கணிமொழி

கட்டற்ற கணிநுட்பம்

Archive for February, 2009

டாட்கம்யூனிசப் பிரகடனம்..

with one comment

எபன் மாக்லன்

எபன் மாக்லன்

பன்னாட்டு முதலாளித்துவத்தை பெரியதொரு மாயை பரிதவிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. ‘கட்டற்ற தகவல்’  எனும் இப் பரிதவிப்பால் உலகமயமாக்கலின் அதிகார மையங்கள் அனைத்தும் தங்களுக்குள்ளே அயோக்கியத்தனமானக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு இம்மாயையை விரட்டிட முயற்சிசெய்கின்றன. அது மைக்ரோசாப்டாகட்டும், டிஸ்னியாகட்டும், உலக வர்த்தக மையம் ஆகட்டும், ஐக்கிய அமேரிக்க காங்கிரஸாகட்டும், ஐரோப்பிய கமிஷனாகட்டும் – அனைவரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கின்றனர்.

இந் நவீன டிஜிட்டல் யுகத்தில் விடுதலைக்காக முழக்கமிடுவோரில் – வழிபறிப்பவன் (Pirate), தற்சார்புடைமைவாதி (Anarchist), கம்யூனிஸ்டு என்று கண்டிக்கப்பட்டு களங்கம் கற்பிக்கப்படாதோர் எங்கே உளர்?  இக்களங்கங்களை கற்பித்து வருவோர் அதிகாரத்தில் இருக்கும் கொள்ளைக்காரர்கள் என்பதையே நாம் கண்டு வந்துள்ளோம். மாற்றம் ஒன்றையே தனது நிலைப்பாடாக கொண்ட சமூகத்தில் நியாயத்திற்கு புறம்பான சலுகைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டியே இவர்கள் அனைவரும் “அறிவு சார்” சொத்து என்று இயம்புகின்றனர். அதே சமயம் உலகமயமாக்கலின் அதிகார மையங்கள் அனைத்தாலும், விடுதலைக்கான இவ்வியக்கம் தன்னளவிலேயே பேராற்றல் வாய்ந்தது எனவும் ஏற்கப்பட்டுள்ளது. உலகமனைத்திற்கும் நாம் நமது  எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டிய சரியான தருணம் இது. “கட்டற்ற தகவல்” எனும் இப்பரிதவிப்பின் பாலபாடத்தை உலகம் உணர்ந்திட வேண்டி நாம் நமக்கே ஆனதொரு பிரகடனத்தைச் செய்கிறோம்.

உடைமையாளரும் உருவாக்குவோரும்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் காரணமாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகளால், பொருளுடை தொழிற் சமூகத்தின் பரிமாண வளர்ச்சியின் காரணமாக பிறந்த கட்டற்ற தகவலுக்கான இவ்வியக்கம், புதியதொரு சமுதாயக் கட்டமைப்பின் வருகையை உலகமனைத்திற்கும் அறிவிக்கின்றது.

வர்க்கப் போராட்டங்களின் வரலாறொன்றினை இது வரை இருந்து வந்திருக்கும் அனைத்து சமூகங்களின் வரலாறும் நம்முன்னே நிறுத்துகின்றன.

பிரபுக்களும் அடிமைகளும், பாதிரிகளும் பிளெபுக்களும், ஆண்டானும் அடிமையும், வழிசெலுத்துவோரும் வழிசெலுத்தப்படுவோரும், பொருளுடையோரும் பொருளற்றோரும், அதிகாரமுடையோரும் அதிகாரமற்றோரும், ஒரே சொல்லில், ஒடுக்குவோரும் ஒடுக்கப்பட்டோரும், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக தடையேதுமின்றி தொடர்ச்சியாக, மறைமுகமாகவும் நேரடியாகவும் தங்களுக்கிடையே மோதிக் கொண்டுள்ளனர். இம்மோதல்கள் பெரும்பாலும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் புரட்சிகரமான புனருத்தாரணத்திற்கோ, மோதிக்கொள்ளும் இருவர்க்கங்களின் பொதுவான வீழ்ச்சிக்கோ வித்திட்டுள்ளன.

ஐரோப்பிய அதிகாரத்தின் உலகளாவிய விரிவாக்கத்தின் காரணமாக கிளைத்த நவீனத்திடமிருந்து தோன்றிய தொழிற் சமூகமும் வர்க்கப் பகைமைகளை தகர்த்தெரிந்திடவில்லை. மாறாக அது புதிய வர்க்கங்களை தோற்றுவித்தது. ஒடுக்கத்திற்கான புதிய ஏற்பாடுகளை ஏற்படுத்தியது. பழைய வகைப் போராட்டங்களுக்கு பதிலாக புதிய வகைப் போராட்டங்களை முன்வைத்தது. ஆனாலும் பொருளுடைத்தோர் வலுப்பெற்ற இக்காலகட்டம் வர்க்கப் பகைமைகளின் வகைகளை மட்டுப்படுத்தியது. சமூகமானது இருபெரும் வர்க்கங்களாக, பெரும் பகைமை பாராட்டும் இருபெரும் துருவங்களாக, எதிரெதிர்த்துக் கொள்ளும் பொருளுடைத்தோராகவும் பொருளற்றோராகவும் பிரிக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தது.

மூலம்: எபன் மாக்லன்

தொடரும்..

Written by amachu

February 1st, 2009 at 12:18 pm