான இவ்வியக்கம் தன்னளவிலேயே பேராற்றல் வாய்ந்தது எனவும் ஏற்கப்பட்டுள்ளது. உலகமனைத்திற்கும் நாம் நமது எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டிய சரியான தருணம் இது. “கட்டற்ற தகவல்” எனும் இப்பரிதவிப்பின் பாலபாடத்தை உலகம் உணர்ந்திட வேண்டி நாம் நமக்கே ஆனதொரு பிரகடனத்தைச் செய்கிறோம்.
உடைமையாளரும் உருவாக்குவோரும்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் காரணமாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகளால், பொருளுடை தொழிற் சமூகத்தின் பரிமாண வளர்ச்சியின் காரணமாக பிறந்த கட்டற்ற தகவலுக்கான இவ்வியக்கம், புதியதொரு சமுதாயக் கட்டமைப்பின் வருகையை உலகமனைத்திற்கும் அறிவிக்கின்றது.
வர்க்கப் போராட்டங்களின் வரலாறொன்றினை இது வரை இருந்து வந்திருக்கும் அனைத்து சமூகங்களின் வரலாறும் நம்முன்னே நிறுத்துகின்றன.
பிரபுக்களும் அடிமைகளும், பாதிரிகளும் பிளெபுக்களும், ஆண்டானும் அடிமையும், வழிசெலுத்துவோரும் வழிசெலுத்தப்படுவோரும், பொருளுடையோரும் பொருளற்றோரும், அதிகாரமுடையோரும் அதிகாரமற்றோரும், ஒரே சொல்லில், ஒடுக்குவோரும் ஒடுக்கப்பட்டோரும், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக தடையேதுமின்றி தொடர்ச்சியாக, மறைமுகமாகவும் நேரடியாகவும் தங்களுக்கிடையே மோதிக் கொண்டுள்ளனர். இம்மோதல்கள் பெரும்பாலும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் புரட்சிகரமான புனருத்தாரணத்திற்கோ, மோதிக்கொள்ளும் இருவர்க்கங்களின் பொதுவான வீழ்ச்சிக்கோ வித்திட்டுள்ளன.
ஐரோப்பிய அதிகாரத்தின் உலகளாவிய விரிவாக்கத்தின் காரணமாக கிளைத்த நவீனத்திடமிருந்து தோன்றிய தொழிற் சமூகமும் வர்க்கப் பகைமைகளை தகர்த்தெரிந்திடவில்லை. மாறாக அது புதிய வர்க்கங்களை தோற்றுவித்தது. ஒடுக்கத்திற்கான புதிய ஏற்பாடுகளை ஏற்படுத்தியது. பழைய வகைப் போராட்டங்களுக்கு பதிலாக புதிய வகைப் போராட்டங்களை முன்வைத்தது. ஆனாலும் பொருளுடைத்தோர் வலுப்பெற்ற இக்காலகட்டம் வர்க்கப் பகைமைகளின் வகைகளை மட்டுப்படுத்தியது. சமூகமானது இருபெரும் வர்க்கங்களாக, பெரும் பகைமை பாராட்டும் இருபெரும் துருவங்களாக, எதிரெதிர்த்துக் கொள்ளும் பொருளுடைத்தோராகவும் பொருளற்றோராகவும் பிரிக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தது.
தொடரும்..
ஆக்ஸிஸ் வங்கிக்கு ஆயிரக்கணக்கில் மடல் அனுப்புங்கள்…
ஆக்ஸிஸ் வங்கியில் தங்களுக்கு கணக்கு இருந்து அதன் இணையச் சேவையை பயன்படுத்துகிறீர்களா?
அது மைக்ரோசாப்டுக்கு ஏற்றதாக அதன் உலாவிக்குத் தக்கபடிதான் இருக்கப் போவதாக சொல்கிறது(1).
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்த கப்பம் கட்டி விண்டோஸின் லைசன்ஸ் முறைப்படி பெற்றிருக்க வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய் குறைந்தது காசு பிடிக்கும் அல்லது பைரேட் செய்து பிழைக்க வேண்டும்.
இந்நிலை மாற வேண்டும்.
பொதுப் பயன்பாட்டு சேவைகள் வழங்கும் தளங்கள் யாவும் உலாவி பாரபட்சமின்றி வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே ஆக்ஸிஸ் வங்கியை அதன் தளத்தை பொதுவான நெறிமுறைகளுக்கு இணங்கி – பயர்பாக்ஸ் போன்ற உலாவிக்கும் ஏற்றபடி – குனு லினக்ஸ் பயன்படுத்துவோருக்கு ஏதுவாக இருக்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: ibrm@axisbank.com
(1) – http://www.axisbank.com
பி.கு: இவையெல்லாம் தமிழில் எப்போது கிடைக்கப் போகின்றன? அதையும் கேட்போமா?






